ஜஸ்டின் ட்ரூடோ, மோடி
ஜஸ்டின் ட்ரூடோ, மோடி ட்விட்டர்
இந்தியா

காலிஸ்தான் தலைவர் கொல்லப்பட்ட விவகாரம்: கனடா-இந்தியா உறவில் வெடித்த விரிசல்! வரலாறு என்ன சொல்கிறது?

Prakash J

காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராக இந்தியா!

இந்தியாவை அடுத்து, சீக்கியர்கள் அதிகம் வாழ்வது கனடாவில்தான். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சீக்கியர்கள், கனடாவில் 14 லட்சம் முதல் 18 லட்சம் வரையிலான எண்ணிக்கையில் வசிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சூழலில்தான் சமீபகாலமாக இருநாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் அதிகரித்துள்ளது. அதற்கு உதாரணமாய் சமீபத்திய நிகழ்வு அரங்கேறியுள்ளது. இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புப் போராடி வருகிறது. கனடாவில் இருந்துகொண்டு, காலிஸ்தான் பிரிவினைவாதிகள் இந்தியாவுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கனடா அரசிடம் இந்தியா பல முறை வலியுறுத்தியும் இருக்கிறது. இதுகுறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தற்போதைய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் வலியுறுத்தி வரும் நிலையில், இதற்கு முன்பே, 1982ஆம் ஆண்டில், கனடாவின் பிரதமராக இருந்த தற்போதைய பிரதமர் ட்ரூடோவின் தந்தையான பியர் ட்ரூடோவிடம் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதுகுறித்து, டெர்ரி மிலேவ்ஸ்கி என்பவர் தன்னுடைய ’ரத்தத்துக்கு ரத்தம்: உலகளாவிய காலிஸ்தான் திட்டத்தின் 50 ஆண்டுகள்’ (2021) என்ற புத்தகத்தில் எழுதியிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

சுட்டுக்கொல்லப்பட்ட காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார்!

இந்த நிலையில்தான், கனடாவில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் கடந்த ஜூன் மாதம் காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுதொடர்பான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், இந்தக் கொலையில், இந்திய தூதர் சஞ்சய் குமார் வர்மா மற்றும் டொரான்டோவில் உள்ள துணைத் தூதர் அபூர்வா வஸ்த்தவா ஆகியோருக்கு தொடர்பிருப்பதாக, காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஒரு சில புகைப்படங்களுடன் போஸ்டர்களை ஒட்டியிருந்தனர்.

இந்தியா மீது குற்றஞ்சாட்டிய ஜஸ்டின் ட்ரூடோ - வெடித்தது மோதல்!

இதனை அடிப்படையாக வைத்து, நாடாளுமன்றத்தில் பேசிய கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ’இந்தக் கொலைச் சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம்’ என அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்திருந்தார். மேலும், இந்திய தூதரக அதிகாரியையும் கனடா வெளியேற்றியிருந்தது. அதேநேரத்தில், கனடாவின் இந்தக் குற்றச்சாட்டை இந்தியா மறுத்துள்ள நிலையில், அந்நாட்டு தூதரக அதிகாரியையும் நாட்டைவிட்டு வெளியேற உத்தரவிட்டுள்ளது. நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுதல், இந்தியாவுக்கு எதிரான செயல்பாடுகளில் அவர்களுடைய ஈடுபாடு ஆகியவை குறித்து தங்களது கவலையை தெரிவித்த இந்தியா, இந்த முடிவை எடுத்துள்ளது. இந்த விவகாரம், இரு நாட்டு உறவுகளுக்கு இடையே சலசலப்பையும் விரிசலையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா - கனடா இடையே தடைப்பட்ட வர்த்தக பேச்சுவார்த்தை!

முன்னதாக, இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடைபெற்றுவந்த நிலையில், அதுவும் சமீபத்தில் தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜி20 மாநாட்டிற்கு முன்னதாகவே வர்த்தக பேச்சுவார்த்தைகளைத் தற்காலிகமாக நிறுத்த ட்ரூடோ அரசு கோரிக்கை விடுத்தாக தகவல் வெளியானது. இருப்பினும், அதற்கான காரணம் எதையும் கனடா அரசு கூறவில்லை என்றும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

பேச்சுவார்த்தை முடங்க காரணம் என்ன?

