டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சி முதல்வராக யார் பதவி ஏற்க வேண்டும் என்பதை தீர்மானம் செய்வதில் பல்வேறு சவால்களை சந்திக்கிறது.
முன்னாள் முதல்வர் மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை தோற்கடித்த முன்னாள் பாஜக எம்பி பர்வேஷ் வர்மா டெல்லியின் முதல்வராக வாய்ப்பு இருப்பதாக ஒரு சாரார் கருதுகிறார்கள். அரவிந்த் கெஜ்ரிவால் மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மக்களவை உறுப்பினர் சந்தீப் தீக்ஷித்தையும் பாஜகவின் வர்மா தோற்கடித்துள்ளார். பர்வேஷ் வர்மா முன்னாள் டெல்லி முதல்வர் சாஹிப் சிங் வர்மா மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே சமயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக உள்ள வீரேந்திர சச்தேவா அந்தப் பதவிக்கு வர வேண்டும் என கட்சியில் உள்ள இன்னொரு பிரிவு கருதுகிறது. 27 வருடங்களாக ஆட்சிக்கு வர முடியாத பாஜக, வீரேந்திர சச்தேவா தலைமை ஏற்ற பிறகு வலிமையாக செயல்பட்டு வெற்றியை ஈட்டியது என அவர்கள் கருதுகிறார்கள். 15 வருடங்கள் ஷீலா தீட்சித் ஆட்சி மற்றும் 12 வருடங்கள் அரவிந்த் கேஜ்ரிவால் ஆட்சி நடைபெற்ற நிலையில், நீண்ட இடைவெளிக்கு பிறகு பாஜக டெல்லி சட்டசபை தேர்தலில் வெற்றிக்கனியை சுவைத்துள்ளது. முன்பு சுஷ்மா ஸ்வராஜ், மதன்லால் குரானா மற்றும் சாஹிப் சிங் வர்மா போன்றோர் பாஜக சார்பாக முதல்வர் பதவியில் அமர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பாஜகவின் டெல்லி மக்களவை உறுப்பினர்கள் பலரும் முதல்வர் பதவி தங்களுக்கு கிடைக்க வேண்டும் என கருதுகிறார்கள். குறிப்பாக கிழக்கிந்திய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆதரவை பெற்ற பாடகர் மனோஜ் திவாரி தனக்கு முதல்வர் பதவி கேட்க வேண்டும் என விரும்புகிறார். அதேபோல மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான ராம்வீர் சிங் விதூரி முதல்வர் பதவிக்கு தகுதியானவர் என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.
பாஜக தலைமையே முதல்வர் யார் என்பதை முடிவு செய்யும் என கட்சியின் பல்வேறு தலைவர்கள் வலியுறுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் கருத்துப்படியே இறுதித் தேர்வு அமையும் என அவர்கள் தெரிவித்தனர். இத்தகைய சூழலில் பர்வேஷ் வர்மா வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்துள்ளார். நீண்ட காலத்துக்குப் பிறகு கிடைத்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்த பாஜக தலைமை இதுவரை முதல்வர் வேட்பாளராக பேசப்படாத ஒருவரை தேர்ந்தெடுக்கவும் வாய்ப்பு உளளது என பாஜக தலைவர்கள் தெரிவித்தனர்.
பல்வேறு சமூகங்களுக்கான பிரதிநிதித்துவம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை ஆய்வு செய்து பாஜக தலைமை முடிவு எடுக்கும் என அவர்கள் குறிப்பிட்டனர்.