நிதிஷ் குமார், மோடி pt web
இந்தியா

அடுத்த முதல்வர் யார்? நிதிஷ் கட்சி வெளியிட்ட பதிவு.. உடனே டெலிட் ஆனதால் கிளம்பும் சந்தேகம்! | Bihar

பீகார் முதல்வராக நிதிஷ் குமாரை அறிவித்த ஐக்கிய ஜனதா தள கட்சியின் எக்ஸ் தள பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

Prakash J

பீகார் முதல்வராக நிதிஷ் குமாரை அறிவித்த ஐக்கிய ஜனதா தள கட்சியின் எக்ஸ் தள பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது.

பீகாரில் இரண்டு கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய கள நிலவரப்படி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 200 இடங்களைத் தாண்டி பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் போதுமானது என்ற நிலையில், அந்தக் கூட்டணி அபார வெற்றி பெற்றிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். இதற்கிடையே, அடுத்த முதல்வர் பற்றிய பேச்சும் எழுந்துள்ளது. ஆனால், அதற்கு முன்பே பீகார் முதல்வராக நிதிஷ் குமாரை அறிவித்த ஐக்கிய ஜனதா தள கட்சியின் எக்ஸ் தள பதிவு தற்போது நீக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு முன்பு, நிதிஷின் தலைமையில் பாஜக தேர்தலில் போட்டியிடுவதாக கூறியிருந்தாலும், முதல்வர் வேட்பாளராக நிதிஷ் இருப்பார் என்று அது ஒருபோதும் முறையாக அறிவிக்கவில்லை. இதையடுத்தே, அந்தப் பதிவு சலசலப்பைத் தூண்டியது.

nitishkumar

அந்தப் பதிவில், ‘முன்னோடியில்லாதவர் மற்றும் ஈடு இணையற்றவர். பீகார் முதல்வராக நிதிஷ் குமார் இருந்தார், இருக்கிறார், தொடர்ந்து பதவியில் இருப்பார்" என இன்று பதிவிட்டிருந்தது. இருப்பினும், சில நிமிடங்களுக்குப் பிறகு, அந்தப் பதிவு நீக்கப்பட்டது. முக்கியமாக, பாட்னா முழுவதும் "25 se 30, fire se Nithish" என்று அறிவிக்கும் சுவரொட்டிகள் மற்றும் விளம்பர பலகைகள் காணப்பட்ட பிறகு, இது அரங்கேறியது. இந்த ஊகங்களுக்குப் பின்னால், பாஜகவின் வலுவான வெற்றி உள்ளது. ஆம், இந்த முறை பாஜக, மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இவ்விரு கட்சிகளும் சம எண்ணிக்கையில் (101) போட்டியிட்ட நிலையில், தற்போது பாஜகவின் முன்னிலை எண்ணிக்கையை ஐக்கிய ஜனதா தளத்தால் முந்த முடியவில்லை. இது பாஜக தனது அதிகாரத்தை நிலைநாட்டும் முயற்சியாகக் கருதப்படுகிறது.

இதனால், மகாராஷ்டிராவில் செய்ததுபோலவே, பாஜக தனது தலைவர்களில் ஒருவரைத் தலைமைப் பொறுப்பில் அமர்த்த முயற்சிக்கலாம் என ஊகங்கள் தூண்டப்படுகின்றன. 2024 மகாராஷ்டிரத் தேர்தலில், சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பாஜக தேர்தலைச் சந்தித்தாலும், பாஜகவின் ஆதிக்கப் போட்டியைத் தொடர்ந்து, முதல்வர் பதவி இறுதியில் தேவேந்திர ஃபட்னாவிஸுக்குச் சென்றது. இதேபோல், பீகாரில், துணை முதல்வர் சாம்ராட் சவுத்ரி, உயர் பதவிக்கு வலுவான போட்டியாளராக இருப்பதாக முணுமுணுப்புகள் எழுந்துள்ளன. அதற்கு உதாரணமாய், சிராஜ் பஸ்வானின் லோக் ஜனசக்தியும் நிதிஷுக்கு எதிராகவே உள்ளது.

modi, nitishkumar

இதனால், முதல்வரைத் தீர்மானிக்கும் சக்தியாக பாஜகவின் கையே ஓங்கியுள்ளது. அந்த வகையில், நிதிஷைத் தவிர்த்துவிட்டுக்கூட லோக் ஜனசக்தியுடன் இணைந்து பாஜகவால் ஆட்சியமைக்க முடியும். ஆனால், மத்தியில் பாஜக ஆட்சி நிலைத்திருப்பதற்கு நிதிஷின் ஒரு பங்கும் உள்ளது. ஆகையால் மறுபக்கம், பாஜக அவரையே முதல்வராக தேர்வு என்றும், துணை முதல்வர்களாக பாஜவும், லோக் ஜனசக்தியும் அங்கம் வகிக்கலாம் எனவும் அரசியல் ஆர்வலர்கள் ஆரூடம் கூறுகின்றனர்.

ஆயினும், பீகாரின் அடுத்த முதல்வர் யார் என்பது இன்னும் கொஞ்ச நாட்களுக்குப் பேசுபொருளாகத்தான் இருக்கும். இன்னொரு புறம், கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக முதலமைச்சராக இருக்கும் நிதிஷ், ஒட்டுமொத்தமாகச் சாய்ந்துவிடவில்லை என்றாலும், பாஜகவுக்கு அடுத்தபடியாக அவரது கட்சியே முன்னிலை வகிக்கிறது. இதனால், அவர் மீண்டும் பீகாரில் தனது சக்தியை நிரூபித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.

முதல்வர் யார் என்ற விவகாரத்தில் பாஜகவானது நிதிஷ் குமாருக்கு அழுத்தம் கொடுக்க வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது. ஒன்று கடந்த தேர்தலை விட 40 இடங்கள் ஐக்கிய ஜனதா தளம் பெற்று பெரிய அளவில் எழுச்சி பெற்றுள்ளது. இரண்டாவது முக்கிய விஷயம். மத்தியில் நிதிஷ் குமார் மற்றும் சந்திரபாபு நாயுடு கட்சிகளின் ஆதரவுடன் தான் பாஜக கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. அதனால் விபரீத முடிவை பாஜக எடுக்காது.

நிதிஷ் குமார்

அத்துடன், கொஞ்சம் குடைச்சல் கொடுத்தாலும் ஆர்ஜேடி உடன் கூட்டணி வைக்க நிதிஷ் தயங்க மாட்டார். இது கடந்த கால வரலாறு சொல்லும் செய்தி. அதனால், அடுத்த சில வருடங்களுக்கு பாஜக நிதிஷ் குமாருடன் ஒத்துப் போகும் என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.