மணிப்பூர் வன்முறை
மணிப்பூர் வன்முறை pti
இந்தியா

அன்று போலி வீடியோ.. இன்று மாணவர்கள் சுட்டுக்கொலை.. மணிப்பூரில் வன்முறையை அணையாமல் வைத்திருப்பது எது?

Prakash J

மணிப்பூர் வன்முறையில் வெடித்த போலிச் செய்திகள்!

மணிப்பூர் பற்றிய செய்திகள் தினந்தோறும் ஊடகங்களில் தவறாமல் இடம்பிடித்து விடுகின்றன. அதற்குக் காரணம், அங்கு அணையாமல் தொடரும் வன்றமுறைதான். குக்கி மற்றும் மெய்டீஸ் இன மக்கள் இடையே இடஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே மாதம் மோதல் வெடித்தது. அதிலிருந்து இன்றுவரை அந்த வன்முறை வெடித்தப்படியே உள்ளது. இதனால், அதுபற்றிய செய்திகள் நிறைய வந்தபடி உள்ளன. அதில் பல உண்மைச் செய்திகளும் அடங்குகின்றன. போலிச் செய்திகளும் வெளியாகின்றன.

மணிப்பூர் கலவரம்

குறிப்பாக, கடந்த மே மாதம் இருதரப்புக்கும் மோதல் வெடித்ததற்குக் முக்கியக் காரணம் இடஒதுக்கீடு விவகாரம்தான். எனினும், இந்த வன்முறையின்போது குக்கி இனத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள், நிர்வாணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்ற வீடியோவும் வைரலாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்தது. இதில், சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், இந்தப் பெண்கள் பாதிக்கப்பட்டதற்கும், வன்முறை தொடர்ந்து அங்கு நடைபெற்றதற்கும் இன்னொரு முக்கியமான காரணம் போலி வீடியோதான்.

குக்கி இனப் பெண்கள் பாதிப்புக்கு முக்கியக் காரணமான போலி வீடியோ!

அந்தச் சமயத்தில் வெளியான போலி வீடியோ ஒன்றில், ‘நம்முடைய சமூகத்தைச் (மெய்டீஸ்) சார்ந்த பெண் ஒருவர் குக்கி இனத்தவரால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனப் பதிவிட்டு யாரோ ஒரு பெண்ணின் படத்தைப் பதிந்து, மெய்தி இன மக்களிடம் வீடியோ ஒன்று பரவியுள்ளது. இந்த போலி வீடியோ செய்தி, மணிப்பூரில் வன்முறை வெடித்த நேரத்தில், மெய்டீஸ் சமூகத்தினரிடம் காட்டுத்தீயாய்ப் பரவியுள்ளது. இதனால் பழிதீர்க்கும் நோக்கில் அச்சமூகத்தைச் சேர்ந்த கும்பல் ஒன்று, கிராமத்திற்குள் புகுந்து மற்றொரு இனக் குழுவை விரட்டி உள்ளது. இதற்குப் பின்னரே, அந்த கும்பலால் பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்புணர்வுக்கும் துஷ்பிரயேகத்துக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியானது.

manipur

வன்முறையின்போது காணாமல் போன மாணவர்கள்

இந்த வன்முறைச் சம்பவங்களில் 175 பேர் கொல்லப்பட்டிருப்பதாக அம்மாநில காவல் துறையே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், பலர் காணாமல் போயிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இந்த வன்முறையில் மெய்டீஸ் இனத்தைச் சேர்ந்த மாணவரான பிஜாம் ஹேமன்ஜித் (20)மற்றும் மாணவி ஹிஜாம் லிந்தோய்ங்கன்பி (17) ஆகிய இருவரும் காணாமல் போனவர்களில் அடக்கம்.

கொலை செய்யப்பட்ட மாணவர்கள்

சுட்டுக் கொல்லப்பட்ட மாணவர்கள்!

இவர்களைப் பற்றிய தேடுதல் பணியும் தீவிரமாய் நடைபெற்றுவந்த நிலையில், மாணவர்கள் இருவரும் ஆயுதம் தாங்கிய கும்பலால் பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த புகைப்படங்களும், பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடக்கும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின.

மாணவர்கள் கொலை வழக்கு சிபிஐ வசம் ஒப்படைப்பு!

இதனிடையே மாணவர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும் பதற்றம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, மணிப்பூரை பதற்றம் நிறைந்த மாநிலமாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கு, சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கொலையாளிகளை அடையாளம் காண மத்திய விசாரணை அமைப்புகளுடன் இணைந்து மாநில காவல்துறையினரும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.

மணிப்பூர் போராட்டம்

மாணவர் கொலை வழக்கு குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை!

தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டு வருகிறது. அதேநேரத்தில், இந்தக் கொலையும் போலி வீடியோவால் நிகழ்ந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. ஏற்கெனவே குக்கி இனப் பெண்களுக்கு நேர்ந்த சம்பவம், போலி வீடியோ செய்தியால் அரங்கேறியதுபோல், இதுவும் அக்குழுக்களிடையே போலிச் செய்தியாக உருமாறி வன்முறைக்கு வித்திட்டிருக்கலாம் எனவும், மணிப்பூரில் மீண்டும் தொடரும் வன்முறைக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. அதாவது, இத்தகைய வன்முறைச் செயல்களை யாராவது மறைந்திருந்து செயல்படுத்தலாம். இரு குழுக்களிடையே அவர்கள் இத்தகைய நாசவேலைகளைச் செய்துவிட்டு அதில் குளிர்காயலாம் எனவும் சந்தேகின்றனர்.

