uddhav thackeray | Shiv Sena  uddhav thackeray
இந்தியா

பாஜகவின் வெற்றியைவிடப் பேசப்பட வேண்டியது உத்தவ் சேனையின் தோல்வி… ஏன்?

அஜித் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ், ஷிண்டே பிரிவு சிவசேனையைக் காலப்போக்கில் பாஜக உண்டு செரிக்கும். நாட்டின் பணக்கார மாநிலத்தின் பெரிய கட்சியாக உருவெடுக்கும் அதன் நெடுநாள் கனவுக்கு இது உத்வேகம் கொடுக்கும்.

சமஸ்

இந்திய மாநிலங்கள் ஒன்றின் தேர்தல் என்ற எல்லைக்கு எப்போதுமே அப்பாற்பட்டது மஹாராஷ்டிர சட்டமன்றத் தேர்தல். அரசியல்ரீதியாக பிரதமர் பதவிக்கு அடுத்து, இந்தியாவில் அதிகாரம் மிக்க பதவி மஹாராஷ்டிரத்தின் முதல்வர் நாற்காலி!

நாட்டின் வணிகத் தலைநகரும் அதிக மக்கள்தொகையைக் கொண்ட நகரமுமான மும்பையைத் தன்வசம் மஹாராஷ்டிரம் வைத்திருப்பதும் இதற்கு முக்கியமான ஒரு காரணம். இந்தியாவின் 14% ஜிடிபியையும், 38.9% நேரடி வரி வசூலையும் தங்கள் மாநிலம் கொண்டிருக்கும் பெருமை மராத்தியர்களிடம் உண்டு. மராத்தியர்களின் வாழ்விலும் இது பிரதிபலிக்கிறது. இந்திய அளவில் ஒருவரின் சராசரி தனிநபர் வருமானம் ரூ.1.4 லட்சம் என்றால், மஹாராஷ்டிரத்தில் இது ரூ.2.2 லட்சம்; இந்திய அளவில் ஒருவரின் சராசரி ஆயுள் காலம் 70 வயது என்றால், மஹாராஷ்டிரத்தில் இது 73 வயது.

தேசியக் கட்சிகள் நாடு முழுக்க தங்கள் அரசியல் வாகனத்தை ஓட்ட எரிபொருள் நிரப்பிக்கொள்வதற்கான பிரதான களமாக மஹாராஷ்டிரத்தைப் பார்க்கின்றன. ஆண்டுக்கு ரூ.6.12 லட்சம் கோடிக்கு மஹாராஷ்டிரம் போடும் பட்ஜெட் உத்ராகண்ட், இமாசல பிரதேசம், அருணாசல பிரதேசம், அஸாம், மணிப்பூர், மேகாலயா, மிஸோரம், நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம் ஆகிய 10 மாநிலங்களின் பட்ஜெட்டுக்கு இணையானது. பிரஹன்மும்பை மாநகராட்சியின் பட்ஜெட் பல சிறிய மாநிலங்களைக் காட்டிலும் அதிகமானது.

பாஜக பல தசாப்தங்களாக மஹாராஷ்டிரத்தைக் குறிவைத்துச் செயல்பட்டது. அக்கட்சியின் சிந்தாந்த தலைமையகமான நாக்பூர் அமைந்திருக்கும் மாநிலம் அதுவென்றாலும், ஆர்எஸ்எஸ்ஸின் நூறாண்டுகளுக்குப் பிறகும், தனித்து ஆட்சியமைக்கும் பெரும்பான்மையை பாஜகவுக்கு மராத்தியர்கள் தரவில்லை. மதவுணர்வுக்கு இணையாக பிராந்தியவுணர்வும், மொழியுணர்வும், சாதியவுணர்வும் அலைமோதும் களத்தில் ஒரு கலவைத்தன்மையின் மூலம் சமநிலை பேண காங்கிரஸே முதன்மையான தேர்வாக அவர்களுக்கு அமைந்தது. அதற்கு அடுத்த நிலையில் உள்ளூர் சக்தியாக உருவெடுத்த சிவசேனை இருந்தது. 1994 வரை காங்கிரஸ் தனித்து ஆட்சியில் இருந்த மாநிலம் இது; இதற்கு இரு தசாப்தங்களுக்குப் பிறகு வரையும்கூட தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியில் இருந்தது.

