இந்தியா

"எனக்கு பயமாக இருக்கிறது!"... யார் இந்த திஷா ரவி? - 'டூல்கிட்' வழக்கின் பின்னணி!

webteam

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் களமிறங்கியுள்ள விவசாயிகளுக்கு ஆதரவாக, உலக அளவில் கவனத்துக்குரிய சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரெட்டா தன்பர்க் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்துப் பதிவிட்டு, 'டூல்கிட்' ஒன்றையும் பகிர்ந்திருந்தார். அதைப் பகிர்ந்ததற்காக இப்போது பெங்களூருவைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் திஷா ரவி கைது செய்யப்பட்டிருக்கிறார். இதன் பின்னணியைப் பார்ப்போம்.

குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் வன்முறை வெடித்ததன் பின்னணியில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் இருந்ததாக டெல்லி போலீஸார் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், ட்விட்டரில் வலம்வந்த 'டூல்கிட்' (Toolkit) இதற்கு ஆதாரமாக உள்ளது என தெரிவித்துள்ளனர்.

இந்த டூல்கிட்டை பகிர்ந்துதான் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக வெளிநாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ட்விட்டரில் கருத்து பதிவு செய்தார். அதையே சூழலியல் ஆர்வலர் திஷா ரவி தனது பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திஷாவின் அந்த நடவடிக்கைக்காகவே அவர் மீது தேசத் துரோகம், வன்முறையைத் தூண்டிவிடுவது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பெங்களூருவில் திஷா ரவியை கைது செய்த டெல்லி போலீஸ், டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, கிரேட்டா தன்பெர்க்கின் வாசகங்களில் 2 வரிகளை மட்டுமே திருத்தி, மற்றவர்களுக்கு அனுப்பியதாக நீதிபதியிடம் தெரிவித்தார். அத்துடன், தனது வழக்கில் தானே வாதாட உள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து அவரை 5 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இந்தச் சூழலில்தான், திஷா ரவியைக் கைது செய்ததற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

டூல்கிட் என்பது இணையத்தில் வழிகாட்டும் கருவியாகப் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். இந்த விவகாரத்தைப் பொறுத்தவரையில், இந்தியாவில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் குறித்து வெளிநாட்டவர்களுக்குப் புரிதலை ஏற்படுத்தவும், இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கக் கூடிய வழிமுறைகளையும் உள்ளடக்கிய கூகுள் டாக்குமென்ட்தான் டூல்கிட்டாக பகிரப்பட்டுள்ளது. அதாவது, விவசாயிகள் போராட்டத்தின் பின்னணி மட்டுமின்றி, இந்தப் போராட்டத்துக்கு ஆதரவான கையெழுத்து இயங்கங்களில் பங்கேற்பதற்கான இணைப்புகள் அடங்கிய வழிகாட்டுதல்களும் இடம்பெறும். இந்த டூல்கிட் தான் இப்போது திஷாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு முக்கிய காரணம்.

திஷா ரவி யார்?

திஷா ரவி சூழலியல் செயற்பாட்டாளர். அவர் கல்லூரியில் சேர்ந்த ஆரம்ப காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மீது தனது ஈடுபாட்டை செலுத்த தொடங்கினார். அவரது சமூக வலைதள பக்கத்தை பார்த்தாலே இதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரசாரங்கள், சூழியலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கண்டனங்கள் என்று தனது ப்ரோஃபைல் முழுவதையும் சுற்றுச்சூழலுக்கு ஆதரவான தளமாக பயன்படுத்திக்கொண்டார். திஷாவின் நண்பர்கள் அவரை, Eco-feminists, அதாவது சூழலியல் பெண்ணியவாதி என்றே அழைத்தனர்.

காரணம், அவர் சூழலியலுக்காக மட்டுமின்றி பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கும் குரல் கொடுக்கும் சமூக ஆர்வலராக இருந்தார். பருவநிலை மாற்றம் மற்றும் சைவ உணவு விரும்பியான இவர், தனது ஆர்வத்தின் காரணமாக குட்மில்க் (GoodMylk) நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார். குட் மில்க் என்பது இயற்கை மற்றும் சைவை உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நிறுவனம்.

ஃப்ரைடே ஃபார் ஃப்யூச்சர் (Fridays For Future) என்ற சூழலியல் அமைப்பின் உறுப்பினராகவும் திஷா இருக்கிறார். இந்த ஃப்ரைடே ஃபார் ஃயூச்சர் என்ற சூழலியல் அமைப்பு, கிரெட்டா தன்பெர்க்கால் நிறுவப்பட்டது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தனது பள்ளியில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவதன் மூலம் அவர் இந்த அமைப்பை தொடங்கினார்.

