இந்தியா

குடியரசுத் தலைவர் ஆட்சி என்றால் என்ன ?

குடியரசுத் தலைவர் ஆட்சி என்றால் என்ன ?

jagadeesh

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், குடியரசுத் தலைவர் ஆட்சி என்றால் என்ன என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம்.

இந்தியாவில் மாநில அரசு ஏதேனும் ஒரு காரணத்தால் கலைக்கப்பட்டால் அல்லது ‌இயங்க முடியாமல் இருந்தால் அங்கு மத்திய அரசின் கண்காணிப்பில் ஆட்சி நடைபெறும் என்பதை குறிப்பதே குடியரசுத் தலைவர் ஆட்சியாகும். குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 356 வழிவகை செய்கிறது.

சட்டப்பேரவையில் எந்தவொரு கட்சிக்கும்‌ அல்லது கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்காமல், ஆட்சியமைக்க இயலாத சூழலில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது தொடர்பாக, மாநில ஆளுநரே முடிவெடு‌த்து மத்திய அரசுக்கு பரிந்துரைப்பார். ஆளுநரின் பரிந்துரைக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும். அப்படித்தான் தற்போது மகாரஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் ஆட்சியின்போது, நிர்வாக அதிகாரங்கள் ஆளுநருக்கு மாற்றப்பட்டு அவரே ஆட்சி நடத்துவார். ‌தனது உதவிக்கு, ஆலோசர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ‌அதிகாரிகளை அவர் நியமித்துக் கொள்வார். குடியரசுத் தலைவர் ஆட்சியில், பொதுவாக மத்திய அரசின் கொள்கைகள் பின்பற்றப்படும். மகாராஷ்டிராவில் அடுத்த அரசு அமையும் வரை, மிகப்பெரிய கொள்கை முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது.

மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருப்பது இது முதல் முறை அல்ல.‌ ஏற்கெனவே 1980ல் ‌மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.1980-ஆம் ஆண்டில் சரத் பவார் முதலமைச்சராக இருந்தபோது, ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமைக்கப்பட்டது.

இதேபோல், 2014-ஆம் ஆண்டு பிரித்விராஜ் சவான் தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை தேசியவாத காங்கிரஸ் திரும்பப் பெற்றபோது, ஒரு மாதத்திற்கு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி‌ அமலில் இருந்தது.