நேரெதிராக 288 இடங்களைக் கொண்ட சட்டசபையில், நான்கில் ஒரு பங்கு எண்ணிக்கையைக்கூட 2014 வரை வெல்ல முடியாத கட்சியாக இருந்தது பாஜக; பாபர் மசூதி இடிப்புக்குப் பிறகு நடந்த 1995 தேர்தலில் சிவசேனையுடன் கூட்டணி அமைத்து 65 இடங்களை வென்றதே பாஜகவின் உச்ச வெற்றியாக இருந்தது. மோடி அலையின் விளைவாக 2014 தேர்தலில் முதல் முறையாக 122 இடங்களை வென்றது. அடுத்து 2019 தேர்தலில் 105 இடங்களை வென்றது. இப்போது 2024 தேர்தலில் 132 இடங்களை வென்றிருக்கிறது.

மாநிலத்தின் நான்கு பெரிய கட்சிகளில் இரண்டை உடைத்து, அவற்றோடு கூட்டணி; மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சியதிகாரம், பகாசுர பணப் பலத்தோடு போட்டியிட்டாலும், பாஜக கூட்டணி இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறும் என்பதை எவரும் எதிர்பார்க்கவில்லை. பதிவான வாக்குகளில் 50%க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதோடு, மொத்தமுள்ள 288 இடங்களில் 235 இடங்களை பாஜக கூட்டணி வென்றது (வெற்றிவீதம் 81.6%). பாஜக வரலாற்றில் இது எப்படி உச்சமோ அப்படி ஒட்டுமொத்தமாகவே காங்கிரஸ் கூட்டணி 46 இடங்களுக்குள் சுருண்டதும், 16 இடங்களை மட்டுமே கட்சியால் வெல்ல முடிந்ததும் காங்கிரஸின் வரலாற்றிலேயே மோசமான வீழ்ச்சி. மஹாராஷ்டிரத்தை மூன்றாவது முறையாகத் தொடர்ந்து இழப்பது காங்கிரஸுக்கு இன்றைய சூழலில் பெரும் இழப்பு.

ஐந்து மாதங்களுக்கு முன் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மாநிலத்தின் 48 தொகுதிகளில் இதே காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களை வென்றிருந்த சூழலில், இப்போதைய சரிவை வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீதான சந்தேகத்தோடு இணைத்துப் பேசும் எதிர்க்கட்சிகளின் பார்வைக்கு வெளியே வந்துவிட்டால் இந்த முடிவு சொல்லும் செய்திகள் மிகுந்த கவனத்துக்குரியவை. பாஜக எதிர்ப்பு ஒன்று மட்டுமே எல்லாத் தேர்தல்களுக்கும் எதிர்க்கட்சிகளுக்கான வாகனம் ஆகிவிட முடியாது என்பதும், காலத்துக்கேற்ப சித்தாந்தரீதியாகப் புதுப்பித்துக்கொள்ளவில்லை என்றால், கட்சிகள் உயிர்த்திருக்க முடியாது என்பதும் அவற்றில் முக்கியமானவை.

ஆறு மாதங்களுக்குள் நடந்த இரு தேர்தல்கள் எப்படி இத்தகு பாரதூர முடிவுகளைப் பிரதிபலிக்கின்றன? இந்தக் கேள்விதான் மிக அடர்த்தியானது.

இரட்டை என்ஜின் சர்கார் எனும் பெயரால் மஹாராஷ்டிரத்துக்குச் சென்ற பத்தாண்டுகளில் மத்திய அரசு கொண்டுவந்த திட்டங்கள்; வெளிவேலைக்குச் செல்லாத வீட்டுப் பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கும் லட்கி பஹன் யோஜனா; காங்கிரஸ் கூட்டணி பிரதானமாக நம்பியிருந்த மராத்தா – மஹர் – முஸ்லிம் ஓட்டுகளுக்கு மாற்றாக ஏனைய சமூக ஓட்டுகளை ஒருங்கிணைத்தது இவையெல்லாம் பாஜக கூட்டணியின் வெற்றிக்கான காரணங்களாகப் பேசப்பட்டாலும்கூட மக்கள் விரும்பும் கதையாடலை காங்கிரஸ் கூட்டணியால் உருவாக்க முடியாததே அதன் பிரதானமான சறுக்கல்.

