india, russia PTI
இந்தியா

ரஷ்யாவில் இந்தியப் பொறியாளர் கைது.. கட்டாய ராணுவ சேர்க்கைதான் காரணமா? தூதரகம் சொல்வது என்ன?

மாஸ்கோவில் தடுத்து வைக்கப்பட்ட கான்பூர் பொறியாளர், ரஷ்ய ராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தப்படுவாரோ என்ற அச்சத்தில் அவரது மனைவி பிரதமர் மோடி, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் உதவி கேட்டு கோரிக்கை வைத்துள்ளார்.

PT WEB

செய்தியாளர் - M. மீரா

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் பணிக்காகச் சென்ற கான்பூரைச் சேர்ந்த இந்தியப் பொறியாளர் ஒருவர் போலீசாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, அவர் ரஷ்ய ராணுவத்தில் சேர கட்டாயப்படுத்தப்படலாம் என அவரது மனைவி அச்சம் தெரிவித்து, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் உதவி கேட்டுள்ளார்.

கான்பூரைச் சேர்ந்த சந்தன் குப்தா, நொய்டா செக்டர் 62-ல் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணியாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. அந்த நிறுவனத்திற்கு ரஷ்யாவிலும் அலுவலகம் இருப்பதாகவும், பணி நிமித்தமாக வேலை விசாவில் சந்தன் ரஷ்யா சென்றதாகவும் தெரிகிறது.

இந்த நிலையில், மாஸ்கோ போலீசார் நேற்று தனது கணவரை அழைத்துச் சென்றதாக அவரது மனைவி சினேகா சந்தன் குப்தா தெரிவித்துள்ளார். அவர் தனது 10 வயது மகனுடன் மாஸ்கோவில் வசித்து வருவதாகவும் கூறியுள்ளார்.

சந்தன் குற்றமற்றவர் எனக் கூறியுள்ள சினேகா, ரஷ்ய மொழி தெரியாததால் கணவர் ஏன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்பதைக் கண்டறிய முடியாமல் தவிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைன் போர் காரணமாக ரஷ்ய ராணுவத்தில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், வெளிநாட்டினரையும் ராணுவத்தில் சேர்க்க முயற்சி நடப்பதாகவும், தனது கணவருக்கும் அத்தகைய அழுத்தம் ஏற்படலாம் என அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தகவல்களின்படி, சந்தன் தனது நண்பருடன் சேர்த்து மாஸ்கோவின் Baumanskaya காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த கண்ணாடிகளை உடைத்தது மற்றும் மது அருந்தியிருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அவர் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்றும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகம் இந்த விவகாரத்தை கவனத்தில் எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. சந்தனின் மனைவியுடனும் உள்ளூர் அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாகவும், இது சட்ட அமலாக்க அமைப்புகளால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், சந்தனுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக தூதரகம் கூறியுள்ளது. சந்தன் மீதான குற்றச்சாட்டுகள், அவர் தடுத்து வைக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் ரஷ்ய ராணுவத்தில் சேர அழுத்தம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் தகவல்கள் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில், இந்திய தூதரகத்தின் தலையீடு அவரது குடும்பத்தினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.