இந்தியா

''ஒரு விதவையாகவே வாழ்வேன்'' - சோனியாவுக்கு எதிரான சுஷ்மாவின் போர்க்கொடி

webteam

சோனியா காந்தி பிரதமராக பதவியேற்கக் கூடாது எனக் கடுமையான எதிர்ப்பை சுஷ்மா ஸ்வராஜ் பதிவு செய்திருந்தார்

2004ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதனையடுத்து அந்தக்கட்சியின் சோனியா காந்தி பிரதமராக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சோனியா காந்திக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார் சுஷ்மா. ஒரு வெளிநாட்டவர் இந்தியாவின் பிரதமராக பதவியேற்பது உணர்வுகளை புண்படுத்துவதாக கூறி கடுமையான எதிர்ப்பை தெரிவித்தார். சோனியா காந்தி பிரதமராக பதவியேற்றால் வெள்ளை உடை உடுத்தி, மொட்டை அடித்து வாழ்நாள் முழுவதும் ஒரு விதவையாகவே வாழ்வேன் என்றும் அவர் கடுமையான எச்சரிக்கை விடுத்தார். 

இது குறித்து கருத்து தெரிவித்திருந்த சுஷ்மா, பலரின் போராட்டங்களுக்குப் பிறகு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதற்குப் பிறகும் இந்தியாவை ஆள ஒரு இந்தியருக்கு தகுதி இல்லாமல், வெளிநாட்டவர் ஆள வேண்டுமென்பது உணர்வுகளை புண்படுத்துவதாக உள்ளது எனத் தெரிவித்தார்.

கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியதால் மன்மோகன் சிங் இந்திய பிரதமராக பதவியேற்றார். சில வருடங்களுக்கு பிறகு, சுஷ்மா ஸ்வராஜிடம் சோனியா காந்தி விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர், சோனியா காந்தி பிரதமராக ஆனால் நான் சொன்னதை இப்போதும் செய்து எதிர்ப்பு தெரிவிப்பேன் எனக்கூறினார்.

1996ம் ஆண்டு பெல்லாரி தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார் சுஷ்மா. தோல்வி குறித்து கருத்து தெரிவித்த அவர், ''சுதந்திர இந்தியாவில் ஒரு வெளிநாட்டவர் பிரதமராவது என்பது ஒட்டுமொத்த இந்தியர்களின் தோல்வி. அதனால் தான் நான் சோனியாகாந்தியை எதிர்த்து போட்டியிட்டேன். நான் போர்க்களத்தில் தோற்றேன். ஆனால் போரில் வென்றேன்'' எனத் தெரிவித்தார்.