இந்தியா

அமிர்தசரஸ் ரயில் விபத்திற்கு யார் காரணம்...?: நேரடி கள நிலவரம்

webteam

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸின் ஜோதா பதக் என்ற இடத்தில் தசரா கொண்டாட்டத்தை ரயில் தண்டவாளம் அருகே இருந்து கண்டுகளித்தவர்கள் மீது ரயில் மோதி நேற்று விபத்து நேரிட்டது. இதில் 60க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். 70க்கும் அதிகமானோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை பஞ்சாப் முதலமைச்சர் அம்ரீந்தர்சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பாக ரூ.7 லட்சம் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, விபத்து குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யவும் அரசு அறிவுறுத்தியுள்ளது.

விபத்தையடுத்து ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமிர்தசரசில் இருந்து மனவாலா பகுதி வரை செல்லும் எட்டு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஐந்து ரயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன. பத்து ரயில்கள் இடையிலேயே நிறுத்தப்பட்டன. மேலும் ஐந்து ரயில்கள் பாதியிலிருந்து பயணத்தைத் தொடங்கும் என ரயில்வே துறை அறிவித்துள்ளது. அமிர்தசரசில் இருந்து மனவாலா பகுதி வரை சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் ரயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.

இந்நிலையில் புதிய தலைமுறையின் சார்பில் நிருபர் நேரில் விபத்து காரணம் குறித்து ஆய்வு செய்தார். இதில் விபத்திற்கான காரணங்கள் தெரியவந்துள்ளன.

காரணங்கள் :

தசரா கொண்டாட்டம் நடத்தப்பட்ட இடம் மிகவும் நெருக்கடியானது.

அங்கு அதிக மக்கள் கூடுவதற்கான சாத்தியங்கள் இல்லை.

அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் 15,000 பேர் கூடும் அளவிற்கு பெரிய மைதானம் உள்ளது.

ஆனால் அங்கு நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

தசரா கொண்டாட்டம் நடத்தப்படுவது தொடர்பாக ரயில்வே துறையிடம் உரிய அனுமதி பெறப்படவில்லை.

விபத்து இரட்டை தண்டவாளங்கள் மேடான பகுதி என்பதால், அதன்மீது ஏறி மக்கள் நிகழ்ச்சியை கண்டுகளித்துள்ளனர்.

அத்துடன் அங்கு நின்று கொண்டு செல்ஃபி மற்றும் வீடியோக்களை எடுத்துள்ளனர். 

ரயில் அதிவேகத்துடன் வந்துள்ளது. இதுதொடர்பாக பலமுறை அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் ரயிலின் வேகம் குறைக்கப்படவில்லை.

மக்கள் நின்ற இடத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் தண்டவாளப்பாதையில் வளைவு உள்ளது. அதனால் ரயில் ஓட்டுநர் மக்கள் கூடியிருந்ததை கவனிக்க இயலவில்லை.

ராவண பொம்மை கொளுத்தப்பட்டதால் ஏற்பட்ட புகையாலும், பணிப்பொழிவாலும் தண்டவாளத்தில் ரயில் வருவதை மக்களாளும், மக்கள் நிற்பதை ரயில் ஓட்டுநனராலும் காண இயலவில்லை.

பட்டாசு சத்தம் பலமாக வெடிக்க, ரயில் சத்தத்தை மக்கள் கேட்க இயலவில்லை.

விபத்து ஏற்படும் போது இரண்டு தண்டவாளங்களில் ரயில் வந்ததால், மக்கள் தப்பி ஓடுவதில் குழப்பம் ஏற்பட்டு சிக்கிக்கொண்டனர்.