இந்தியா

பாண்டமிக் நோய் தொற்று என்றால் என்ன? - கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கம்

பாண்டமிக் நோய் தொற்று என்றால் என்ன? - கொரோனா குறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கம்

webteam

உலக சுகாதார அமைப்பு கொரோனா வைரஸை பாண்டமிக் வகையான கிருமி என வகைப்பட்டுத்தியுள்ளது.

கடந்த மாதம் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவுதை தடுத்து நிறுத்த அதிதீவிர நடவடிக்கைகள் எடுத்தாக வேண்டிய நிலை வந்துவிட்டதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்தது. இது குறித்து அப்போது கருத்து தெரிவித்திருந்த அந்த அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதனாம் கெப்ரிசிஸ், இவ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகள் அதிதீவிர நடவடிக்கைகள் எடுப்பது மூலமே கொரோனா வைரஸ் பரவுவதையும் உயிரிழப்புகளையும் தடுத்து நிறுத்த முடியும் என குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல் கடந்த 6 தேதி ஜெனிவாவில் செய்தியாளர்களைச் சந்தித்த உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அட்னாம், நோயின் தீவிரத்தை உணராமல் பல நாடுகள் மெத்தனமாக இருந்து வருவதாக குற்றம்சாட்டி இருந்தார். இந்நிலையில் கொரோனாவை பாண்டமிக் எனப்படும் உலகளாவிய நோய் தொற்று என உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

பாண்டமிக் என்றால் என்ன?

உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆயிரத்து 623 ஆக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தாக்கத்திற்கு உள்ளானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. சீனாவில் கொரோனா‌ பாதிப்பால் 3 ஆயிரத்து 169 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில நாள்களாக சீனாவில் கொரோனாவால் உயிரிழப்போரின் விகிதம் குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், அங்கு 15 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 11‌ பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையேதான் கொரோனா வைரஸ் பாண்டமிக் வகையில் இருப்பதாக இப்போது உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. பொதுவாக வைரஸ் பரவுவதை மூன்று வகையாக பிரிக்கின்றது மருத்துவ உலகம். அதன்படி எண்டமிக், எபிடெமிக், பாண்டமிக் மூன்றாக பிரித்து பெயரிட்டுள்ளனர்.

இதில் முதல் வகையான எண்டமிக் என்பது காலவரையின்றி ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் பரவக் கூடிய வைரஸ் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இதில் அம்மை மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய்கள் அடங்கும்.

இரண்டாவது எபிடெமிக். இது ஒரு குறிப்பிட்ட காலத்தில் அதிகமான மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கண்டறியப்பட்டுள்ள நோய்க் கிருமியாகும். இவ்வகையான வைரஸ் மழைக்காலத்தில் மட்டுமே தோன்றக் கூடியது. இந்தக் குறிப்பிட்ட காலகட்டத்தில் அதிகப்படியான காய்ச்சல், இருமல், சளி உள்ளிட்ட உபாதைகளை ஏற்படுத்தக் கூடியது. குறிப்பிட்ட சீசன் முடிந்ததும் இக்கருமிகள் தானே மடிந்து விடும்.

பாண்டமிக் என்பதுதான் மூன்றாம் வகை. உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ள பாண்டமிக் இந்த வகையில்தான் வருகிறது. இந்த வைரஸ்கள் உலகம் முழுவதும் ஒரே சமயத்தில் பரவும் தன்மை கொண்டவை. இந்த வகை வைரஸ்களால் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டால், அது அடுத்தடுத்து பரவும் தன்மை கொண்டது. இப்போது உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனா பாண்டமிக் வகையைச் சார்ந்தது என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.