வக்ஃப், ஏக்நாத் ஷிண்டே எக்ஸ் தளம்
இந்தியா

மகாராஷ்டிரா|வக்ஃபு வாரியத்திற்கு ஒதுக்கீடு செய்த 10 கோடியை திரும்பப்பெற்ற காபந்து அரசு! என்ன காரணம்?

வக்பு வாரியத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான தனது சமீபத்திய முடிவை மகாராஷ்டிர காபந்து அரசு திரும்பப் பெற்றுள்ளது.

Prakash J

மகாராஷ்டிரா மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்தது. ஆனாலும், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக யாரைத் தேர்ந்தெடுப்பது என்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. ஏக்நாத் ஷிண்டேவே தொடர வேண்டும் என சிவசேனா தரப்பிலும், பட்னாவிஸுக்கு முதல்வர் பதவி தர வேண்டும் என பாஜக தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, டெல்லி பாஜக தலைமையிடத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்று உறுதி செய்யப்படும் என்ற நிலையில், ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த கிராமத்திற்குச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் மேலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில், தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஏக்நாத் ஷிண்டே புதிய அரசு அமையும் வரை காபந்து முதல்வராகச் செயல்பட்டு வருகிறார்.

ஏக்நாத் ஷிண்டே, தேவேந்திர பட்னாவிஸ்

இந்த நிலையில், வக்பு வாரியத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்வதற்கான தனது சமீபத்திய முடிவை மகாராஷ்டிர காபந்து அரசு திரும்பப் பெற்றுள்ளது. மகாராஷ்டிர மாநில வக்பு வாரியத்தை பலப்படுத்த இந்த ஆண்டு பட்ஜெட்டில் அரசு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்தது.

அதன்படி கடந்த நவம்பர் 28ஆம் தேதி, மகாராஷ்டிராவின் தற்போதைய காபந்து அரசின் சிறுபான்மை மேம்பாட்டுத் துறை, 2024-25 நிதியாண்டில் மாநில வக்ஃப் வாரியத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யும் அரசாங்கத் தீர்மானத்தை (ஜிஆர்) வெளியிட்டது. இந்த நிதி, வாரியத்தின் உள்கட்டமைப்பு மற்றும் நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கம் கொண்டது. அதன் ஒருபகுதியாக சிறுபான்மையினரின் நலனுக்காக வக்ஃபு வாரியத்திற்கு 2 கோடி ரூபாயை அரசு வழங்கியது.

இதை மாநில எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. தவிர, இந்து அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT), ”இது சிறுபான்மை வாக்குகளை ஒருங்கிணைப்பதற்கான அரசியல் முயற்சி” என விமர்சித்தது. அதுபோல், விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பும் கடும் ஆட்சேபனைகளை தெரிவித்தது. ”இந்த முடிவை திரும்பப் பெறாவிட்டால், வரும் தேர்தல்களில் இந்து சமூகத்தில் இருந்து ஆளும் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படும். காங்கிரஸ் அரசுகூடச் செய்யாததை மகாயுதி அரசு செய்து வருகிறது.

மதவாத சமூகத்தை அரசாங்கம் திருப்திப்படுத்துகிறது. இந்த முடிவை வாபஸ் பெறாவிட்டால், வரவிருக்கும் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சட்டசபை தேர்தல்களில் இந்துக்களின் கோபத்தை மகாயுத்தி கட்சிகள் சந்திக்க வேண்டியிருக்கும்” என விஹெச்பியின் கொங்கன் பகுதி செயலாளர் மோகன் சலேகர் எச்சரித்திருந்தார்.

எதிர்க்கட்சிகள் தவிர, சிவசேனா கூட்டணியில் உள்ள பாஜகவும் கேள்வி எழுப்பியிருந்தது. மகாராஷ்டிர பாஜக செய்தித் தொடர்பாளர் கேசவ் உபாத்யா, “தற்போது மகாராஷ்டிராவில் காபந்து அரசு உள்ளது. கொள்கை முடிவுகளை எடுக்க இந்த அரசுக்கு அதிகாரம் இல்லை. நிதி தொடர்பான முடிவு நிர்வாக மட்டத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. எனவே நிர்வாகம் தனது முடிவைத் திருத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, மகாராஷ்டிர காபந்து அரசு வக்ஃப் வாரியத்திற்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் திரும்பப் பெற்றுள்ளது. விரைவில், அங்கு உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.