துப்பாக்கிச்சூட்டில் ஒரு முறை வெடிக்கப் பயன்படுத்தப்பட்ட தோட்டாவை இன்னொரு முறை எப்படிப் பயன்படுத்த முடியாதோ, தேர்தலில் அப்படி ஒருமுறை வெற்றிகரமாகப் பயன்படுத்தப்பட்ட பிரச்சாரத்தை இன்னொரு முறை பயன்படுத்த முடியாது.

சரத் பவார், உத்தவ் தாக்கரே இருவர் மீதும் மக்களவைத் தேர்தலின்போது ஓர் அனுதாபம் இருந்ததை என்னுடைய பயணத்தின்போது பார்த்து நானே எழுதியிருக்கிறேன். சென்ற தேர்தலோடு வாக்களர்கள் இடையே அனுதாபம் வடிந்துவிட்டிருந்தது. அரசமைப்புச் சட்டத்தை பாஜக நாசமாக்கிவிடாமல் பாதுகாக்க காங்கிரஸுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி பிரச்சாரம் மேற்கொண்டார். மீண்டும் அரசமைப்புச் சட்டப் புத்தகத்தோடு தேர்தல் கூட்டங்களுக்கு ராகுல் வந்ததை எவரும் ரசிக்கவில்லை. மஹாராஷ்டிரத்தை பாஜக வஞ்சிக்கிறது என்று காங்கிரஸ் கூட்டணியினர் பேசினார்களே தவிர, வலுவான ஒரு முன்மொழிவை அவர்களால் முன்வைக்க முடியவில்லை. குறிப்பாக, பாஜக இந்தத் தேர்தலை சித்தாந்தரீதியாக எதிர்கொள்ளும் வியூகத்தைத் தீவிரமாகக் கையில் எடுத்தபோது, எதிரே காங்கிரஸ் கூட்டணியால் உறுதியாக முன்னகர முடியவில்லை. 2024 மக்களவைத் தேர்தலுக்கும் 2024 மஹாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலுக்கும் இடையிலான பெரும் வேறுபாடு: பாஜக இந்தத் தேர்தல் களத்தை முழுமையாக இந்துத்துவக் களம் ஆக்கியது!

பாஜக, சிவசேனை; காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் எனும் பெயர்களைக் கடந்து பார்த்தால், ‘காங்கிரஸ் எதிர் இந்துத்துவம்’ என்பதே இதுவரை மஹாராஷ்டிர அரசியலின் மையாக இருந்திருக்கிறது. இந்தக் களத்தில் எப்போது பாஜகவுக்கு எதிரே நிற்பது என்று உத்தவ் தாக்கரே முடிவெடுத்தாரோ அப்போதே இந்துத்துவக் கூடாரத்தில் அவருக்கான இடம் முடிவுக்கு வந்துவிட்டது. சிவசேனை இரண்டாகப் பிளவுபட்டு, ஷிண்டே தலைமையிலான பிரிவு பாஜக கூட்டணியில் இந்துத்துவப் பூச்சோடு ஒட்டிக்கொண்ட தருணத்திலேயே தன் பின்னால் உள்ள கூட்டத்துக்குப் புதிய அடையாளத்தை உருவாக்கும் தேவையை உத்தவ் உணர்ந்திருக்க வேண்டும். ‘இந்து-இந்தி-இந்துஸ்தான்’ என்பதே இந்துத்துவத்தின் பரிபூரண உள்ளடக்கம். பிராமணியம் அதன் ஆன்மாவில் குழைந்திருக்கிறது. பால் தாக்கரே இதற்கு மாறாக ‘இந்து-மராத்தி-இந்தியா’ எனும் ஓர் உள்ளடக்கத்தைக் கனவு கண்டார். பிராமணரல்லாதோரின் இந்துத்துவமாக அதற்கு அர்த்தம் கொடுக்க முற்பட்டார்.

