தங்கம் fb
இந்தியா

இறங்கு முகத்தில் தங்கம்... வாங்கலாமா... வேணாமா..?

தங்கம் விலை குறைவு: காரணங்கள் என்ன? இது குறித்த தகவல்களை பார்க்கலாம்.

karthi Kg

அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப் MAKE AMERICA GREAT AGAIN என்று சொல்லித்தான் இந்த முறை ஆட்சிக்கு வந்தார். அவர் கடந்த சில வாரங்களாகவே அறிவித்துக்கொண்டிருந்த பரஸ்பர விதிகளை அமலாக்கியதில் இருந்து, எல்லாமே டமால் டூமீல் என விழுந்துகொண்டிருக்கிறது. சர்க்கஸ் துப்பாக்கி பின்னோக்கியும் சுடும் என்பது போல், மற்ற நாடுகளில் பங்குச் சந்தைகள் சரியும் என எதிர்பார்த்தால், அதைவிட வேகமாக அமெரிக்காவில் பங்குச்சந்தை சரிந்துகொண்டிருக்கிறது. அட, பங்குச்சந்தை சரிஞ்சா சரியட்டும். தங்கம் ஏன் சரியுதுன்னு முதல்ல சொல்லுங்க என்கிறீர்களா? வாருங்கள் தங்க சரிவுக்கான காரணங்களைப் பார்க்கலாம்.

இன்று சென்னையில் ஒரு சவரன் தங்கம் 720 ரூபாய் குறைந்திருக்கிறது. அதாவது கிராமிற்கு 90 ரூபாய் குறைந்திருக்கிறது. நேற்றும் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக ஒரு சவரனுக்கு தங்கம் சரிந்திருந்தது. அப்படியெனில் ராக்கெட்டில் ஏறிய தங்கம், கீழ்நோக்கி செல்ல ஆரம்பித்துவிட்டதா என்கிற கேள்விகள் பொதுவாகவே மக்கள் மத்தியில் எழத்தொடங்கியிருக்கிறது.

வெள்ளியும் இன்று கிராமிற்கு ஐந்து ரூபாய் குறைந்திருக்கிறது. உலக அளவில் தங்கத்தைவிடவும் , வெள்ளியின் வீழ்ச்சில் தான் அபாயகரமாக இருக்கிறது. கடந்த 90 நாட்களில் பெற்ற லாபத்தை இரண்டே நாட்களில் வெள்ளி இழந்திருக்கிறது. தங்கம் இந்த ஆண்டு இன்னும் 15% லாபத்தில் தான் இருக்கிறது. கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு, அமெரிக்கா பங்குச்சந்தைகள் மிகப்பெரிய சரிவைக் கண்டிருக்கின்றன. அமேசான், டெஸ்லா, கூகுள், மெட்டா உள்ளிட்ட பிரபலமான பங்குகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன.

பொருளாதாரத்தில் அசாதாரண சூழல் நிலவும் போது, தங்கத்தின் முதலீடு செய்வது மட்டுமே பாதுகாப்பானதாக கருதப்படுகிறது. நேற்று அமெரிக்க பங்குச்சந்தை குறியீடான S&P கிட்டத்தட்ட 6% சரிந்தது. ஆனால், தங்கம் அந்த அளவு சரியவில்லை. தங்கத்தில் வந்த லாபத்தை விற்று போர்ட்போலியோவில் விலை குறைந்த மற்ற பங்குகளை முதலீட்டாளர்கள் வாங்குவதால், இந்த சரிவு நடந்திருக்கிறது என பொருளாதார நிபுணர்கள் கருதுகிறார்கள்.

கோல்டுமேன் சேக்ஸ் , பேங்க் ஆஃப் அமெரிக்கா உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த ஆண்டு தங்கத்திற்கான டார்கெட்டை உயர்த்தியிருக்கிறார்கள். தற்போது HSBC நிறுவனமும் அதை உறுதி செய்திருக்கிறது. தங்கம் ஒரு அவுன்ஸ் 3000 அமெரிக்க டாலர்கள் வரை குறையலாம். ஒரு வேளை இந்த சரிவு 2700 அமெரிக்க டாலர்கள் வரை தொடர்ந்தால், மத்திய வங்கிகள் மீண்டும் தங்கத்தில் அதிக அளவு முதலீடு செய்யத் தொடங்குவார்கள் என கணித்திருக்கிறது. அமெரிக்காவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,037.65 அமெரிக்க டாலர்கள்.