2024இல் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை 802.8 டன்னாக இருந்ததாகவும் உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. எனினும் 2025ஆம் ஆண்டில் விலை மதிப்பு அடிப்படையில் தங்கத்தின் விற்பனை30% அதிகரித்து 7 லட்சத்து 51 ஆயிரத்து 490 கோடி ரூபாயாக இருந்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது.
தங்கம் வெள்ளி விலை உயர்வு சாமானியர்களை மிரட்சியில் உயர்த்தியுள்ளது. இரண்டே நாட்களில் சவரனுக்கு 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அதிகரித்துள்ளது. தங்கம், வெள்ளி விலை வரலாற்றில் இல்லாத அளவாக புயல் வேகத்தில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. இதுவரை இப்படி ஓர் உயர்வு நடந்ததே இல்லை என நகை வணிகர்களே கூறும் அளவிற்கு, கிராமுக்கு 1,190 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கம் 16,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 9,520 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் தங்கம் விலை உயர்வுக்கான பின்னணி குறித்து இங்கு பார்க்கலாம். தங்கம் விலை உயர்ந்து வருகிறது என்பதைவிட கைக்கெட்டா தூரம் பறந்து செல்வது போன்றே உள்ளது. இந்த அதிவேக விலை உயர்வுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்கள் உள்ளன.
இதில் முதலாவது புவிசார் அரசியல் பதற்றங்கள். உலகளவில் பல்வேறு நாடுகள் இடையே நிலவும் போர்ச்சூழல், அரசியல் நிலையற்ற தன்மை முதலீட்டாளர்களை அச்சமடைய செய்துள்ளது. இதனால் பாதுகாப்பான முதலீடாக கருதி தங்கத்தை வாங்கும் போக்குஅதிகரித்துள்ளது. உலக நாடுகள் டாலர் பொதுப்பணம் என்ற நிலையிலிருந்து மாற்று முறைகளுக்கு மாறத்தொடங்கியிருப்பதும் உலக வர்த்தகத்தில் நிச்சயமற்ற நிலையை உருவாக்கி தங்கத்திற்கான தேவையை அதிகரிக்கிறது. பல்வேறு நாட்டு மைய வங்கிகள் முன்னெச்சரிக்கையாக தங்கத்தை அதிகளவில் வாங்கி கையிருப்பு வைப்பதும் அதற்கான தேவையை அதிகரிக்கிறது. சீனா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் என எந்த நாட்டையும் விட்டுவைக்காமல் அமெரிக்கா அதிரடியாக வரிகளை உயர்த்தியுள்ளதும் குழப்பங்களை அதிகரித்துள்ளது. இதுவும் முதலீட்டாளர்களை தங்கத்தை நோக்கி தள்ளுகிறது.
அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அல்லது வட்டி விகிதத்தை நிலையாக வைத்திருப்பது தங்கத்திற்குச் சாதகமாக அமைகிறது. இவையெல்லாம் சர்வதேச காரணங்களாக உள்ள நிலையில் இந்தியாவுக்கு என தனியாக ஒரு பிரச்சினை உள்ளது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளதும் அதை வாங்குவதற்கான செலவுகளை அதிகரிக்கிறது.
தங்கம் விலை கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் கடந்தாண்டு அதன் விற்பனை எப்படி இருந்தது என உலக தங்க கவுன்சில் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. 2025இல் தங்க விற்பனை 11% குறைந்து 710.9 டன்னாக இருந்ததாக உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. திருமண சீசன்களில்கூட தங்கம் விற்பனை கணிசமாக குறைந்து காணப்பட்டதாகவும் விலை உயர்வு மிகஅதிகமாக இருந்ததே இப்போக்கிற்கு காரணம் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நடப்பு 2026ஆம் ஆண்டில் தங்க விற்பனை மேலும் குறைந்து 600 முதல் 700 டன்களுக்குள் இருக்கும் என எதிர்பார்ப்பதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது. 2024இல் இந்தியாவில் தங்கத்திற்கான தேவை 802.8 டன்னாக இருந்ததாகவும் உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது. எனினும் 2025ஆம் ஆண்டில் விலை மதிப்பு அடிப்படையில் தங்கத்தின் விற்பனை30% அதிகரித்து 7 லட்சத்து 51 ஆயிரத்து 490 கோடி ரூபாயாக இருந்ததாக அந்த அமைப்பு கூறியுள்ளது. 2024ஆம்ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி 73 டன் தங்கம் வாங்கியதாகவும் ஆனால் கடந்தாண்டு 4 டன் மட்டுமே வாங்கியதாகவும் உலக தங்க கவுன்சில் கூறியுள்ளது