அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்துக்கு இரட்டை இஞ்சின் செயலிழப்பு காரணமாக இருக்கலாம் என்று விமான நிபுணர்கள், மற்றும் விமானிகள் சிலர் கருதுகின்றனர். நேற்று மதியம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குக் கிளம்பிய ஏர் இந்தியாவின் AI 171 விமானம் அடுத்த சில நொடிகளுக்குள் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 241 பேரும் குடியிருப்புப் பகுதியில் இருந்த சிலரும் உயிரிழந்தனர். இரட்டை இன்ஜின் செயலிழப்பின் காரணமாகவே விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. பறவைகள் மோதுவது அல்லது எரிபொருள் மாசுபாடு காரணமாக இரட்டை இன்ஜின் செயலிழப்பு ஏற்படுவதாக ஏர் இந்தியாவின் முன்னாள் விமான பாதுகாப்பு இயக்குநர் கேப்டன் மனோஜ் ஹதி தெரிவித்துள்ளார்.
எரிபொருள் மாசுபாடு காரணமாக இரட்டை இன்ஜின் செயலிழப்பு ஏற்பட்டு AI 171 விமான விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று விமானிகள் சிலரும் தெரிவித்துள்ளனர். விமானம் கிளம்பிய சில நொடிகளில் ஆபத்து ஏற்பட்டிருப்பதற்கான மே டே அழைப்பு விடுக்கப்பட்டதாக விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் உறுதிபடுத்தியுள்ளது. விமானம் புறப்பட்டு பாதுகாப்பாக நிறுத்த முடியாத வேகத்தை அடைந்த பிறகு இந்த இரட்டை இன்ஜின் செயலிழப்பு நிகழ்ந்திருப்பதாகக் கருதுவதற்கு இயக்குநரகத்தின் தகவல் இடமளிப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். விமானங்களில் இரட்டை இன்ஜின் செயலிழப்பு சம்பவங்கள் மிகவும் அரிதானவை என்றும் இதுவரை ஏழு சம்பவங்கள் மட்டுமே பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.