கனடா நாட்டில் இந்தியா பிரிவினைவாத நடவடிக்கைகள் அதிகரிப்பது, காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியது குறித்து இந்திய அரசு அதிருப்தி தெரிவித்த நிலையில், இந்தியா உடனான வர்த்தக ஆலோசனையை அக்டோபர் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளதாகக் கனடா அறிவித்தது. மேலும், அந்நாட்டின் வர்த்தக அமைச்சரின் இந்திய பயணமும் தள்ளி வைக்கப்பட்டது. இந்தாண்டு இறுதிக்குள் இரு நாடுகளும் இடையே வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்த விரும்புவதாகக் கனடா தெரிவித்திருந்தது.

இருப்பினும், இப்போது பேச்சுவார்த்தை முடங்கியுள்ள நிலையில், இந்தாண்டிற்குள் ஒப்பந்தம் இறுதியாக வாய்ப்பே இல்லை என்ற சூழல் உருவாகியுள்ளது. அதற்கு சமீபத்திய சம்பவங்களும் காரணமாகி உள்ளன. இது, இரு நாடுகளுக்கும் பின்னடைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

ஜி20 மாநாட்டில் வெளியிடப்பட்ட அறிக்கை!

சமீபத்தில் டெல்லியில் நடந்த ஜி20 மாநாட்டில் கலந்துகொள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியா வந்திருந்தார். அப்போது பிரதமர் மோடி - ஜஸ்டின் ட்ரூடோ இடையேயான சந்திப்பு நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கனடாவில் அதிகரிக்கும் இந்தியா விரோத நடவடிக்கைகளைக் கடுமையாகக் கண்டிக்கும் வகையில் இந்திய அரசு காட்டமான அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

justin trudeau, sophie

காலிஸ்தான் நடவடிக்கை குறித்து பேசிய ஜஸ்டின் ட்ரூடோ!

அதுபோல், கனடாவில் அதிகரிக்கும் காலிஸ்தான் நடவடிக்கை குறித்த கேள்விக்குப் பதிலளித்த ஜஸ்டின் ட்ரூடோவும், "கருத்துச் சுதந்திரம், போராட்டம் நடத்தும் உரிமை ஆகியவற்றை கனடா எப்போதும் பாதுகாக்கும். இது எங்களுக்கு எப்போதும் மிகவும் முக்கியம். அதேநேரத்தில், வன்முறையைத் தடுக்கவும், வெறுப்பை பின்னுக்குத் தள்ளவும் எப்போதும் நடவடிக்கை எடுப்போம். இங்கே ஒருசிலர் நடந்துகொள்வது ஒட்டுமொத்த கனடாவின் நிலைப்பாடு இல்லை" என்று கடுமையாகவே கூறியிருந்தார். இதன் காரணமாக, இந்த விவகாரத்தில் கடந்த சில மாதங்களாகவே இரு நாடுகளுக்கும் இடையே அதிருப்தி இருந்துவந்த நிலையில், தற்போது வெளிப்படையாகவே பூதாகரமாகிவிட்டது.

இந்திரா காந்தியை அவமதித்த காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள்!

முன்னதாக, கடந்த ஜூன் 4ஆம் தேதி, பிராம்ப்டனில் மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை காலிஸ்தான் அமைப்பினர் கொண்டாடினர். அதாவது, `சீக்கியப் படுகொலையின் நினைவுநாள்' அனுசரிக்கப்பட்டது. காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்களால் நடத்தப்பட்ட அந்தப் பேரணியில் `WE NEVER FORGET 1984 - SIKH GENOCIDE' என்ற வாசகத்துடன் ஓர் அணிவகுப்பு வாகனமும் பங்கேற்றது.

பேரணியில் இடம்பெற்ற ஊர்வலம்

அந்த வாகனத்தில் `ஶ்ரீ தர்பார் சாஹிப் தாக்குதலுக்கான பழிவாங்கல் -REVENGE' என்று எழுதப்பட்ட பதாகையின் முன்னணியில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது சீக்கிய மெய்க்காப்பாளர்களால் சுட்டுப் படுகொலைசெய்யப்படுவது போன்ற சித்திரிப்பு சிலைகள் காட்சியமைக்கப்பட்டிருந்தன.

