Wrestlers protest against Brij Bhushan
Wrestlers protest against Brij Bhushan Twitter
இந்தியா

‘பிரஜ் பூஷனை தனிமையில் சந்திப்பதை தவிர்க்க நாங்கள் இதை செய்தோம்..’ எஃப்.ஐ.ஆரில் பகீர் தகவல்கள்

Justindurai S

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மல்யுத்த வீராங்கனைகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதையடுத்து அவரை கைது செய்யக் கோரி ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக், வினேஷ் போகத், மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா உள்ளிட்டோர் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி முதல் டெல்லியில் போராட்டம் நடத்தி வந்தனர். இவர்கள் கடந்த 28-ம் தேதி, புதிய நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல முயன்றனர். அப்போது அவர்களை போலீஸார் கைது செய்தனர்.

Protesting wrestlers

டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்துக்காக போடப்பட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டன. இதையடுத்து தாங்கள் பெற்ற பதக்கங்களை கங்கை நதியில் வீசப் போவதாக மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அறிவித்தனர். இதற்காக ஹரித்துவார் சென்ற இவர்களிடம் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பதக்கங்களை ஆற்றில் வீசும் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதற்கிடையே பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது ஒரு மைனர் உட்பட ஏழு பேர் புகார் அளித்ததாகவும், ஏப்ரல் 28ஆம் தேதி 2 எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி போலீஸ் தரப்பில் கூறப்பட்டு உள்ளது. பிரிஜ்சிங் பூஷன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 354, 354(ஏ), 354(டி) மற்றும் 34 ஆகியவற்றின் கீழ் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பிரிஜ் பூஷன் பெயரோடு இந்திய மல்யுத்த சம்மேளன செயலாளர் வினோத் தோமரின் பெயரும் எஃப்.ஐ.ஆரில் இடம்பெற்றுள்ளது.

Brij Bhushan

எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி புகார் அளித்த வீராங்கனைகளில் ஒருவர், “குற்றம் சாட்டப்பட்டவரை (பிரிஜ் பூஷன் சரண் சிங்) தனியாகச் சந்திப்பதைத் தவிர்ப்பதற்காக வீராங்கனைகள் அறைகளை விட்டு வெளியேறும் போதெல்லாம் குழுவாகப் பயணம் செய்தனர். ஒரு சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியின் போது, மூச்சைப் பரிசோதிக்கும் சாக்கில் தகாத முறையில் தொட்டு பிரிஜ் பூஷன் சரண் சிங் என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார். இதுவே என் வாழ்க்கையில் நான் எதிர்கொண்ட முதல் பாலியல் வன்கொடுமை” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் விளையாட்டில் ஏற்படும் காயங்களுக்கான சிகிச்சைக்கான செலவை, மல்யுத்த கூட்டமைப்பில் இருந்து தருவதற்கு ஈடாக, பாலியல் ரீதியாக தன்னிடம் நெருக்கமாக நடந்துக் கொள்ள வேண்டும் என்று பிரிஜ் பூஷன் தங்களை மிரட்டியதாக, மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Brij Bhushan

மல்யுத்த வீராங்கனைகளை தேவையில்லாமல் தொடுவது, மைனர் வீராங்கனை ஒருவரிடம் மிக மிக மோசமாக நடந்துகொண்டது (சென்சிடிவிட்டி கருதி, இந்த இடத்தில் அக்கடுமையான வார்த்தைகள் பயன்படுத்தப்படவில்லை) மற்றும் அந்தப் பெண்ணை பின்தொடர்வது உள்ளிட்ட பல பாலியல் துன்புறுத்தல்களில் பிரிஜ் பூஷன் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட குழுவின் முன்பு ஆஜராகி விளக்கமளித்த போது, குழு உறுப்பினர்கள் கேமரா ரெக்கார்டிங்கை ஆஃப் செய்து விட்டதாகவும் இதனால் தனது சாட்சியம் பதிவாகாமல் போயிருக்கலாம் எனவும் புகாரில் ஒரு வீராங்கனை குறிப்பிட்டுள்ளார்.