இந்தியா

'உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி' - என்.வி.ரமணா பின்புலம் என்ன?

'உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி' - என்.வி.ரமணா பின்புலம் என்ன?

webteam

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக என்.வி.ரமணாவின் பெயரை பரிந்துரை செய்துள்ளார், தற்போதைய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே. நீதிபதி என்.வி.ரமணாவின் பின்னணி குறித்து சுருக்கமாக அறிவோம்.

என்.வி.ரமணா, ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பொன்னாபுரம் என்ற கிராமத்தில் 1957ஆம் ஆண்டு ஆகஸ்டு 27-ஆம் தேதி பிறந்தார். ஆந்திராவில் உள்ள சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்ற இவர், 1983-ஆம் ஆண்டு பிப்ரவரி 10-ஆம் தேதி வழக்கறிஞராக பதிவு செய்துகொண்டார்.

தொடர்ந்து பல தீர்ப்பாயங்கள், ஆந்திரா உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என பல தளங்களில் முக்கியமான வழக்கறிஞராக பணியாற்றி வந்த இவர், அரசியல் சட்டப்பிரிவுகள் குற்றவியல் தொழிலாளர் நலச் சட்டம் மற்றும் தேர்தல் தொடர்பான வழக்குகளில் நிபுணராக இருந்தார்.

குறிப்பாக, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் பங்கீட்டு வழக்குகளில் கிருஷ்ணா நதிநீர் தொடங்கி பல்வேறு வழக்குகளில் மிகவும் பிரபலமானவராக அறியப்பட்டவர்.

ஆந்திரா அரசு மற்றும் மத்திய அரசின் பல்வேறு சிறப்பு வழக்கறிஞர் பதவிகளை வகித்து உள்ள ரமணா கடந்த 2000-ம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பிறகு, 2013-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற இவர், அதே ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லி உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், உச்ச நீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ளார்.

'ஆந்திர உயர் நீதிமன்றத்தை சுதந்திரமாக செயல்பட, உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ள என்.வி.ரமணா அனுமதிப்பதில்லை; அரசியல் காழ்ப்புணர்ச்சியின் காரணமாக ஆந்திர அரசின் பல்வேறு திட்டங்களை நீதித் துறையின் மூலமாக அவர் தடுக்கப் பார்க்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுங்கள்' என தற்போதைய தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.ஏ.பாப்டேவிற்கு ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியது, சமீபத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட விவகாரம் என்பது குறிப்பிடத்தக்கது.

- நிரஞ்சன் குமார்