ஜியாவுர் ரஹ்மான் ani
இந்தியா

உ.பி | மின்சாரம் திருட்டு.. சமாஜ்வாதி எம்பிக்கு ரூ.1.91 கோடி அபராதம்! வீட்டின் மின்சாரம் துண்டிப்பு

மின்சார திருட்டு தொடர்பாக சம்பலில் உள்ள சமாஜ்வாதி கட்சி மக்களவை எம்பி ஜியாவுர் ரஹ்மானுக்கு ரூ.1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Prakash J

உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் தொகுதியில் மின்சார திருட்டு நடைபெறுவதாக மின்சார வாரியத்திற்குத் தகவல் கிடைத்தது. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அப்பகுதியில் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி, பர்க் பகுதியில் உள்ள 49 இடங்களில் மின்சார திருட்டு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. குறிப்பாக பர்க் தொகுதிக்கு உள்பட்ட தீபா சாரை, கக்கு சராய், ரைசட்டி சாலை, நகாசா திராஹா ஆகிய இடங்களில் மின்வாரியத்தினர் திடீர் சோதனை நடத்தியதில், இரண்டு மதரஸாக்கள் உட்பட 49 முறைகேடான மின் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

தீபா சாரையில் நடந்த சோதனையில், நான்கு மசூதிகள் மற்றும் ஒரு மதரஸாவில் சட்டவிரோத மின் இணைப்புகளை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதில், மக்களவை எம்பி ஜியாவுர் ரஹ்மான் ஈடுபட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து அவருக்கு ரூ.1.91 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது வீட்டு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும், சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கு எதிராக 2003ஆம் ஆண்டு மின்சாரச் சட்டம் பிரிவு 135-ன் கீழ் மின்சாரம் திருடப்பட்டதாக காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வீட்டுச் சோதனையின்போது அதிகாரிகளை மிரட்டியதாக அவரது தந்தை மம்லுகூர் ரஹ்மான் பார்க் மீதும், வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, எம்பியின் வீட்டில் தலா இரண்டு கிலோவாட் மின் இணைப்புகள் பெறப்பட்டுள்ளன. அவை இரண்டுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. என்றாலும், 50க்கும் மேற்பட்ட எல்இடி பல்புகள், டீப் ஃப்ரீசர், 3 ஸ்பிலிட் ஏசிகள், 2 ஃப்ரிட்ஜ்கள், ஒரு காபி மேக்கர், கீசர், மைக்ரோவேவ் ஓவன் உள்ளிட்ட கனரக மின்சாதனங்கள் வீட்டில் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதேநேரத்தில் கடந்த 6 மாதங்களில், அந்த இரண்டு மீட்டர்களிலும், ஜீரோ யூனிட் மின் கட்டணம் மட்டுமே இருந்துள்ளது. ஆனால், 16.48 கிலோவாட் மின்சாரம் ஓடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அந்த இரண்டு மின் மீட்டர்களையும் ஆய்வகத்திற்கு அனுப்பியபோது, ​​பழுதடைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.