பீகார் தேர்தல் முடிவுகள் வந்துள்ள நிலையில், மீண்டும் நிதிஷ்குமாரே முதல்வர் ஆகலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவர் MLA ஆகாமல் MLCயை மட்டும் விரும்புவது ஏன் என்பது குறித்து இங்கு பார்ப்போம்.
பீகாரில் ஊடகங்கள் தெரிவித்த கருத்துக்கணிப்புகள்படி, பாஜக, ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியே முன்னிலையில் உள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 200 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதனால், பெரும்பான்மைக்கு 122 தொகுதிகள் போதுமானது என்ற நிலையில், அந்தக் கூட்டணி அபார வெற்றி பெற்றிருப்பதாக அரசியல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையே, அடுத்த முதல்வர் பற்றிய பேச்சும் எழுந்துள்ளது. பீகாரைக் கடந்த 20 ஆண்டுகளாகக் கட்டியாளும் மிகப்பெரிய அரசியல் தலைவராக நிதிஷ்குமார் ஒருவரே வலம் வருகிறார். எத்தனை தேர்தல்கள் வந்தாலும், தனது கட்சியை உயர்த்திப் பிடிப்பதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு முறையும் கட்சிகளுடன் இணங்கி, முதல்வராகி அரியணையில் அமருவதை வழக்கமாக்கி வருகிறார்.
அந்த வகையில், கடந்த 20 ஆண்டுகளாய் இப்படி முதல்வராய் தொடரும் பட்சத்தில், அவர் இந்த ஆண்டுகளில் எம்.எல்.ஏவாக வகித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டப்பேரவையில் அமைச்சராகவோ, முதல்வராகவோ தொடரும் வேண்டுமெனில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக வென்றிருக்க வேண்டும். ஆனால், நிதிஷோ, தற்போதைய தேர்தல் வரை எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை. ஆனால், இதுவரை, அவர் 9 முறை முதல்வராக இருந்துள்ளார். அதற்குக் காரணம், பீகாரில் சட்டமேலவை இருப்பதுதான். நிதீஷ் குமார் முதல்முறையாக 1977ஆம் ஆண்டு பீகார் சட்டமன்றத் தேர்தலில் ஹர்னாட் தொகுதியில் போட்டியிட்டார். ஆயினும் அதில் தோல்வியடைந்தார்.
ஆனால், 1985ஆம் ஆண்டு பீகாரில் முதல் முறையாக ஹர்னாட் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றபோதும், அதேதொகுதியில் 1995 ஆம் ஆண்டு தோல்வியை சந்தித்த பிறகு சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிடவில்லை. அதற்குப் பின் இடையில் சில காலம் மத்திய அரசில் இடம்வகித்தார். பின்னர் மீண்டும் மாநில அரசியலுக்குத் திரும்பினார். ஆம், 2005ஆம் ஆண்டு முதல் ஆரம்பித்த அவரது முதல்வர் பயணம் இன்றுவரை தொடர்கிறது. இவையனைத்தும் சட்டமேலவையால் வந்ததே ஆகும். மொத்தத்தில், சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாமல் இரு தசாப்தங்களாக முதல்வராக இருக்கும் இந்தியாவின் ஒரே அரசியல் தலைவர் நிதிஷ்குமார் மட்டுமே. அதேவகையில், இந்த முறையும் 10வது முறையாக பீகார் மாநில அரியணையை தக்கவைப்பார் எனக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, 2010இல் நடைபெற்ற முந்தைய பீகார் சட்டமன்றத் தேர்தலில், ‘நிதிஷ் வேண்டுமென்றே வாக்காளர்களை எதிர்கொள்வதைத் தவிர்க்கிறாரா’ என சிலர் கேள்வி எழுப்பினர். ஆனால், 2012ஆம் ஆண்டு சட்ட மேலவைக்கு மீண்டும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, நேரடித் தேர்தல் பாதையை அல்லாமல் எம்.எல்.சி பாதையை தேர்ந்தெடுத்தது குறித்து விளக்கினார். "மேல் சபை ஒரு மரியாதைக்குரிய நிறுவனம் என்பதால், எந்தவொரு கட்டாயத்தினாலும் அல்ல, விருப்பப்படி எம்எல்சியாகத் தேர்வானேன்" என்று 2012 ஜனவரியில் அதன் நூற்றாண்டு விழாவைக் குறிக்கும் சட்டமன்றக் குழுவின் நினைவுக் கூட்டத்தில் உரையாற்றும்போது நிதிஷ் குமார் கூறினார்.