இந்தியா

குடியுரிமை திருத்தச் சட்டம் VS தேசிய குடிமக்கள் பதிவேடு... என்ன வேறுபாடு..?

குடியுரிமை திருத்தச் சட்டம் VS தேசிய குடிமக்கள் பதிவேடு... என்ன வேறுபாடு..?

webteam

சில நாட்களாக கடும் எதிர்ப்புக்கு இரண்டு விஷயங்கள் உள்ளாகியுள்ளன. ஒன்று; குடியுரிமை திருத்தச் சட்டம். மற்றொன்று தேசிய குடிமக்கள் பதிவேடு. இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன? ஏனெனில் இந்த இரண்டிற்குமான வேறுபாடுகள் என்ன என்பதே பலரும் உணராமல் உள்ளனர். 

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது மத அடிப்படையிலானது. பாகிஸ்தான், ஆப்கான், வங்கதேச முஸ்லிம்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை அளிக்க இது வழி ஏற்படுத்தி தருகிறது. ஆனால், தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது மத அடிப்படையிலானதல்ல. அது சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் சம்பந்தப்பட்டது. சாதி, மதம், ஏழை, பணக்காரர் என வேறுபாடின்றி சட்டவிரோதமாக குடியேறியவர்களை வெளியேற்றுவதே இதன் பிரதான நோக்கமாக உள்ளது.

இந்தக் குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது நாடு முழுமைக்குமானது. சில மாநிலங்கள் எதிர்த்தாலும், மத்திய அரசு நினைத்தால் இது அமல்படுத்தக்கூடியது என்பதே அரசியல் சட்ட நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது. ஆனால், தேசிய குடிமக்கள் பதிவேடு என்பது அசாம் மாநிலத்துடன் மட்டுமே தொடர்புடையது. அசாமின் பாரம்பரிய அடையாளங்களைப் பாதுகாப்பதற்காக உச்சநீதிமன்ற உத்தரவின்படி இது கொண்டுவரப்பட்டுள்ளது.

“குடியுரிமை திருத்த சட்டம், இந்திய முஸ்லிம்களுக்கு உரிமை மறுக்கக்கூடியது என்ற நோக்கில் தகவல் பரப்பப்படுகிறது. ஆனால், அதில் உண்மையில்லை. தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் இணைத்து குடியுரிமை திருத்த மசோதா மீது சிலர் இவ்வாறு வதந்தி பரப்புகிறார்கள்” என்பதே ஆளும் தரப்பினரின் வாதமாக இருந்து வருகிறது.

குடியுரிமை திருத்த சட்டத்தால் பாகிஸ்தான், ஆப்கான், வங்கதேச முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளில் இருந்து சிறுபான்மையினரான மற்ற மதத்தினர் இந்தியாவில் குடியேற முடியும். அதேநேரம், இந்தச் சட்டத்தால் இந்திய முஸ்லிம்களின் குடியுரிமைக்கு எந்த ஆபத்துமில்லை. தேசிய குடிமக்கள் பதிவேடு கூட, நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டாலும் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றுமே தவிர, இந்திய குடிமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்கிறனர்.

இப்போது நடைபெறும் போராட்டமும் இரண்டு வகையானது. வடகிழக்கு மாநிலங்களில் நடப்பவை குடியுரிமை திருத்த சட்டத்தின் வாயிலாக புதிய குடியுரிமை பெறக்கூடியவர்களால் தங்கள் மொழி, கலாசார அடையாளம் மாறிவிடும் என்பதற்காக. கேரளா, மேற்கு வங்கம், டெல்லி உள்ளிட்ட இடங்களில் நடக்கும் போராட்டங்கள், குடியுரிமை திருத்த சட்டத்தில் முஸ்லிம்கள் விடுபட்டுள்ளது அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்பதற்காகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டுடன் இணைத்துப் பார்த்தும் நடந்து வருகின்றது.

எனவே, குடியுரிமை திருத்த சட்டத்தாலோ, தேசிய குடிமக்கள் பதிவேட்டாலோ இந்திய முஸ்லிம்களுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்பதை விளக்கி நாடு முழுவதும் பரப்புரை செய்ய பாரதிய ஜனதா கட்சி திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.