இந்தியா

குதிரை பேரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

குதிரை பேரத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா..?

Rasus

கர்நாடகா மாநில முதலமைச்சராக எடியூரப்பா இன்று பதவியேற்றுக் கொண்டார். பல்வேறு சர்ச்சைகள், பிரச்னைகளுக்கு மத்தியில் அவர் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இதனிடையே  பெரும்பான்மையை நிரூபிக்க எடியூரப்பாவிற்கு ஆளுநர் வஜூபாய் வாலா 15 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார். இந்நிலையில் குதிரை பேரம் என்ற வார்த்தையை தவறாமல் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். குதிரை பேரம் என்றால் என்ன..? அது எப்படி வந்தது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.

அண்மையில் நடைபெற்று முடிந்த கர்நாடகா சட்டப்பேரவைத் தொகுதியில் பாஜக 104 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி 78 தொகுதிகளும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளையும் தன்வசமாக்கின. மெஜாரிடிக்கு தேவையான 113 தொகுதிகள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கவில்லை. இதனிடையே மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு தந்தது. ஆனால் ஆட்சியமைக்க தங்கள் தரப்பிற்கு அழைப்பு விடுக்க வேண்டும் என கர்நாடகா முதலமைச்சர் வேட்பாளர் எடியூரப்பா ஆளுநரை சந்தித்தார். அதேபோல காங்கிரஸ்- மதச் சார்பற்ற ஜனதா தளம் ஒன்றாக ஆளுநரை சந்தித்து தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என வலியுறுத்தினர். ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் பாஜகவிற்கு 104 இடங்கள் இருந்தன. அதேசயமம் காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 115 இடங்களுடன் ஆளுநர் அழைப்பிற்கு காத்திருந்தது. ஆனால் ஆளுநர் அழைத்தது பாஜகவை. இதனையடுத்து பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் உச்சநீதிமன்றத்தை நாடியது. ஆனால் எடியூரப்பா ஆட்சியமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்து வழக்கை நாளைக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில் தற்போது குதிரை பேரம் என்ற வார்த்தை கர்நாடகா அரசியலில் மிகப் பிரபலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கெனவே குதிரை பேரம் என்ற வார்த்தையை பல்வேறு மாநில அரசியலில் கேள்விப்பட்டிருப்போம். எனவே குதிரை பேரம் என்ற வார்த்தையை ஏன் பயன்படுத்துகின்றனர் என்று இங்கே பார்க்கலாம்.

தற்போது கர்நாடகாவின் பாஜக பலம் 104 தொகுதிகள் மட்டுமே. ஆனால் 15 நாட்களுக்குள் எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபித்தாக வேண்டும். அப்படியானல் அவருக்கு எம்எல்ஏக்கள் பலம் 113 வேண்டும். இல்லையென்றால் அவர்களின் ஆட்சி கவிழ்ந்துவிடும். இந்த நேரத்தில் ஆட்சியை தக்க வைக்க, பெரும்பான்மையை நிரூபிக்கும் பொருட்டு பாஜக, காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க விலைக்கு வாங்க முயற்சிக்கலாம். பதவி தருகிறோம். அந்தஸ்து தருகிறோம் என அவர்கள் ஆசைவார்த்தைகள் காட்டலாம். இத்தகைய செயலே குதிரை பேரம் என சொல்லப்படுகிறது. அதேசமயம் தங்கள் தரப்பு எம்எல்ஏக்களை காக்கும்பொருட்டு காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தங்கள் கட்சி எம்எல்ஏக்களை சொகுசு விடுதியில்தங்கவைத்துள்ளது. இதனையும் மீறி பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடலாம்.

குதிரை பேரம் என்பது அமெரிக்க ஆங்கிலத்தில், புத்திசாலிதனத்துடன் பேரம் பேசுதலையே குறிக்கும். அரசியல் கட்சிகள் பிரச்னைகளை புரிந்துகொண்டு அதற்கேற்ப புத்திசாலித்தனமான முறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதை இது குறிக்கிறது. ஆனால் பிரிட்டிஷ் ஆங்கிலம் இதனை வேறு வார்த்தையில் குறிப்பிடுகிறது. ‘ஏளனமான செயல்’ என பிரிட்டிஷ் ஆங்கிலம் குறிப்பிடுகிறது. காரணம், மக்களுக்கு தெரியாமல் அவர்களுக்குள் ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்ள பல்வேறு சமாதனாங்களை செய்துகொள்வதாக தெரிவிக்கிறது.

குதிரை பேரம் என்ற வார்த்தை 1820-ஆம் ஆண்டிலிருந்தே புழக்கத்தில் இருந்து வருகிறது. முந்தைய காலத்தில் குதிரை வியாபாரிகள் பலரும் தங்களது குதிரைகளை விற்கவும் வாங்கவும் புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பேச்சவார்த்தையில் ஈடுபடுவார்கள். இதிலிருந்து நாளடைவில் ‘குதிரை பேரம்’ என்ற வார்த்தை வந்ததாக கூறப்படுகிறது. ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்த நேர்மையற்ற முறையில் நடைபெறும் விவாதம் இதுவாகும். நம்பிக்கை வாக்கெடுப்பு மட்டுமல்ல ஒரு சில மசோதாக்களை நிறைவேற்றவும் சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்றத்திலும் கூட இக்குதிரை பேரம் நடைபெறவதாகவும் சொல்லப்படுகிறது.