தந்தையின் மறைவோடு உத்தவுக்கு இதன் அபத்தம் தெரியவந்தாலும், இந்த மேல் ஓட்டை உடைக்கும் துணிச்சல் அவரிடம் இல்லை. காங்கிரஸுடன் இணையும் எந்தக் கட்சியும் மத விஷயத்தில் காங்கிரஸ்தன்மையுடனேயே இணைய முடியும். சொல்லப்போனால், நாடு தழுவிய அளவில் இன்றைக்கு மத விவகாரமே காங்கிரஸ் கூட்டணியையும், பாஜக கூட்டணியையும் மிகத் தீவிரமாக வேறுபடுத்தும் பிரதான காரணியாக நிற்கிறது. மதச்சார்பின்மை மீனுக்குத் தலையையும் இந்துத்துவப் பாம்புக்கு வாலையும் உத்தவ் காட்டிவந்தார். “உண்மையான இந்துத்துவ பிரதிநிதி யார்?” என்பதையே இந்தத் தேர்தலின் முக்கியமான கேள்விகளில் ஒன்றாக பாஜக உருவாக்கிய நிலையில், அவருடைய கட்சியோடு சேர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளையும் குழிக்குள் இது தள்ளியிருக்கிறது (மக்களவைத் தேர்தலின்போது பாஜக – ஆர்.எஸ்.எஸ். இடையே பிணக்கு இருந்ததையும், இம்முறை 60,000+ ஊழியர்களுடன் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஆர்எஸ்எஸ் ஈடுபட்டதையும், தன்னுடைய சிஷ்யர் தேவேந்திர ஃபட்நவீஸை முதல்வர் பதவிக்கு நகர்த்தும் உத்வேகம் ஆர்எஸ்எஸ்ஸுக்கு இந்தத் தேர்தலில் இருந்ததையும் நாம் இணைத்துப் பார்க்க வேண்டும்; வேறு வார்த்தைகளில் சொல்வது என்றால், உத்தவை முழுமையாகக் கை கழுவியதோடு உண்மையான இந்துத்துவப் பிரதிநிதி யார் என்றும் அவருக்கும் உணர்த்தியிருக்கிறது ஆர்எஸ்எஸ்).

வழக்கமான தேர்தல் என்பதைத் தாண்டி பிளவுபட்ட கட்சி யார் கைகளில் செல்லப்போகிறது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தலாகவும் இது இருந்தது. அந்த வகையில் சரத் பவார், உத்தவ் தாக்கரே இருவரும் அடைந்திருக்கும் சறுக்கல் பாஜகவுக்கு இன்னொரு அனுகூலம். அஜித் பவார் பிரிவு தேசியவாத காங்கிரஸ், ஷிண்டே பிரிவு சிவசேனையைக் காலப்போக்கில் பாஜக உண்டு செரிக்கும். நாட்டின் பணக்கார மாநிலத்தின் பெரிய கட்சியாக உருவெடுக்கும் அதன் நெடுநாள் கனவுக்கு இது உத்வேகம் கொடுக்கும்.

எப்படியும் பாஜகவுக்கு இது பெரிய வெற்றி; ஆனால், அதைக் காட்டிலும் உத்தவ் சேனை அடைந்திருக்கும் தோல்வி மிகப் பெரியது. தேசியவாத காங்கிரஸைப் பொறுத்த அளவில் பெரிய பிரச்சினை இல்லை; காங்கிரஸின் இன்னொரு பிரிவு போன்றே இதுவரை செயல்பட்டுவந்திருக்கும் அதை காங்கிரஸுடன் இணைத்துவிடும் முடிவை ஏற்கெனவே பல முறை அதன் தலைவர் சரத் பவார் பேசிவிட்டார்; சிவசேனையின் சரிவு மராத்திய உள்ளூர் அரசியலின் வீழ்ச்சியாக அமைந்துவிடும். உத்தவ் தாக்கரே தன்னுடைய கட்சியின் பாதையை இந்துத்துவப் பாதையிலிருந்து மராத்திய பாதை நோக்கி இனியேனும் திருப்பாவிட்டால், மஹாராஷ்டிரத்தின் உள்ளூர் கட்சியை அது காலப்போக்கில் காணாமலாக்கிவிடும்!