இந்தியா

நாடாளுமன்ற விவாதத்திற்காக 35 ஆயிரத்திற்கு புத்தகங்கள் வாங்கிய ஜெட்லி 

நாடாளுமன்ற விவாதத்திற்காக 35 ஆயிரத்திற்கு புத்தகங்கள் வாங்கிய ஜெட்லி 

webteam

மாநிலங்களவையில் நடந்த ஒரு விவாதத்திற்கு முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி 35ஆயிரம் ரூபாய் செலவு செய்தது தெரிய வந்துள்ளது. 

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உடல்நல குறைவால் இன்று காலமானார். இவர் பிரதமர் மோடி தலைமையிலான முந்தைய மத்திய அரசில் நிதி அமைச்சராக பணியாற்றினார். அத்துடன் வாஜ்பாய் தலைமையிலான மத்திய அரசில் சட்ட அமைச்சராக பணியாற்றினார். இவர் மத்திய அரசில் அமைச்சராக இருந்தப் போது பல முக்கிய சட்டங்களை இயற்ற உதவியாகயிருந்திருக்கிறார். குறிப்பாக கட்சித் தாவல் தொடர்பான 91ஆவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் இவர் சட்ட அமைச்சராக இருந்த போதுதான் திருத்தப்பட்டது. 

மத்திய அரசில் இல்லாத போதும் அருண் ஜெட்லி சிறப்பான பங்கு ஆற்றியுள்ளார். இவர் 2004ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சி காலத்தில் மாநிலங்களையில் எதிர்க்கட்சித் தலைவராக அருண் ஜெட்லி இருந்தார். அந்தச் சமயத்தில் 2011ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சௌமித்ரா சென் நீதிபதி பதவியிலிருந்து நீக்கும் விவாதம் நடைபெற்றது. 

இந்த விவாதத்தில் கலந்து கொள்ள அருண் ஜெட்லி மாநிலங்களவைக்கு ஒரு புத்தக குவியலுடன் வந்தார். அப்போது நாடாளுமன்ற வளாகத்தில் குழுமியிருந்த பத்திரிகையாளர்களிடம் அருண் ஜெட்லி, “இந்த விவாதத்திற்கு தயாராக 35ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்தேன்” எனத் தெரிவித்தார். வழக்கறிஞரான அருண் ஜெட்லி நீதிபதி நீக்கம் தொடர்பான விவாதத்தில் பங்கேற்க பல முன்னாள் சட்ட விவாதங்கள் மற்றும் சட்ட நுனுக்கங்களை அறிந்து பேச தயாரானார். இதன்மூலம் அவர் நாடாளுமன்ற விவாதங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளித்திருந்தார் என்பது நன்றாக தெரியவந்துள்ளது.