நிழல் உலக தாதா என அறியப்படும் சோட்டா ராஜன், சிறிய மூக்கு அறுவைசிகிச்சைக்காக அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு அவருக்கு அறுவைசிகிச்சை தொடர்பாக ஆலோசனை வழங்கப்பட்டதாகவும் பின்னர் அறுவைசிகிச்சைக்குப் பிறகு அவர் மீண்டும் திகார் சிறைக்குக் கொண்டு வரப்படுவார் எனவும் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவமனை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே, அவர் ENT துறையின்கீழ் உள்ள பழைய தனியார் வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2001ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி, தெற்கு மும்பை, கிராண்ட் ரோடு பகுதியில் உள்ள புகழ்பெற்ற கோல்டன் கிரவுன் ஹோட்டலின் அதிபரான ஜெயா ஷெட்டியை அதே ஹோட்டலில் வைத்து சோட்டா ராஜனின் ஆட்கள் இருவர் சுட்டுக் கொன்றனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஹோட்டல் மேலாளர் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கில் சோட்டா ராஜனுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. ஏற்கெனவே பத்திரிகையாளர் ஜே டே-வை 2011-இல் கொன்ற வழக்கில் சோட்ட ராஜனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அவர் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முன்னதாக 1989ஆம் ஆண்டு துபாய்க்குச் சென்று 27 ஆண்டுகள் பதுங்கியிருந்த நிலையில், 2015, நவம்பரில் இந்தோனேசியாவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.