cough-syrup PTI
இந்தியா

இருமல் மருந்து விவகாரம்.. மேலும் 2 மருந்துகளுக்குத் தடை.. சோதனையில் குறைபாடா?

20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததற்கு தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்துதான் காரணம் என்று கூறப்படுவதை அடுத்து, 300 மருந்து தயாரிப்பு ஆலைகளில் தமிழ்நாடு அரசு ஆய்வு நடத்தத் திட்டமிட்டுள்ளது.

Prakash J

20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததற்கு தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்துதான் காரணம் என்று கூறப்படுவதை அடுத்து, 300 மருந்து தயாரிப்பு ஆலைகளில் தமிழ்நாடு அரசு ஆய்வு நடத்தத் திட்டமிட்டுள்ளது.

இருமல் மருந்தைக் குடித்த குழந்தைகள் உயிரிழப்பு

மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் இருமல் மருந்து குடித்து, உடல் நலன் பாதிக்கப்பட்டு, குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், மத்தியப் பிரதேசம் சிந்த்வாரா மாவட்டத்தில் மட்டும் 20 குழந்தைகள் இறந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது இதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. இதே இருமல் மருந்தைக் குடித்த மேலும் பல குழந்தைகள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இதுதொடர்பாக மருத்துவர் பிரவீன் சோனி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் பல குழந்தைகளுக்கு ’கோல்ட்ரிஃப் சிரப்’ இருமல் மருந்தை பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. தவிர, அம்மருந்தைத் தயாரித்த தமிழ்நாட்டைச் சேர்ந்த மருந்து உற்பத்தியாளரான ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தின் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இருமல் சிரப் கொடுக்கப்பட்ட பின்னர் ஐந்து வயதுக்குட்பட்ட பல குழந்தைகள் இறந்ததாகப் புகாரில் கூறப்பட்டுள்ளது, பின்னர் ஆய்வகச் சோதனைகளில் ஆன்டிஃபிரீஸ் மற்றும் பிரேக் திரவங்களில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு நச்சு இரசாயனமான டைதிலீன் கிளைகோல் (DEG) இருப்பது கண்டறியப்பட்டது.

cough syrup

தமிழ்நாடு அரசு ஆய்வு நடத்தத் திட்டம்

இந்த சிரப்பில் 48.6 சதவீதம் டைஎதிலீன் கிளைக்கால் (DEG) இருப்பது கண்டறியப்பட்டது. இது சிறுநீரக செயலிழப்பு மற்றும் உட்கொண்டால் மரணத்தை ஏற்படுத்தும் என்று அறியப்படும் ஒரு நச்சு இரசாயனமாகும். இதன்பேரிலேயே விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. மேலும் மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்ததற்கு தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோல்ட்ரிஃப் இருமல் மருந்துதான் காரணம் என்று கூறப்படுவதை அடுத்து, 300 மருந்து தயாரிப்பு ஆலைகளில் தமிழ்நாடு அரசு ஆய்வு நடத்தத் திட்டமிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மருந்து நிறுவனத்திற்கு சீல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீசன் ஃபார்மசூடிகல்ஸ் என்னும் தனியார் ஆலையில் கோல்ட்ரிஃப் மருந்து தயாரிக்கப்பட்டுவந்தது. இந்த ஆலையில் கடந்த 14 ஆண்டுகளாக தமிழக அரசு சுகாதாரத் துறை ஆய்வு நடத்தவில்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியானதை அடுத்து, அங்கு திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. 2011க்குப் பின் தனது உரிமத்தைப் புதுப்பிக்காத ஸ்ரேசன் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம், சுகாதாரமற்ற நிலையில், முறையான வசதிகளின்றி மருந்துகளைத் தயாரித்துள்ளது ஆய்வின்போது தெரிய வந்தது. இந்த ஆய்வில், மருந்துக்கான மூலப்பொருட்கள் வாங்குதல் முதல் பேக்கிங் வரை 364 முக்கிய விதிமீறல்கள் இருப்பது ஆய்வுக்குப் பிறகு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிரப்பில் 48.6% டையெதிலீன் கிளைக்கால் என்ற நச்சுப் பொருள் கலந்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, இந்த நிறுவனத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

இருமல் மருந்து

மேலும், மருந்து நிறுவன உரிமையாளரான ரங்கநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். மருந்து தர ஆய்வாளர்கள் இரண்டு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அந்த மருந்து நிறுவனத்தை நிரந்தரமாக மூடவும் தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

மேலும் 2 இருமல் மருந்துகளுக்குத் தடை

இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் இருமல் சிரப் மருந்து அருந்திய 22 குழந்தைகள் உயிரிழந்ததற்கு தமிழ்நாடு அரசின் கடும் அலட்சியமே காரணம் என்று மத்திய பிரதேச பொது சுகாதாரத் துறை அமைச்சர் நரேந்திர சிவாஜி படேல் கூறியுள்ளார். வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படும் மருந்துகளை ஆய்வுக்குட்படுத்த வேண்டியது மாநில அரசின் பொறுப்பு என்றும் அமைச்சர் படேல் தெரிவித்துள்ளார். இதற்குப் பதிலளித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் அரசியல் நெருக்கடியால் தமிழகம் மீது குற்றம்சாட்டப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மா.சுப்பிரமணியன்

இதற்கிடையே, கோல்ட்ரிஃப் உடன் சேர்த்து மேலும் 2 இருமல் சிரப் மருந்துகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. RESPIFRESH TR மற்றும் RELIFE ஆகிய 2 இருமல் மருந்துகளும் தடை செய்யப்படுவதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து நாடெங்கும் உற்பத்தி செய்யப்படும் இருமல் மருந்துகளின் தரத்தைச் சோதித்து ஆவணங்களை தணிக்கை செய்ய மத்திய அரசின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மறுபுறம், இந்தியாவில், நச்சுத்தன்மை வாய்ந்த இருமல் மருந்தைக் குடித்ததால் 17 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, நாட்டில் விற்கப்படும் மருந்துகளின் தரச் சோதனையில் ஒழுங்குமுறைக் குறைபாடு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) சுட்டிக்காட்டியுள்ளது. நச்சுத்தன்மை வாய்ந்த இருமல் மருந்துகள் எதுவும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என இந்தியா உறுதிப்படுத்தியதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.