சமூக தளங்களில் சிறார்களை பாதிக்கும் ஆபாசமான பதிவுகளை தடுக்கும் நடவடிக்கைகளுக்கு வாட்சப் உள்ளிட்ட நிறுவனங்கள் ஒத்துழைக்க மறுப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமூக ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் பரவி வரும் ஆபாச பதிவுகள் சிறார்கள் உள்ளிட்டோரை பாதிப்பதாக விமர்சனங்கள் இருந்து வருகின்றன. இதையடுத்து இது போன்ற பதிவுகளை நீக்கவும் அவற்றை பரப்புவதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு 14 எம்.பி.க்களை கொண்ட குழுவை அமைத்திருந்தார்.
இந்நிலையில் அக்குழு ஆபாச பதிவுகளை தடுப்பது தொடர்பாக பல்வேறு அமைப்புகள் மற்றும் அமைச்சகங்களுடன் ஆலோசனை நடத்தியது. அப்போது குழு முன் ஆஜரான மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சக அதிகாரிகள் வாட்சப் உள்ளிட்ட நிறுவனங்கள் என்கிரிப்ஷன் என்ற பாதுகாப்பு முறையை தாங்கள் கையாள்வதை சுட்டிக்காட்டி அரசுடன் ஒத்துழைக்க மறுப்பதாக தெரிவித்துள்ளனர்.
சிறார்களை பாதிக்கும் ஆபாச பதிவுகளை தடுக்கும் விஷயத்தில் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் மாநிலங்களவை குழு முன் தெரிவித்துள்ளனர்.