கர்நாடகாவில் அதிருப்தி எம்எல்ஏக்கள் 17 பேரை மொத்தமாக சபாநாயகர் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இருப்பினும் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் எடியூரப்பா அரசு வெற்றி பெறும் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் ஆட்சியில் இருந்தபோது, அக்கட்சிகளைச் சேர்ந்த சில எம்எல்ஏக்கள் மற்றும் சுயேச்சைகள் தங்களின் பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர். இதனையடுத்து நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் - மஜத அரசு தோல்வி அடைந்ததை அடுத்து, குமாரசாமி தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின், பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரியது. ஆளுநர் அழைப்பை ஏற்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். நாளை எடியூரப்பா தன்னுடைய பெரும்பான்மையை கர்நாடக சட்டசபையில் நிரூபிக்க உள்ளார்.
இந்நிலையில் 14 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இதில் 11 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த எம்எல்ஏக்களும் அடங்குவர். ஏற்கெனவே அதிருப்தி எம்எல்ஏக்கள் 3 பேரை தகுதி நீக்கம் செய்து கர்நாடகா சபாநாயர் உத்தரவு பிறப்பித்திருந்தார். தற்போது மேலும் 14 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால், மொத்தமாக 17 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த 17 பேரும், நடப்பு சட்டப்பேரவையின் பதவிக்காலம் முடியும் வரை அதாவது 2023 வரை தேர்தலில் போட்டியிட முடியாது என சபாநாயகர் ரமேஷ் குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மொத்தமாக 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் நாளை நடைபெற உள்ள நம்பிக்கை வாக்கெடுப்பு எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்வோம்.
கர்நாடகா சட்டமன்றத்தில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 224. இதில் சபாநாயகரும் அடங்குவார். எம்எல்ஏக்களில் 17 பேரை சபாநாயகர் ரமேஷ்குமார் தகுதி நீக்கம் செய்திருக்கிறார். அதன்படி உறுப்பினர்களின் எண்ணிக்கை 207-ஆக குறைந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி சட்டமன்றத்தில் பாரதிய ஜனதா உறுப்பினர்களின் எண்ணிக்கை 105. காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி உறுப்பினர்களின் எண்ணிக்கை 100-ஆக உள்ளது. இதில் காங்கிரஸ் கட்சியில் 66, மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் 37 உறுப்பினர்களும் உள்ளனர். இவர்களுள் சபாநாயகரும் அடங்குவார்.
இவர்கள் தவிர்த்து ஒரு சுயேச்சை எம்.எல்.ஏவும், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள ஒருவரும் உள்ளனர். இதில் சுயேச்சை உறுப்பினரின் ஆதரவு பாரதிய ஜனதாவுக்கு கிடைப்பதால் அக்கட்சியின் பலம் 106-ஆக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி பெரும்பான்மையை நிரூபிக்க, 104 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. எடியூரப்பா அரசுக்கு 106 உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதால் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளே அதிகம் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.