"எங்கள் சங்கங்கள் அனைத்தும் இணையம் - இன்ஸ்டாகிராம் மற்றும் பிற சமூக ஊடகங்கள் மூலம் உருவாக்கப்பட்டன. நாங்கள் பரஸ்பர நண்பர்கள் மூலம் இணைந்தோம். நாங்கள் ஒருவரையொருவர் அறிந்துகொண்டோம். எங்களில் பெரும்பாலானோர் பெண்கள். அவர்களில் யாரையும் நான் இதற்கு முன்பு பார்த்ததில்லை. பெங்களூருவில்தான் முதன்முதலாக இது உருவாக்கப்பட்டது. தற்போது, ஒரே நேரத்தில் மும்பை மற்றும் டெல்லி தொடங்கியுள்ளோம். ஒரே ஒரு நகரத்தில் மட்டும் இதைச் செய்ய நாங்கள் விரும்பவில்லை" என்று பேட்டி ஒன்றில் திஷா கூறியிருந்தார்.

ஃப்ரைடே ஃபார் பியூச்சர் அமைப்பில் தற்போது இந்தியா முழுவதும் சுமார் 150 உறுப்பினர்கள் உள்ளனர். பெங்களூரில் 20 முதல் 30 பேர் வரை செயல்பட்டு வருகின்றனர். இந்தியாவில் இந்த அமைப்பானது, சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்னைகள், பொது இடங்களில் பருவநிலை மாற்றங்களுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை நடத்துவது, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் திட்டங்களுக்கு எதிரான ஆன்லைன் பிரசாரங்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பள்ளிகளுக்குச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவது உள்ளிட்ட செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த அமைப்பின் மூலம் அண்மையில், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் 2020 மார்ச் மாதம் முன்வைத்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு சட்டம் 2020-ஐ எதிர்த்து நூற்றுக்கணக்கான கணக்குகளில் இருந்து மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு, மின்னஞ்சல் பிரசாரம் நடத்தப்பட்டது.

"எங்கள் அமைப்புக்கு ஒரே ஒரு குறிக்கோள் என்று எதுவும் கிடையாது. பருவநிலைக்கான அவரசநிலையை அறிவிக்க வேண்டும் என்பது எங்களது ஆரம்ப கால கோரிக்கையாக இருந்தது. பருவநிலை அவசரநிலையை அறிவித்த நாடுகள் அதன்படி செயல்படவில்லை. பருவநிலை மாற்றம் குறித்த எங்களின் முன்னெடுப்புக்கு பிறகுதான், பருவநிலை நடவடிக்கை மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கு அரசாங்கம் முன்னுரிமை அளிக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் அங்கிருக்கும் சுற்றுச்சூழலுக்கும், பிரச்னைகளுக்கும் தங்குதாற் போலத்தான் கோரிக்கை வைக்கிறோம். எல்லா இடத்திலும் ஒரே கோரிக்கை என்பது சரியாக இருக்காது.

இந்தியாவில் பருவநிலை நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அரசாங்கம் ஒப்புக் கொள்ள வேண்டும். இது ஒரு முக்கியமான பிரச்னை. தனிப்பட்ட முறையில் நாட்டின் மீது எனக்கு பெரிய அளவில் நம்பிக்கை இல்லை. காரணம், சுற்றுச்சூழலுக்கு எதிரான திட்டங்கள், இயற்கை அழிவுகளுக்கு வித்திடும் சட்டங்கள், குறிப்பாக ஊரடங்கின்போது நடந்த காடுகள் அழிப்பு முதலானவை எல்லாம் எனக்கு பயத்தை தருகின்றன. சுற்றுச்சூழல் பிரச்னை தொடர்பாகவும், காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்னையை முன்னெடுத்து செல்லும் எந்த ஓர் அரசியல் கட்சியும் நம் நாட்டில் இல்லை" என்று தீஷா கூறியிருந்தார்.

"நடப்பது மிகவும் வருத்தமாகவும் துரதிர்ஷ்டவசமாகவும் இருக்கிறது" என திஷா ரவியை கைது செய்வது குறித்து ஐக்கிய பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜோசப் ஹூவர் தெரிவித்திருந்தார். பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

- மலையரசு