இன்று வெளியுறவுத் துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, கர்னல் சோஃபியா குரேஷி மற்றும் விங் காமாண்டர் வியோமிகா சிங் போன்றோர் செய்தியாளர்களைச் சந்தித்து ஆபரேஷன் சிந்தூர் குறித்து காலை விளக்கமளித்தனர். அப்போது பேசிய விக்ரம் மிஸ்ரி, ஜம்மு காஷ்மீர் மற்றும் பஞ்சாபில் பொதுமக்களைக் குறிவைத்து பாகிஸ்தான் தொடர்ச்சியாகத் தாக்க்குதல் நடத்தி வருவதாகத் தெரிவித்தார்.
மறுமுனையில், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர், “இந்தியா தாக்குதலை நடத்தினால் நாங்களும் தொடர்வோம். இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக பரிசீலிப்போம். பொறுமையை இழந்துவிட்டதால் தாக்குதல் நடத்தினோம்” எனத் தெரிவித்தார். அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடமும் அதே கருத்தை இஷாக் தர் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில்தான் இரு நாடுகளும் தற்போது தாக்குதல் நிறுத்தத்திற்கு முழுமையாக ஒப்புக்கொண்டு, தாக்குதலை நிறுத்தியுள்ளது. இவ்விவகாரத்தில் இதுவரை என்ன நடந்தது என்பதை இங்கே அறியலாம்...
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளிலுள்ள பயங்கவரவாதிகளின் கட்டமைப்புகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில் பயங்கரவாதிகளின் உட்கட்டமைப்புகள் அனைத்தும் தகர்க்கப்பட்டன. மேலும், 100 பயங்கரவாதிகள் வரை கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானும் இந்தியாவில் பல பகுதிகளில் ட்ரோன் தாக்குதலை மேற்கொள்ள முயன்றது. அதாவது, வெள்ளிக்கிழமை இரவு ஜம்மு மற்றும் காஷ்மீர் முதல் குஜராத் வரையில் 26 இடங்களில் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதலை நடத்த முயன்றது. ஆனாலும், இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகளால் பாகிஸ்தானின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டன.
இந்த ராணுவ நடவடிக்கைகள் தொடர்ச்சியாக நான்காவது நாளாக இன்றும் நீடித்தது. இது இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை இல்லாத அளவிற்கு பதற்றமான சூழலை ஏற்படுத்தியதாக கருதப்படுகிறது. ஒவ்வொரு நாடும் எதிர்முனை நாட்டை ஆக்கிரமிப்பாளராக சித்தரித்து, அவர்களின் தாக்குதலால் தங்கள் நாட்டின் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகக் குற்றம்சுமத்தி வந்தன. அதுமட்டுமின்றி, ஷெல் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இரு நாடுகளும் முழுவீச்சில் மேற்கொண்டு வந்த நிலையில், இந்த தாக்குதல்கள் முழுமையான போரை எட்டி வருகிறது என்று ஆங்கில ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வந்தன.
மிக முக்கியமாக அணு ஆயுதங்களை குறித்து முடிவுகளை எடுக்கும் தேசிய கட்டளை ஆணைய கூட்டத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் கூட்டியதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அணு ஆயுதங்கள் உட்பட தேசிய பாதுகாப்பு விஷயங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் தேசிய கட்டளை ஆணையத்திற்குத்தான் இருக்கிறது. ஆனாலும், இஷாக் டார் இந்நிகழ்வை உறுதிப்படுத்தவில்லை. அதேவேளையில், போர் சூழ்நிலையில் எங்களுக்கு அனைத்து விருப்பங்களும் உள்ளன எனத் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலோசனைக் கூட்டம் இரு நாடுகளுக்கும் இடையே மேலும் பதற்றங்களை அதிகரித்தது. இந்தியா தற்போது 180க்கும் மேற்பட்ட அணு ஆயுதங்களைக் கொண்டதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவின் அணுசக்திக் கோட்பாடுகளில் முதலாவது, இந்தியா தனது எதிரிகள் மீது அணுசக்தி தாக்குதல்களை நடத்தும் முதல் நாடாக இருக்காது. எதிரி நாடு அணு ஆயுதங்களைக் கொண்டு முதலில் தாக்கினால் மட்டுமே அணு ஆயுதங்களைக் கொண்டு இந்தியா பதிலளிக்கும்.
அணு சக்தி அல்லாத நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாது. அதுமட்டுமின்றி இந்தியாவின் அணு ஆயுத நிலைப்பாடு என்பது தடுப்பு நடவடிக்கையை மையமாகக் கொண்டது. அதாவது மற்ற நாடுகள் இந்தியாவின் மீது அணு ஆயுதத் தாக்குதல் நடத்துவதை தடுப்பதற்கான மையமாகக் கொண்டது. மறுமுனையில், பாகிஸ்தானின் அணு ஆயுதக் கொள்கை என்பது தெளிவில்லாத ஒன்று என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. ஏனெனில், அக்கொள்கைகள் மோதலின்போது எந்த ஒரு கட்டத்திலும் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கான நெகிழ்வுத் தன்மையை அளிக்கிறது.
சமீபத்திய மதிப்பீடுகளின்படி, இரு நாடுகளும் 400 முதல் 500 அணு ஆயுதங்களைக் கொண்டுள்ளன. இந்த எண்ணிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் சற்றே அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. போர் பதற்றங்கள் அதிகரித்து ஏதேனும் ஒரு நாடு அணு ஆயுதங்களை உபயோகித்தால் அதன் விளைவுகள் நம் கற்பனைக்கும் எட்டாத அளவிற்கு இருக்கும் என்பதும் மறுக்க முடியாதது.
இதை கருத்தில் கொண்டு, உலகநாடுகள் பலவும் இந்தியா பாகிஸ்தான் என இரு நாடுகளும் நிதானத்தைக் கடைபிடிக்குமாறு வலியுறுத்தின. குறிப்பாக ஜி7 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ‘அதிகரித்து வரும் விரோதங்களுக்கு மத்தியில் இந்தியாவும் பாகிஸ்தானும் நேரடிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்’ என வலியுறுத்தினர். மேலும், இரு தரப்பிலுமுள்ள பொதுமக்களின் பாதுகாப்பில் நாங்கள் ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளோம் எனத் தெரிவித்துள்ள ஜி7 நாடுகள், நிகழ்வுகளை தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம் என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில்தான், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நீண்ட இரவு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு ஒப்புக்கொண்டதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று இன்று மாலை பதிவிட்டார்.
இதைத்தொடர்ந்து, மத்திய வெளியுறவுத் துறைச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, “இந்தியா - பாகிஸ்தான் ராணுவத் தளபதிகள் மாலை 3.30 மணிக்கு தொலைபேசியில் பேசினர். இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணியில் இருந்து போர் நிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது” எனத் தெரிவித்து தாக்குதல் நடப்பது நிறுத்தப்பட்டிருப்பதை உறுதிசெய்தார்.