விபத்தில்லாமல் பயணிக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய ஆசையாக இருக்கிறது. ஆனால், எதிர்பாராத விபத்து, அந்நாட்டையே அகிலத்திற்கு தலைப்புச் செய்தியாக்கி விடுகிறது. அப்படியான ஒரு சம்பவம்தான், நமது இந்தியாவை உலுக்கிப் போட்டுள்ளது. குஜராத்திலிருந்து இன்று லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 என்ற விமானம், அடுத்த சில நிமிடங்களிலேயே விபத்துக்குள்ளானது. புறப்பட்ட சில நிமிடங்களிலேயே, அந்த விமானம் மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர்கள் குடியிருப்பில் மோதியது. இந்த விபத்தில், தற்போது வரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விமான விபத்தும் நாட்டிலேயே நிகழ்ந்த மோசமான விபத்துகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இதற்கிடையே, இந்த விமான விபத்து குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், இவ்விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வால், விமானப் பணியில் நீண்ட அனுபவம் கொண்டவர் என DGCA தெரிவித்துள்ளது. மேலும் இவ்விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால் மற்றும் துணை விமானி கிளைவ் குந்தர் ஆகியோர் இயக்கியதாகவும், இருவருக்கும் சேர்த்து 9,300 மணி நேர விமான அனுபவம் உள்ளது என்று சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது.
விமானத்தை இயக்கிய கேப்டன் சுமீத் சபர்வாலுக்கு 8,200 மணி நேர விமான அனுபவமும், துணை விமானி கிளைவ் குந்தருக்கு 1,100 மணி நேர விமான அனுபவமும் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையே, லண்டன் புறப்பட்ட விமானம், விபத்தில் சிக்கப்போவதை அறிந்து விமானி தகவல் கொடுத்துள்ளார். விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விமானியிடம் இருந்து அபாய அழைப்பான MAYDAY CALL சென்றுள்ளது. பயணிகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் கொடுத்ததாகவும், ஆனால் விமானியின் அபாய தகவலை அறிந்து காப்பாற்றுவதற்கு முன்னதாகவே அந்த விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்ததாகவும் கூறப்படுகிறது. டேங்க் முழுவதும் எரிபொருள் இருந்ததால்தான் கீழே விழுந்து பெரும் வெடிவிபத்துக்குள்ளாகி உள்ளது.