இந்தியா

கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், நிலமோசடி.. நீளும் குற்றங்கள்.. யார் இந்த ரவுடி விகாஸ் துபே?

webteam

காவல்துறையினரை சுட்டுக்கொல்வது மட்டுமல்ல; காவல்நிலையத்தில் வைத்தே பல கொலைகளை செய்த குற்றவாளி விகாஸ் துபே. யார் அவர்? அவரது பின்னணி என்ன? பார்க்கலாம்.

உத்திரப்பிரதேசம் கான்பூரைச் சேர்ந்த விகாஸ் துபே மீது முதன்முதலில் 1990ஆம் ஆண்டு கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதன்பின், பல குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு தன்னை கேங் ஸ்டாராக மாற்றிக்கொண்ட ஒருவர்தான் விகாஸ் துபே. ‌கொலை, கொள்ளை ஆள்கடத்தல், நிலமோசடி என விகாஸ் துபே செய்யாத குற்றங்களே இல்லை எனலாம். அதிலும் குறிப்பாக காவல்நிலையத்தில் வைத்து அவர் நிகழ்த்திய 2 கொலைகள் கொடூரத்தின் உச்சம். 2000ஆம் ஆண்டு கல்லூரி உதவி மேலாளரை காவல்நிலையத்தில் வைத்தே படுகொலை செய்த விகாஸ், அதற்கு அடுத்தாண்டே உத்திரப்பிரதேச அமைச்சர் சந்தோஷ் சுக்லாவையும் காவல்நிலையத்தில் புகுந்து சுட்டுக்கொன்றார். இந்த வழக்கில் நேரடி சாட்சியங்கள் பல இருந்தும் போதிய சாட்சியங்கள் இல்லை என விகாஸ் துபே விடுவிக்கப்பட்டதே அவரது அரசியல் செல்வாக்கிற்கு உதாரணம்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுப‌வர்களில் மொத்த டேட்டாவும் விகாஸின் வசமுள்ளது. அதனால்தான் சிறையில் இருந்தபடியே பல குற்றச்செயல்களை அவர் திட்டமிட்டு அரங்கேற்றியுள்ளார். சிறையில் இருந்தபடியே பஞ்சாயத்து தேர்தலில் கூட அவர் வெற்றிப்பெற்றுள்ளார். அதிரடிப்படை வெளியிட்ட 30 முக்கிய குற்றவாளிகள் பட்டியலில் விகாஸ் துபேவின் பெயரும் உள்ளது. ஆனால், காவல்துறையில் கூட அவருக்கு ஆதரவாக சிலர் உள்ளனர்.

சில நாட்களுக்கு முன் காவல்துறையினர் தன்னை கைது செய்ய வருகிறார்கள் என்பது கூட விகாஸுக்கு முன்கூட்டியே தெரிய வந்துள்ளது. அதனால்,தான் தயாராக இருந்து காவல்துறை அதிகாரி உட்பட 8 பேரை விகாஸும் அவரது கூட்டாளிகளும் படுகொலை செய்துள்ளனர். கொலை செய்ய வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் உறவினர்களை கூட விட்டுவைக்காத குரூர மனம் படைத்த நபர்தான் விகாஸ்.