இந்தியா

சத்தீஸ்கர் மாவோயிஸ்ட் தாக்குதலின் பின்புலம்: 'ஆபரேஷன் பிரஹர்' என்றால் என்ன?

webteam

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் - பாதுகாப்பு படையினர் இடையேயான மோதலுக்கு காரணமாக இருந்த 'ஆபரேஷன் பிரஹர்' பற்றி சற்றே விரிவாகப் பார்ப்போம்.

குற்றவாளிகள், சட்டவிரோத கூறுகள் அல்லது சட்டவிரோத மதுபான விற்பனைக்கு எதிரான நடவடிக்கைக்கு பல்வேறு மாநிலங்களின் காவல்துறையினர் பயன்படுத்தப்படும் குறியீட்டு பெயர்தான் 'ஆபரேஷன் பிரஹர்'. ஆனால் சத்தீஸ்கர், தெலுங்கானா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில் ஆபரேஷன் பிரஹருக்கு வேறு அர்த்தம் உள்ளது. மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போர் என்பதே அங்கு ஆபரேஷன் பிரஹருக்கு அர்த்தம்.

'ஆபரேஷன் பிரஹர்' என்றால் என்ன?

மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்கள் முன்வைக்கும் ஆயுத சவாலை சமாளிப்பதற்கான அரசாங்கத்தின் முக்கிய நடவடிக்கையின் ஒரு பகுதிதான் இந்த ஆபரேஷன் பிரஹர். இது 2017-இல் தொடங்கப்பட்டது. ஆபரேஷன் பிரஹரின் கீழ் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் போதுதான் சனிக்கிழமை நக்சல் கிளர்ச்சியாளர்களால் தாக்கியதில் படையினர் 22 பேர் உயிரிழந்தனர்; 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இப்படிப்பட்ட ஆபரேஷன் பிரஹருக்கு ஒரு சிறிய வரலாறு உள்ளது.

பி.எல்.ஜி.ஏ அல்லது நக்சல் ராணுவம்!

சிபிஐ-மாவோயிஸ்டுகள் 2001-ஆம் ஆண்டில் பாதுகாப்புப் படையினருடன் போரிடுவதற்காக 'பீப்பிள்ஸ் லிபரேஷன் கெரில்லா ஆர்மி' (பிஎல்ஜிஏ) என்று அழைக்கப்படும் ஆயுதப் போராளிகளின் குழுவை ஏற்படுத்தியது. பி.எல்.ஜி.ஏ சத்தீஸ்கர் மற்றும் பிற நக்சல் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் பாதுகாப்புப் படையினர் மீது பல கொடிய தாக்குதல்களை நடத்தி இருக்கின்றது. 2020 டிசம்பரில், பி.எல்.ஜி.ஏ உருவாகிய 20-வது ஆண்டைக் குறிக்கும் வகையில் டிசம்பர் 1, 2020 முதல் டிசம்பர் 1, 2021 வரை ஓர் ஆண்டு கால நடவடிக்கையை அறிவித்தது.

அரசு பாதுகாப்புப் படையின் நடவடிக்கை காரணமாக தாங்கள் வலிமை இழந்த பகுதிகளில் மீண்டும் தங்களின் காலடி மற்றும் ஆயுத வலிமையை ஏற்படுத்த வேண்டும் என்பதே அந்த ஓர் ஆண்டு கால நடவடிக்கையாக அறிவித்தது பி.எல்.ஜி.ஏ.

பி.எல்.ஜி.ஏ ஆலோசனைப்படி சிபிஐ-மாவோயிஸ்டுகளின் மத்திய ராணுவ ஆணையம் (சிஎம்சி) இந்த முடிவை எடுத்தது. அதனடிப்படையிலேயே நடந்து முடிந்த தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டிருக்கும் என சந்தேகிக்கப்படுகிறது.

இதுவரை இந்த பி.எல்.ஜி.ஏ மத்திய மற்றும் மாநிலப் படைகளின் 3,000 படையினர், 222 அரசியல்வாதிகள், 1,100-க்கும் மேற்பட்ட போலீஸ் அதிகாரிகளை கொன்றுள்ளதாக அந்த அமைப்பே ஒப்புக்கொண்டுள்ளது.

அரசாங்க நடவடிக்கை என்ன?

பி.எல்.ஜி.ஏ உருவானதிலிருந்து, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான செயல்பாடுகளும் அரசால் எடுக்கப்பட்டு வந்துள்ளன. 2004 முதல் 2009 வரை நக்சல் பாதிப்புக்குள்ளான கிராமங்களை பாதுகாப்பதற்காகவும் பாதுகாப்புப் படையினரால் 'சல்வா ஜூடும்' இயக்கம் ஆரம்பிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இதில்பாதுகாப்பு படையினர் மீது பல சர்ச்சைகள் உருவானது. சர்ச்சைகளைத் தொடர்ந்து, மன்மோகன் சிங் அரசாங்கம் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த ஆண்டான 2009-ல் 'சல்வா ஜூடும்' நடவடிக்கையை கைவிட்டது. அதேநேரத்தில், 'ஆபரேஷன் கிரீன் ஹன்ட்' (பசுமை வேட்டை) ஆரம்பிக்கப்பட்டு, அதன்படி நக்சல்களை நேரடியாக எதிர்க்கும் நடவடிக்கை தொடங்கப்பட்டது.

ஆபரேஷன் கிரீன் ஹன்ட் என்பது நக்சல் கிளர்ச்சியாளர்களை காடுகளுக்குள் மறைந்திருக்கும் இடங்களில் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாகும். இந்த நடவடிக்கை நக்சல் கிளர்ச்சிக்கு கடுமையான அடியைக் கொடுத்தது. ஆந்திராவில் இருந்த நக்சல்கள் இந்த நடவடிக்கையால் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட சிபிஐ-மாவோயிஸ்ட் அமைப்பு அங்கு இல்லை எனும் அளவுக்கு அங்கிருந்தவர்கள் இந்த நடவடிக்கையால் கொல்லப்பட்டனர்.

இதன்பின் 2017-ல் தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசால் 'ஆபரேஷன் பிரஹர்' தொடங்கப்பட்டது. இந்த 'ஆபரேஷன் பிரஹர்' நடவடிக்கையின் கீழ் தான் நக்சல்களால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், குறிப்பாக சத்தீஸ்கரில் காடுகளுக்குள் பதுங்கியிருக்கும் நக்சல் கிளர்ச்சியாளர்களை தேடி, காடுகளின் முக்கிய பகுதிகளுக்கு பாதுகாப்புப் படையினர் நுழைந்தனர். இந்த நடவடிக்கையிலும் நக்சல்களுக்கு சேதம் மிகவும் அதிகமாக இருந்தது.

இதனால் அவர்கள் தங்கள் தாக்குதல்களை நிறுத்தி, ஆபரேஷன் பிரஹரை அரசாங்கம் கைவிட்டு காடுகளில் தேடி வரும் பாதுகாப்புப் படையினரை திரும்பப் பெற வேண்டும் என்று சிபிஐ-மாவோயிஸ்ட் கோரிக்கை வைத்தது. கொரோனா காரணமாக கடந்த ஒரு வருடமாக நக்சல்கள் எந்த வித தாக்குதல்களையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் தற்போது ஒரு கொடூர தாக்குதல்களை மாவோயிஸ்டுகள் மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்:

தகவல் உறுதுணை: India Today