இந்தியா

சபரிமலையில் பெண்கள் அனுமதிக்கப்படுவது எப்போது?

webteam

சபரிமலையில் 18 ஆம் தேதி முதல் பெண்களுக்கு அனுமதியளிப்பது குறித்து கேரள முதலமைச்சரும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் இன்று ஆலோசனை நடத்துகிறது.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று முன் தினம் பரபரப்பு தீர்ப்பு வழங்கப்பட்டது. அனைத்து வயது பெண்களும் அங்கு சென்று வழிபட அனுமதிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, சபரிமலை கோவிலுக்கு செல்ல பெண்கள் எப்போது அனுமதிக்கப் படுவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் வரும் 17 ஆம் தேதி சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டு 22 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறுகிறது. இதில் பெண்களை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்க வரும் புதன்கிழமை திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகிறார்கள். 

முன்னதாக, இதுபற்றி திருவிதாங்கூர் தேவஸ்தான போர்டு தலைவர் கே.பத்மகுமார், இன்று முதலமைச்சர் பினராயி விஜயனை சந்தித்து பேசுகிறார். அப்போது, சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது பற்றியும், அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றியும் அவர் ஆலோசனை நடத்துவார் என்று தெரிகிறது.