modi
modi X
இந்தியா

“10 ஆண்டு ஆட்சி வெறும் ட்ரெய்லர் மட்டுமே; இன்னும் இருக்கு”- ANI பேட்டியில் பிரதமர் மோடி பேசியதுஎன்ன?

PT WEB

2024 மக்களவைத்தேர்தல் நெருங்கிவரும் நிலையில் மீண்டும் வெற்றியை தக்கவைக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக செயல்பட்டுவருகிறது. பிரசாரங்கள் பரபரப்பாக நடந்துவரும் நிலையில், ANI செய்தி நிறுவனத்துடன் பேசிய மோடி 2047-ம் வருடத்திற்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மோடி பேசியது என்ன?

பிரத்யேக பேட்டியில் பேசிய பிரதமர் மோடி, “2019-ம் வருடத்தில் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த முதல் 100 நாட்களில் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டன. நாட்டின் வளர்ச்சிக்காக தொடர்ந்து பாடுபட விரும்புகிறேன், மோடியின் கேரன்டி என பேசப்படுவதற்கு காரணம் எங்கள் அரசு சொன்னதை செய்துகாட்டியுள்ளது. எங்களது அனைத்து வாக்குறுதிகளுக்கும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன். நான் பாரதமாதாவின் மகனாகவே என்னை உணர்கிறேன், மக்களும் அவ்வாறே என்னை பார்க்கின்றனர், நாட்டுக்கு சேவை செய்வதே எனது கடமை” என பேசினார்.

modi

தொடர்ந்து பேசிய அவர், “அயோத்தி ராமர் ஆலய விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டிருக்க வேண்டும். வாக்குவங்கி அரசியலால் அயோத்தி ஆலய விழாவை எதிர்க்கட்சியினர் புறக்கணித்திருக்கக் கூடாது. இதன்மூலம் எதிர்க்கட்சிகள் வெறுப்பு அரசியல் செய்வது உறுதியாகியுள்ளது, இவ்வளவு வெறுப்பு கூடாது” என்று பேசினார்.

திமுகவுக்கு எதிராக மக்கள் கோவத்தில் உள்ளனர்..

தமிழ்நாடு அரசியல் குறித்து பேசிய மோடி, “ஜனசங்க காலத்திலிருந்து தமிழ்நாட்டில் நாங்கள் பணிபுரிந்து வருகிறோம். தமிழ்நாட்டு மக்கள் தற்போது பிற மாநிலங்களில் பாஜக அரசு சிறப்பாக பணிபுரிவதை கவனித்துள்ளனர். ஏமாற்றத்தின் காரணமாக தமிழ்நாடு மக்கள் திமுகவுக்கு எதிராக கோபத்தில் உள்ளனர். இந்தக் கோபம் பாஜக ஆதரவு அலையாக மாறி வருகிறது.

modi

அண்ணாமலை ஒரு இளம் தலைவர். அரசு பணியை உதறிவிட்டு அரசியலில் மக்கள் பணிக்காக களம் இறங்கியுள்ளார். திமுக சனாதன தர்மத்துக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகிறது. சனாதன தர்மத்துக்கு எதிராக விஷத்தை கக்கும் கட்சியுடன் காங்கிரஸ் ஏன் கூட்டணி வைத்துள்ளது என புரியவில்லை. பாரதம் ஒரே நாடு, அதில் தெற்கு-வடக்கு வித்தியாசங்கள் பாராட்டுவது அறியாமை. நாட்டின் பன்முகத்தன்மையை கொண்டாட வேண்டும்” என்று கூறினார்.

தேர்தல் பத்திரம் குறித்து..

தேர்தல் பத்திரங்களால் யார் எந்த கட்சிக்கு நன்கொடை அளித்தார்கள் என்பது தெரியவந்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை மேம்படுத்த வாய்ப்பு உண்டு என்பதை நான் மறுக்கவில்லை. புலனாய்வு வளையத்துக்குள் இருந்த நிறுவனங்கள் வாங்கிய தேர்தல் பத்திரங்களில் 63% எதிர்க்கட்சிகளுக்கு கிடைத்தன. இந்த நிறுவனங்கள் வழங்கிய நன்கொடையில் 37% மட்டுமே பாஜகவுக்கு கிடைத்தது. இப்படிப்பட்ட சூழலில் எதிர்க்கட்சிகள் எப்படி எங்களை குற்றம் சாட்ட முடியும்.

அமலாக்கத்துறை மூலம் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்கிற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்குகளில் மூன்று சதவீதம் மட்டுமே அரசியல் தலைவர்கள் தொடர்புடையது என்று கூறினார். முடிவில் 2047-ம் வருடத்திற்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாக உருவாக்க வேண்டும்” என தெரிவித்தார்.