ரத்தம் தோய்ந்த வெள்ளைச் சேலையில் கைகள் உயர்த்தப்பட்ட நிலையில் இந்திரா காந்தியின் உருவம் வடிவமைக்கப்பட்டு இருந்தது. இந்தக் காட்சிகள் இணைதளங்கள், சமூக வலைதளங்கலில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதற்கு காங்கிரஸ் தரப்பினர் கடுமையான எதிர்ப்பையும் அதிருப்தியையும் தெரிவித்திருந்தனர்.

ஜெய்சங்கர்

இதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், “இதுபோன்ற நிகழ்வுகள் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுக்கு நல்லதல்ல; பிரிவினை, பயங்கரவாத இயக்கங்களுக்கு இதுபோன்று இடம் தருவது என்பது மிகத் தீவிரமான பிரச்னையாகும். வாக்குவங்கி அரசியலுக்காக இதுபோன்ற செயல்களை ஊக்குவிப்பது ஏற்கக்கூடிய காரியம் அல்ல" எனக் கண்டனம் தெரிவித்திருந்தார். இப்படி காலிஸ்தான் ஆதரவு விவகாரம், கடந்த சில மாதங்களாகவே இந்தியாவுக்கும் கனடாவுக்கும் நீறுபூத்த நெருப்பாக புகைந்துகொண்டிருந்த வேளையில்தான் தற்போது பயங்கரமாக வெடித்துள்ளது.

கனடா, இதைச் செய்வது ஏன்?

2021 கனடா நாட்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, சீக்கியர்கள் கனடாவின் மக்கள்தொகையில் 2.1 சதவீதத்தைக் கொண்டுள்ளனர். மேலும், நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் மதக் குழுவாகவும் உள்ளனர். இந்தியாவிற்கு அடுத்தபடியாக, கனடாவில்தான் உலகில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கின்றனர். ஆக, கனடா நாட்டு அரசியலின் வாக்குவங்கியைத் தீர்மானிக்கும் சக்திகளாக இந்த சீக்கியர்கள்தான் உள்ளனர். இன்னும் சொல்லப்போனால், கனடாவின் சீக்கிய மக்கள் அதிகம் வசிக்கும் இடமான பிராம்ப்டனில், 2022ஆம் ஆண்டு, நீதிக்கான சீக்கியர்கள் (SFJ) என்று அழைக்கப்படும் காலிஸ்தான் சார்பு அமைப்பு, பொது வாக்கெடுப்பு நடத்த அழைப்பு விடுத்தது. இதில், 1,00,000க்கும் அதிகமான மக்கள் காலிஸ்தானுக்கு ஆதரவாக வந்திருந்தனர் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து டெர்ரி மிலேவ்ஸ்கி, அதே புத்தகத்தில் பதிலளித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கனடா பிரதமருடன் சீக்கியர்கள்

தவிர, சீக்கியர்களின் எம்.பிக்கள் மற்றும் அதிகாரிகள் கனடாவின் அரசாங்கத்தின் அனைத்து மட்டங்களிலும் பணியாற்றுகிறார்கள். மேலும், அவர்களின் வளர்ந்துவரும் மக்கள்தொகை நாட்டில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக, கனடா நாட்டு அரசியல் தலைவர்கள் சீக்கிய வாக்குகளை இழக்க விரும்பவில்லை. அதனால்தான் இதற்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அத்துடன், அந்நாட்டில் உள்ள அனைத்து சீக்கியர்களும் காலிஸ்தான் ஆதரவாளர்கள் அல்ல என்றும் கூறப்படுகிறது.

கனடா சீக்கியர்கள்

மேலும், புலம்பெயர்ந்த சீக்கியர்களில் பெரும்பாலானோருக்கு காலிஸ்தான் ஒரு பெரிய பிரச்னை அல்ல என்றும் கூறப்படுகிறது. மேலும், காலிஸ்தான் இயக்கத்திற்கு இந்தியாவில் மட்டுமே எதிர்ப்பு உள்ளது. ஆனால், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் பலமான ஆதரவு உள்ளது. உண்மையில், காலிஸ்தான் இயக்கம் அதன் தொடக்கத்திலிருந்தே உலகளாவிய இயக்கமாக இருந்ததாகவும், தனி சீக்கிய நாடுக்கான முதல் பிரகடனம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.