மணிப்பூர் போலீஸ், அசாம் ரைபிள் படை

குறிப்பாக, இந்த வன்முறை கொஞ்சம் அடங்கியிருக்கும் வேளையில்தான் இதுபோன்ற வீடியோ காட்சிகள் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்துகின்றன. முதலில் குக்கி இனப் பெண்கள் பாதிக்கப்பட்ட சம்பவம் மே மாதம் நடைபெற்ற வேளையில், அது ஜூலை மாதம் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுபோல், மாணவர்கள் காணாமல் போன சம்பவம் கடந்த ஜூலை மாதம் எனச் சொல்லப்படுகிறது. ஆனால், அவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளியாகி மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருப்பதால், இணையச் சேவை முடக்கப்படும் வேளையில், யாரோ சிலர் இதுபோன்ற நாச வேலைகளில் ஈடுபடலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். என்றாலும் இதுகுறித்து ஆதாரப்பூர்வமான எந்த தகவல்களும் வெளியாகவில்லை. இதுதொடர்பாக, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

வெளிநாட்டுச் சதி இருக்கலாம் எனச் சொன்ன மணிப்பூர் முதல்வர்!

மறுபுறம், மணிப்பூர் பள்ளத்தாக்குப் பகுதிகளில் தீவிரவாத குழுக்கள் இயங்கி வருவதாகவும் அவர்கள் இத்தகைய சில சதிச் செயல்களில் ஈடுபடலாம் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு உதாரணமாய், ஜம்மு காஷ்மீரின் சில பகுதிகளில் தீவிரவாதிகள் உள்ளே நுழைந்ததும், அவர்களுடன் பாதுகாப்புப் படையினர் போரிட்டு வெற்றி கண்டதும் குறிப்பிடத்தக்கது. ஆக, அதன்படியும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் மணிப்பூர் கலவரத்தின் பின்னணியில் வெளிநாட்டினரின் சதி இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

பிரேன் சிங், மணிப்பூர் கலவரம்

இதை, அம்மாநில முதல்வர் பைரோன் சிங்கே சிலதடவை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் இருந்தும் சட்டவிரோதமாகப் பலர் வருவதாகக் கூறப்படுகிறது. அவர்கள் மணிப்பூரில் நிரந்தரமாகக் குடியேறுவதற்காக இதுபோன்ற வன்முறைகளைக் கட்டவிழ்க்கலாம் என்றும் நம்பப்படுகிறது. எனினும், இவையனைத்தும் ஊடக வழியில் கூறப்படும் செய்திகளே தவிர, எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை.

இதற்கிடையே மாணவர்கள் கொல்லப்பட்டதற்கு எதிராக மணிப்பூரில் போராட்டம் நடத்திய மாணவர்களை பாதுகாப்புப் படையினர் கடுமையாகத் தாக்கியிருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. போராட்டத்தின்போது சாலையில் 20க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்களால் லத்தியால் அடி வாங்கிய மாணவர்களின் காயமிகுந்த புகைப்படங்களும், எக்ஸ்ரே சோதனையும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறப்பு ஆயுதப்படை அதிகாரச் சட்டம் (AFSPA) சொல்வது என்ன?

மணிப்பூரில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்னையை கருத்தில் கொண்டு, ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கீழ் (AFSPA) மாநிலம் முழுவதையும் 'கலவரப் பகுதி’ (disturbed area) ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் இம்பால் உள்ளிட்ட 19 காவல் நிலைய பகுதிகள் தவிர, மற்ற இடங்களில் எல்லாம் இந்த நடைமுறை வரும் அக். 1முதல் அடுத்த 6 மாதங்களுக்கு அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் எந்தவொரு பகுதியும் ‘கலவரப் பகுதி’யாக மாநில அரசாலோ அல்லது மத்திய அரசாலோ அறிவிக்கப்பட்டவுடன் அப்பகுதிக்கு அனுப்பிவைக்கப்படும் படைகளுக்கு இந்தச் சட்டத்தின்படியான அதிகாரம் விரிவுபடுத்தப்படுகிறது. அரசின் இந்த அறிவிப்பில் எந்தவொரு நீதிமன்றமும் தலையிட முடியாது. மேலும், சர்வதேச மனித உரிமைகளுக்கான சட்டம் உயிரைப் பறிக்கும் வகையில் வலுவான தாக்குதல் நடத்த சில கட்டுப்பாடுகளை விதித்திருந்தபோதிலும், இச்சட்டத்தின் 4(அ) பிரிவு சட்டத்தை அமலாக்கும் சூழ்நிலைகளில், உயிரைப் போக்கும் வகையில் சுடுவதற்கான அதிகாரத்தை ராணுவப் படைகளுக்கும் அதற்கு உதவிகரமாக இருக்கும் மாநிலக் காவல் துறைக்கும் வழங்குகிறது.

‘ஆயுதங்களையோ’ அல்லது ‘ஆயுதங்களாகப் பயன்படுத்தத்தக்க பொருட்களையோ’ வைத்திருக்கும் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட கூட்டத்தின் மீது உயிரைப் பறிக்கும்படியான தாக்குதலை மேற்கொள்ள இந்தச் சட்டம் வகை செய்கிறது. அதே நேரத்தில், ‘கூட்டம்’ மற்றும் ‘ஆயுதம்’ என்பதற்கான விளக்கம் எதுவும் இப்பிரிவில் வழங்கப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.