இந்தியா

காங்கிரஸ்-ஐ குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசிய 'சட்டப்பிரிவு 356’ சொல்வது என்ன? முழு விவரம்!

webteam

“இந்தியாவில் 356-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி மாநிலங்களில் 90 முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கலைத்துள்ளது” என பிரதமர் மோடி தெரிவித்துள்ள நிலையில், அந்தச் சட்டப்பிரிவு குறித்து பலரும் பல கருத்துகளை தெரிவித்துவருகின்றனர். உண்மையில் அந்த சட்டப்பிரிவு என்ன சொல்கிறது என்பதை, இக்கட்டுரையில் விரிவாக காண்போம்.

இன்றைய தினம் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்தார். அப்போது பேசிய அவர், “இந்தியாவில் 356வது சட்டப் பிரிவைப் பயன்படுத்தி மாநிலங்களில் 90 முறை காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கலைத்துள்ளது. அந்தப் பிரிவைப் பயன்படுத்தி இதை 50 முறை செய்தவர் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி” எனக் குறிப்பிட்டார். இதையடுத்து, 356-வது சட்டப்பிரிவு தற்போது பேசுபொருளாகி இருக்கிறது. 356-வது சட்டப்பிரிவு என்றால் என்ன என்பது குறித்து இங்கு பார்ப்போம்.

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 356வது பிரிவு, மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளைக் கலைத்துவிட்டு அங்கு நேரடியாக குடியரசுத் தலைவரின் ஆட்சியை அமல்படுத்துவதற்கு வழிவகைசெய்கிறது. ஆளுநரின் அறிக்கையின் அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்படும். இச்சட்டம் உருவாக அடிப்படையாக இருந்தது, இந்திய அரசியலைமைப்பு சட்டம் 1935 பிரிவு 93. இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே, 1935ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்தின் 93வது பிரிவின்படி மாகாண அரசுகளைக் கலைக்க முடியும்.

1935 இந்திய அரசு சட்டத்தின் 93 இன் பிரிவில் இந்தியா விடுதலை அடைவதற்கு முன்பே பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் மாகாணங்களில் நெருக்கடி நிலையை பிரகடனப்படுத்த ஆளுநருக்கு அதிகாரத்தை வழங்கி இருந்தது. ஆனால், நாடு விடுதலை அடைந்த பிறகு, இந்தியா தனக்கான அரசியலமைப்பு சட்டத்தை எழுதும் போது இந்த 93 வது சட்ட பிரிவே 356 வது பிரிவாக சேர்க்கப்பட்டுள்ளது.

356வது பிரிவு மாநில அரசின் செயல்பாடுகள் சரியில்லை, சட்ட ஒழுங்கு, நிர்வாகமின்மை, மாநில அரசின் கட்டுக்குள் இல்லாமை, விதிமுறைகளை தவறியது போன்ற காரணங்களால் மாநில அரசின் ஆட்சியை கலைத்து ஆளுநரின் ஆட்சியை அமல்படுத்த இச்சட்டம் வழிவகை செய்கிறது. அதன்படி, ஒரு மாநிலத்தை முழுமையாகவோ அல்லது சில துறைகளையோ ஜனாதிபதியின் ஆட்சிக்குகீழ் கொண்டுவரலாம்.

அதனை தொடர்ந்து கலைக்கப்பட்ட அந்த அரசுக்கு பதிலாக குடியரசு தலைவர் ஆட்சியை அந்த மாநிலத்தில் நியமித்து, குடியரசுத் தலைவரின் ஆலோசனைபடி அந்த கலைக்கப்பட்ட மாநிலத்தின் ஆளுநர் அந்த மாநிலத்தை நிர்வகிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருப்பார். குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்ட மாநிலத்தின் நிர்வாக அதிகாரங்கள் ஆளுநருக்கு மாற்றப்பட்டு அவரே ஆட்சி நடத்துவார். ஆளுநர் தனது உதவிக்காக ஆலோசகர்கள், ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகளை நியமித்து மாநில ஆட்சியை வழிநடத்துவார். பொதுவாக மத்திய அரசின் கொள்கைகளே பின்பற்றப்படும். மிகப்பெரிய கொள்கை முடிவுகள் எதுவும் எடுக்க முடியாது.

ஜனாதிபதி ஆட்சி நிறுவப்பட்ட பிறகு, அதன் ஆறு மாதத்திற்குள் தேர்தல் நடத்தி புதிய அரசை தேர்ந்தெடுக்கும் உரிமை உள்ளது. அதேநேரத்தில், இந்த ஆறு மாதம் என்பது நாடாளுமன்றத்தின் ஒப்புதலோடு ஒவ்வொரு ஆறு மாதம் என்று மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படலாம். இருப்பினும், கடந்த காலங்களில், குறிப்பிட்ட சூழ்நிலைகளால் ஜனாதிபதி ஆட்சி சில ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதல்முறையாக குடியரசுத் தலைவர் ஆட்சி 1959ஆம் ஆண்டு கேரளாவில் அமல்படுத்தப்பட்டது.

அப்போது பிரதமராக இருந்தவர் ஜவஹர்லால் நேரு. அதற்குப் பிறகு பல மாநிலங்களில் 100க்கும் மேற்பட்ட முறை குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பிரதமராக நேரு இருந்தபோது 7 முறையும் இந்திரா காந்தியின் ஆட்சிக் காலத்தில் 50 முறையும் (முதல் தடவை 33, 2வது தடவை 17 முறை) மாநிலங்களின் ஆட்சி கலைக்கப்பட்டுள்ளது. தவிர, பி.வி.நரசிம்மராவ், வாஜ்பாய் காலத்தில்கூட மாநிலங்களின் அரசுகள் கலைக்கப்பட்டுள்ளன.

1989இல் கர்நாடக முதல்வராக இருந்த எஸ்.ஆர்.பொம்மையின் ஆட்சி 356வது பிரிவைப் பயன்படுத்தி கலைக்கப்பட்டது. இந்த ஆட்சி கலைப்பும், அதன்பின் நடந்த சட்டப் போராட்டமும் இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாக இருந்தது. இந்த வழக்கை, உச்சநீதிமன்ற நீதிபதி குல்தீப் சிங் தலைமையிலான ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சாசன அமர்வு விசாரித்து 1994 மார்ச் 11 அன்று தீர்ப்பை வழங்கியது.

அப்போது, ”மாநில அரசுக்கு பெரும்பான்மை இல்லையெனக் கூறப்பட்டால், பெரும்பான்மையை நிரூபிக்க வாய்ப்பு அளிக்க வேண்டும். குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்பாவது எச்சரிக்கை விடுக்க வேண்டும். 356வது பிரிவின் கீழ் குடியரசுத் தலைவர் அளிக்கும் ஆணை நீதிமன்றத்தின் ஆய்வுக்கு உட்பட்டது” எனத் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு அரசியல் காரணங்களுக்காக மாநில அரசுகளை மத்திய அரசு கலைப்பது வெகுவாகக் குறைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்