map, belagavi x page
இந்தியா

ஒரு பஸ் டிக்கெட்டில் வெடித்த மொழிப் பிரச்னை.. கன்னட - மகாராஷ்டிர எல்லையில் பதற்றம்.. நடந்தது என்ன?

பெலகாவி மாவட்டத்தில் ஏற்பட்ட மொழிப் பிரச்னையால் கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே பேருந்துச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

Prakash J

கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லையில் பெலகாவி மாவட்டம் உள்ளது. இது, கர்நாடகாவுக்குச் சொந்தமானது. இங்கு, மராத்தி பேசும் மக்கள் பெருமளவில் உள்ளனர். இவர்கள் பெலகாவியை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும் என நீண்டகாலமாய் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு அங்கு வசிக்கும் கன்னடம் பேசும் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக வழக்குகள்கூட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

belagavi

இந்த நிலையில், பெலகாவி எல்லைப் பகுதியில் இயக்கப்பட்ட கர்நாடகா மாநில அரசுப் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துநரை மராத்தி மொழியில் பேச வலியுறுத்தி ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியது. அதாவது, அந்த நடத்துநரிடன் பேருந்தில் ஏறியவர்கள் மராத்தில் மொழியில் டிக்கெட் கேட்டுள்ளனர். அதற்கு நடத்துநர், ‘எனக்கு மராத்தி மொழி தெரியாது; ஆகையால் கன்னடத்தில் கூறுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார். அவருக்கு மராத்தி மொழி தெரியாததால், அதைக் கற்றுக் கொள்ள வலியுறுத்தி அவரை தாக்கியுள்ளனர்.

இது பேசுபொருளான நிலையில், இதற்கு பதிலடியாக பெங்களூருவில் இருந்து மும்பை நோக்கிச் சென்ற மகாராஷ்டிரா பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரை கன்னட ரக்‌ஷன வேதிகே என்ற கன்னட மொழி அமைப்பினர் தாக்கினர். மேலும், அவர்களது முகங்களில் கறுப்பு மையைப் பூசியுள்ளனர். இதனால் இரு மாநில எல்லைகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, இந்தச் சம்பவத்தை அடுத்து, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா இடையே பேருந்துச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கர்நாடகாவில் கன்னட அமைப்புகளும், மகாராஷ்டிரா எல்லையில் சிவசேனா ஆர்வலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து மகாராஷ்டிரா போக்குவரத்துத்துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக், ”மகாராஷ்டிரா அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஊழியர்கள் ஏன் தாக்கப்பட்டனர் என்பதற்கு கர்நாடக அரசு விளக்கமளிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கு கர்நாடக பாஜக தலைவர் விஜேந்திரா, “கர்நாடகாவில் சலுகைகளை அனுபவித்துக்கொண்டு கன்னடத்திற்கு எதிராகவும், கர்நாடகாவிற்கு எதிராகவும் பேசுவதை மன்னிக்க முடியாது” எனப் பதிலடி கொடுத்துள்ளார்.

சஞ்சய் ராவத்

இதில் தலையிட்ட சிவசேனா (உத்தவ் அணி) எம்பி சஞ்சய் ராவத், “இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்க இரு மாநில முதலமைச்சர்களை மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.