தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த அபார வெற்றிக்கு என்ன காரணம் என்பது குறித்து அரசியல் ஆர்வலர்கள் சொல்வதை நாம் இங்கு பார்ப்போம்.
'மடாலயங்களின் பூமி’ என்று அழைக்கப்படும் பீகாரில் இரண்டு கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில், இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய கள நிலவரப்படி, மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 200 இடங்களைத் தாண்டி பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலையில் உள்ளது. பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் போதுமானது என்ற நிலையில், அந்தக் கூட்டணி அபார வெற்றி பெற்றிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
அதேநேரத்தில் மாற்றத்தைத் தர விரும்பிய ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் அடங்கிய மகாகத்பந்தன் கூட்டணி மிகவும் பின்தங்கி உள்ளது. பீகார் தேர்தலில், கிங்மேக்கராகலாம் என கனவு கண்டு, தனிக்கட்சி ஆரம்பித்து போட்டியிட்ட பிரபல தேர்தல் வியூகவாதியான பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும், அசாதுதீன் ஒவைசியின் கட்சியும் இடம் தெரியாமல் போய்விட்டன. மறுபுறம், தேசிய ஜனநாயக கூட்டணியின் இந்த அபார வெற்றிக்கு என்ன காரணம் என்பது குறித்து அரசியல் ஆர்வலர்கள் சொல்வதை நாம் இங்கு பார்ப்போம். முதற்கட்டமாக, பீகாரில் ஆளும் கூட்டணிக் கட்சி அறிவித்த வாக்குறுதிகளே, இதன் வெற்றிக்கு முதன்மையானதாகப் பார்க்கப்படுகிறது.
அதில், முதலாவதாக இந்தத் தேர்தலுக்கு முன்பாக, 1.3 கோடி பெண்களுக்கு ’முக்கிய மந்திரி மகிளா ரோஜ்கர் யோஜனா’என்கிற திட்டம் அமல்படுத்தப்பட்டு, 10,000 ரூபாய் வழங்கப்பட்டது. தேர்தலையொட்டி, இந்த திட்டம் விரைவாகவே பெண்களைக் கவர்ந்த நிலையில், அவர்களுடைய வாக்கு எண்ணிக்கையையும் அதிகரிக்கச் செய்தது. இன்னும் சொல்லப்போனால், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்தபோது இந்த திட்டம் தொடர்பாக, பாட்னா உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடுக்கப்பட்டது. ஆனால், அவை எல்லாம் வாக்காளர்களின் வருகையை நிறுத்தவில்லை. மாறாக, அவர்களின் வெற்றிக் கோட்டை தொடவே வைத்துள்ளன.
இதுகுறித்து, புதிய தலைமுறையில் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஆ.கே., “தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு 10 ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்ன மாதிரியான அவலம்? அதை On Going Scheme என தேர்தல் ஆணையம் சொல்கிறது. தமிழ்நாட்டில் இருந்த On Going Schemeஐ தேர்தல் சமயத்தில் தேர்தல் ஆணையம் நிறுத்தியதே ஏன் நிறுத்தியது?” என்று கேள்வி எழுப்பி இருந்தார். தேர்தல் பரப்புரையில் போதும், "இது மாநில அரசால் வழங்கப்படும் லஞ்சம்” என்று ஜன் சுராஜ் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்து இருந்தார். பாஜக கூட்டணி வெற்றி பெற மற்ற காரணங்கள் நிறைய இருப்பினும் கடைசி நேரத்தில் 10,000 கொடுத்தது அதாவது சட்டப்படிதான் என்றாலும் அதுவே பிரதான காரணமாக அமைந்துவிட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
இரண்டாவதாக, மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைமையில் கூட்டணி அமைத்த பாஜகவும், தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தது.
ஒவ்வொரு வீட்டிற்கும் மாதந்தோறும் 125 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் 2 ஆண்டுகள் வரை வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை, விதவைகள் மற்றும் முதியோருக்கான ஓய்வூதியமும் ரூ.400 லிருந்து ரூ.1,100 ஆக உயர்வு என போட்டிபோட்டு அறிவித்தது. மூன்றாவதாக, இதே கூட்டணியில் அங்கம் வகிக்கும் சிராஜ் பஸ்வானின் லோக் ஜனசக்தி, ஆர்ஜேடி ஆதிக்கம் செலுத்திய பட்டியலின மற்றும் இபிசி மக்களின் வாக்குகளைப் பெற உதவியது.
இவையெல்லாம் இணைந்துதான், இன்று தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தியுள்ளன. அதிக தொகுதிகளில் முன்னிலை பெற வைத்துள்ளன. இதற்கிடையே, வாக்கு திருட்டு தொடர்பாக S.I.R. பக்கம் கவனம் வைக்க காங்கிரஸ் வலியுறுத்தியது. ஆனால், அவையெல்லாம் இந்தத் தேர்தலில் மறைந்து போயுள்ளன. அரசு திடீரென செயல்படுத்திய திட்டங்களும், அக்கூட்டணி அறிவித்த சலுகைகள் தொடர்பான வாக்குறுதிகளுமே ஒட்டுமொத்த பீகார் தொகுதிகளையும் கவர்ந்திழுத்து, ஆளும் அரசை மேலும் வலுவாக்கியிருப்பதாக அரசியல் ஆரவலர்கள் தெரிவிக்கின்றனர்.