பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத அமைப்புகளின் இடங்களைக் குறிவைத்து இந்திய ராணுவத்தினர் அதிரடி தாக்குதல் நடத்தி உள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட நடவடிக்கையின்கீழ், நள்ளிரவு 1.30 மணியளவில், இந்திய தரைப்படையும், விமானப்படையும் சேர்ந்து பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதலை நடத்தின. இந்தியாவில் பயங்கரவாத செயல்களுக்கு உதவிவந்த ஜெய்ஷ் இ முஹம்மது, லஷ்கர் இ தொய்பா தலைவர்களின் தலைமையகங்களையும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்த தாக்குதலை உறுதிப்படுத்தும் விதமாக, பஹல்காம் தாக்குதலுக்கு நீதி நிலைநிறுத்தப்பட்டுவிட்டதாகவும், ஜெய் ஹிந்த் என்றும் குறிப்பிட்டு இந்திய ராணுவம் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டது. இந்த தாக்குதலில், முப்படைகளின் ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், தாக்குதலில் 9 இடங்களில் இருந்த இலக்குகளும் வெற்றிகரமாக தகர்க்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மிகுந்த பொறுப்புணர்வுடன் தாக்குதல் நடத்த வேண்டிய நிலைகளைத் தேர்வு செய்து தாக்குதல் நடத்தியதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. ராணுவத்தின் இந்த ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைகளை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு 8 மணி முதல் கண்காணித்தார்.
இந்திய வான்பரப்பில் இருந்தவாறு பஹவல்பூர், கோட்லி, முசாபராபாத் பகுதிகளைக் குறிவைத்து இந்திய படைகள் தாக்குதல் நடத்தி இருப்பதாக பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சரியான நேரம் மற்றும் இடத்தை தேர்வுசெய்து உரிய பதிலடி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதன் தொடர்ச்சியாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அவசர நிலைப் பிரகடனம் செய்யப்பட்ட நிலையில், லாகூர், சியால்கோட் விமான நிலையங்களை 48 மணிநேரம் மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கை குறித்த விவரங்களை காலை 10 மணிக்கு பாதுகாப்புத் துறை முறைப்படி வெளியிடுகிறது. அதன் தொடர்ச்சியாக, காலை 11 மணிக்கு டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் கூட உள்ளது. இதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையே, பாகிஸ்தானிலும், காலை 11 மணிக்கு அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.