இந்தியா

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அந்த 28 பேர் யார் யார்?

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அந்த 28 பேர் யார் யார்?

rajakannan

இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் முதன்முதலாக கேரள மாநிலத்தில் மூவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், அவர்கள் மூன்று பேருக்கும் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை நிறைவடைந்து அவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர். அதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு இனி இந்தியாவில் இருக்காது என்றே கருதப்பட்டது. ஆனால், கடந்த திங்கட்கிழமை வெளியான செய்தி எல்லோருக்கும் அதிர்ச்சியாக அமைந்தது.

டெல்லி மற்றும் ஹைதராபாத்தைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. திங்கட்கிழமை இந்த செய்தி வெளியானது முதலே கொரோனா பாதிப்பு குறித்த அச்ச உணர்வு மக்கள் மத்தியில் எழத் தொடங்கியது. அதற்கேற்ப முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பல மாநிலங்களில் எடுக்கப்பட்டன. பெங்களூரு உள்ளிட்ட பல இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்ட பலர் தனிமை வார்டுகளில் தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

நேற்று வரை கூட கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆகத்தான் இருந்தது. ஆனால், இந்தியாவில் இதுவரை 28 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர், மருத்துவமனைகளுக்கு பல்வேறு வேண்டுகோள்களை விடுத்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசும்போது, “டெல்லியில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் தங்களது மருத்துவமனையில் சிறப்பான தனிமை வார்டுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். தலைநகர் டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிப்புடன் அதிகம் பேர் இருக்க வாய்ப்புள்ளதாக சந்தேகிக்கப்படுவதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஆக்ராவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தாலி நாட்டில் இருந்து வருகை தந்திருந்த சுற்றுலாப் பயணிகள் 21 பேரில் 16 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள், டெல்லியில் உள்ள இந்தோ திபத் எல்லைப் பாதுகாப்பு போலீஸ் படையில் உள்ள தனிமை முகாமில் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்.

விமான நிலையங்களில் இதுவரை 5,89,000 பேர் சோதனை செய்யப்பட்டுள்ளனர். அதில் 15 ஆயிரம் பேர் சிறுவர்கள். அதேபோல், 10 லட்சத்திற்கும் அதிகமானோர் நேபாள எல்லையில் சோதனை செய்யப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 28 பேரின் விவரம்:

  1. ஐரோப்பாவில் இருந்து டெல்லி திரும்பிய 45 வயதுடைய நபர்
  2. ஹைதராபாத்தைச் சேர்ந்த 24 வயதுடைய மென்பொறியாளர். இவர் துபாயில் இருந்து பெங்களூரு வந்து, அங்கிருந்து ஹைதராபாத் வந்தார்.
  3. ஆக்ராவைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு. டெல்லியைச் சேர்ந்த நபர் மூலமாக இந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் அந்த குடும்பத்தினருக்கு பரவியதாக கூறப்படுகிறது.
  4. இத்தாலி நாட்டில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் நகருக்கு சுற்றுலா வந்த 16 பேருக்கு பாதிப்பு
  5. இத்தாலியில் இருந்து சுற்றுலா வந்த பயணிகள் குழுவில் அவர்களுக்கு வழிகாட்டுவதற்காக இருந்த இந்திய டிரைவர்
  6. கேரளாவில் பாதிக்கப்பட்டு வீட்டிற்கு சென்றுள்ள மூன்று பேர்