டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது முகநூல்
இந்தியா

கெஜ்ரிவால் கைது... இரவில் நடந்தது என்ன? அடுத்து நடக்கப்போவது என்ன? பரபரப்பான தேசிய அரசியல் களம்!

ஜெனிட்டா ரோஸ்லின்

புதிய மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் இருந்துவந்தார். இந்நிலையில் நேற்று (21.3.2024) இரவு அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. இது தேசிய அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் என்ன நடந்தது, எதற்காக கெஜ்ரிவால் கைதானார், இனி என்ன நடக்க உள்ளது, கெஜ்ரிவால் முதல்வராக தொடர்வாரா... என்பது பற்றியெல்லாம் பார்க்கலாம்.

அமலாக்கத்துறை அலுவலகத்தில் கெஜ்ரிவால்!

புதிய மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் நேற்று இரவு கிட்டதட்ட இரண்டு மணி நேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தினர்.

இதற்காக இரவு 8 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்தில் சோதனை நடத்தினர். சோதனைக்கு பிறகு அமலாக்கத்துறை அதிகாரிகளால் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.

அங்கிருந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட கெஜ்ரிவால், அங்கு உள்ள லாக்கப் அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளார். தற்போது அவர் விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ளார் என்றும், இன்று மாலைக்குள் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்றும் அமலாக்கதுறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

‘சிறையில் இருந்தபடி முதல்வராக தொடர்வார்...’

இந்நிலையில், இவரின் கைதை கண்டித்து ஆம் ஆத்மி முற்றுகை போராட்டம் நடத்தலாம் என்பதால் டெல்லி ஆம் ஆத்மி அலுவலகம், அரவிந்த் கெஜ்ரிவால் வீடு, அமலாக்கத்துறை அலுவலகம் என்று அனைத்து பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே அமலாக்கத்துறை ஜனநாயக படுகொலையில் ஈடுபடுவதாக குறிப்பிட்டு, கெஜ்ரிவால் வழக்கை அவசர வழக்காக விசாரிக்க ஆம் ஆத்மி உச்சநீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்துள்ளது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர உள்ளது.

கைதுசெய்யப்பட்ட போதும், கெஜ்ரிவால் சிறையில் இருந்து கொண்டே முதல்வராக தனது ஆட்சியை தொடர்வார் என்று ஆம் ஆத்மி தரப்பில் தொடர்ந்து தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்

எதற்கு கைது?

டெல்லி புதிய மதுபான கலால் வரி கொள்கை முறைகேடு வழக்கில் நேரில் ஆஜராக ஒன்பதாவது முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அமலாக்கத்துறையின் சம்மன் சட்டவிரோதமானது எனக் கூறி அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராக மறுப்புத் தெரிவித்தார்.

இருப்பினும் அமலாக்கத்துறையினர் சம்மனை ரத்து செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்ததால், ’நான் விசாரணைக்கு ஆஜரானால் கைது செய்ய மட்டோம் என அமலாக்கத்துறை உறுதியளிக்க வேண்டும்’ என கெஜ்ரிவால் புதிய மனுவைத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, கைது நடவடிக்கையில் இருந்து அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால பாதுகாப்பை வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்தது. இதனை தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் நேற்று (21.3.2024) அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். சோதனையை தொடர்ந்து நேற்று இரவு அவரை அமலாக்கத்துறை கைது செய்தது.

கண்டனம்

இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்ச்சர் ஸ்டாலின், ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், பினராயி விஜயன், கபில் சிபல், மெகபூபா முஃப்தி ஆகியோர் கெஜ்ரிவால் கைதுக்கு தங்களின் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.