இந்தியா

பொது இடங்களில் புர்காவை கழட்டினால் தாக்கப்படுவீர்கள் - வாட்ஸ் அப் குரூப் பகிரங்க மிரட்டல்

ஜா. ஜாக்சன் சிங்

"முஸ்லிம் பெண்கள் பொது இடங்களில் புர்காவை கழட்டினால் கடுமையாக தாக்கப்படுவீர்கள்" என்று வாட்ஸ் அப் குரூப் ஒன்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்திருப்பது அதிர்ச்சியடைய செய்துள்ளது.

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் பூதாகரமானதை அடுத்து அம்மாநிலத்தில் உள்ள சில முஸ்லிம் அமைப்புகள் தங்கள் மதத்தைச் சேர்ந்த பெண்களை கட்டாயம் புர்கா, ஹிஜாப் அணியுமாறு வலியுறுத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், 'முஸ்லிம் டிஃபென்ஸ் ஃபோர்ஸ்' (muslim defence force) என்ற பெயரில் இயங்கும் வாட்ஸ் அப் குழு ஒன்றில் அண்மையில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது.

அதில், "மங்களூரூவில் உள்ள வணிக வளாகங்களுக்கு செல்லும் முஸ்லிம் பெண்கள் புர்கா அணிந்தபடி சில விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களை நாங்கள் ஏற்கனவே எச்சரித்து அனுப்பி இருக்கிறோம். இனி இதுபோன்ற செயல்களில் முஸ்லிம் பெண்கள் ஈடுபடுவதை பார்த்தால், அவர்கள் அங்கேயே தாக்கப்படுவார்கள். முஸ்லிம் இளம்பெண்களின் பெற்றோர் தங்கள் மகள்கள் கல்லூரிக்கு செல்லும் போதும் பொது இடங்களுக்கு செல்லும் போதும் அவர்களை கண்காணிக்க வேண்டும். ஒருவேளை, உங்கள் மகள்கள் பொது இடங்களில் புர்கா அணியாமல் இருந்தால் அவர்கள் தாக்கப்படுவது உறுதி" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, முஸ்லிம் உரிமைகளை காக்கும் அமைப்பு என்ற பெயரில் இயங்கும் ஒரு வாட்ஸ் அப் குரூப்பானது, "பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் புர்காவை கழட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும்" எனவும் எச்சரித்துள்ளது.

இதனிடையே, இதுகுறித்து தகவலறிந்த மங்களூர் காவல் ஆணையர் சஷில் குமார், சம்பந்தப்பட்ட வாட்ஸ் அப் குழுக்களில் விடுக்கப்பட்ட மிரட்டல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், பொது இடங்களில் முஸ்லிம் பெண்கள் புர்காவை கழட்டாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு அவர்களின் பெற்றோரை அறிவுறுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.