WhatsApp Web Users Alert! Government Warns Against Leaving Accounts Logged In AI
இந்தியா

WhatsApp Web பயன்படுத்துகிறீர்களா? உஷார்! சைபர் மோசடி அபாயம்! மத்திய அரசு எச்சரிக்கை!

WhatsApp Web பயன்படுத்துகிறீர்களா? ஒவ்வொரு முறையும் லாக் அவுட் செய்ய வேண்டும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது. சைபர் குற்றங்களைத் தடுக்க மத்திய அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்களைப் பார்க்கலாம்!

PT WEB

செய்தியாளர்: துர்கா தேவி சரவணன்

அலுவலகம் உள்ளிட்ட பொது கணினிகளில் WhatsApp Web கணக்கை லாக் இன் செய்துவிட்டு பின்னர், அதனை லாக் அவுட் செய்யாமல் விட்டுச் செல்வதால், தனிப்பட்ட தகவல்கள் திருடப்படவும், கணக்கு தவறாகப் பயன்படுத்தப்படவும் வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.

WhatsApp Web Security Alert: Government Advises Users to Log Out

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C), இதுதொடர்பாகப் பயனர்களுக்கு முக்கிய அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, அலுவலகக் கணினிகள், சைபர் கஃபேக்கள், ஹோட்டல்கள் மற்றும் பொது இடங்களில் உள்ள கணினிகளில் WhatsApp Web பயன்படுத்திய பிறகு, ஒவ்வொரு முறையும் கட்டாயம் லாக் அவுட் செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

WhatsApp Web-ல் உள்நுழைந்த பிறகு, பிரவுசர் டேப் அல்லது விண்டோவை மூடினாலும் சில நேரங்களில் கணக்கு தொடர்ந்து லாக்-இன் நிலையிலேயே இருக்கலாம். இதை மற்றவர்கள் பயன்படுத்தி, தனிப்பட்ட மெசேஜ்கள், தொடர்பு எண்கள் மற்றும் குழு உரையாடல்களைப் பார்க்க முடியும். மேலும், கணக்கின் உரிமையாளரைப் போலவே மற்றவர்களுக்கு மெசேஜ்களையும் அனுப்ப முடியும்.

இதன் மூலம் மோசடி செய்பவர்கள், அந்தக் கணக்கின் உரிமையாளருக்கு ஏற்கனவே அறிமுகமான நண்பர்கள், உறவினர்கள் மற்றும் சக ஊழியர்களைத் தொடர்புகொண்டு மோசடியில் ஈடுபட வாய்ப்புள்ளது.

WhatsApp Web Security Alert: Government Advises Users to Log Out

மத்திய அரசின் எச்சரிக்கை!

பொது அல்லது பகிரப்பட்ட கணினிகளில் WhatsApp Web பயன்படுத்துவதைத் தவிர்ப்பதே சிறந்தது என I4C அறிவுறுத்தியுள்ளது. தவிர்க்க முடியாத சூழலில், நம்பகமான கணினியில் பயன்படுத்திய பிறகு, அதிலிருந்து வெளியேறுவதற்கு முன்பு WhatsApp கணக்கைக் கட்டாயம் கைமுறையாக லாக் அவுட் செய்ய வேண்டும்.

மேலும், WhatsApp Web வழியாக ரகசியமான தகவல்களைப் பகிர வேண்டாம் என்றும், தாங்கள் அனுப்பாத மெசேஜ்கள் அல்லது தொடர்புகளிடமிருந்து வரும் எதிர்பாராத பதில்கள் போன்ற சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகளைக் கவனிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினியின் இயங்குதளம், பிரவுசர் மற்றும் பாதுகாப்பு மென்பொருள்களைப் புதுப்பித்த நிலையில் வைத்திருப்பதுடன், சந்தேகத்திற்குரிய பதிவிறக்கங்களையும் நம்பகமற்ற செயலிகளையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக WhatsApp-ன் தாய் நிறுவனமான Meta-விடம் கேள்விகள் எழுப்பப்பட்டும், இதுவரை பதில் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, WhatsApp Web பயன்படுத்தும்போது சிறிய கவனக்குறைவுகூடப் பெரிய சைபர் மோசடிக்கு வழிவகுக்கலாம். குறிப்பாக, பொது அல்லது பகிரப்பட்ட கணினிகளில் பயன்படுத்திய பிறகு லாக் அவுட் செய்வதை ஒருபோதும் மறக்கக் கூடாது. உங்கள் தனிப்பட்ட தகவல்களையும் WhatsApp கணக்கையும் பாதுகாப்பாக வைத்திருக்க, மத்திய அரசின் இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றுவது அவசியமாகக் கருதப்படுகிறது.