இந்தியா

மாஸ்டர் ஆஃப் த ரோஸ்டர் – என்றால் என்ன?

மாஸ்டர் ஆஃப் த ரோஸ்டர் – என்றால் என்ன?

webteam

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே மாஸ்டர் ஆஃப் த ரோஸ்டர் என்று உச்சநீதிமன்றம் இன்று மீண்டும் உறுதி செய்திருக்கிறது. மாஸ்டர் ஆஃப் த ரோஸ்டர் – என்றால் என்ன? உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் அதிகாரங்கள் என்ன? – பார்ப்போம்.

உச்சநீதிமன்றத்தின் பிற நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதிக்கும் இடையே உள்ள மிகப்பெரிய அதிகார வேறுபாடு தலைமை நீதிபதிதான் வழக்குப் பட்டியலைத் தயாரிக்கிறார் என்பதாகும். உச்ச நீதிமன்ற நடைமுறை, செயல்முறை மற்றும் அலுவலக நடைமுறை விதிகள் 2017-ன்படி; வழக்குகளின் பட்டியலானது தலைமை நீதிபதியின் உத்தரவின் பேரில் உச்ச நீதிமன்றப் பதிவாளரால் தயாரிக்கப்படுகிறது. இதன் மூலம் தலைமை நீதிபதிதான் ’ஒரு வழக்கின் விசாரணை எப்போது?, எந்த அமர்வு? யார் யார் நீதிபதிகள்?’ - என அனைத்தையும் முடிவு செய்வார். இந்தச் சிறப்பு உரிமையே ‘மாஸ்டர் ஆஃப் த ரோஸ்டர்’ – என்று அழைக்கப்படுகிறது.

கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை ஏற்ற அரசியல் சாசன அமர்வு இதற்கு உரிய தீர்ப்பை அளித்தது. இதன் மூலம் முன்பு உச்சநீதிமன்ற நீதிபதிகளிடையே இருந்த அதிகாரச் சமநிலை மாறி, தலைமை நீதிபதியின் அதிகாரம் உயர்ந்தது. இந்தத் தீர்ப்பும், அதனைத் தொடர்ந்து நடந்த வழக்கு ஒதுக்கீடுகளும் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளுக்கிடையே கருத்து முரண்பாடுகளைத் தோற்றுவித்தன. கடந்த ஜனவரி 12 அன்று வரலாற்றில் முடன்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்த உச்சநீதிமன்றத்தின் 4 நீதிபதிகள், இது தொடர்பான தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் மாஸ்டர் ஆஃப் த ரோஸ்டர் அதிகாரத்தை எதிர்த்து மத்திய சட்டத்துறை முன்னாள் அமைச்சர்  சாந்தி பூஷன் தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது. இந்த வழக்கை விசாரித்த, நீதிபதிகள் சிக்ரி மற்றும் அசோக் பூஷண் அமர்வு,நீதிபதிகளுக்கு எல்லாம் தலைமை நீதிபதி தான் தலைவர். வெவ்வெறு அமர்வுகளுக்கு வழக்குகளை ஒதுக்கவும், நீதிமன்ற நிர்வாகத்தில் தலைவராக செயல்படவும் அவருக்கு அதிகாரங்கள்உள்ளன.             

நீதித்துறை குறித்து மக்களுக்கு சந்தேகம் வந்தால், அது நீதி அமைப்புக்கு அச்சுறுத்தலாகிவிடும். நீதித்துறையின் செய்திதொடர்பாளராகவும், தலைவராகவும் தலைமை நீதிபதியே செயல்படுவார் – என்று கூறி உள்ளது. இந்தத் தீர்ப்பின் மூலம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியின் அதிகாரம் மீள் உறுதி செய்யப்பட்டு உள்ளது.