இந்தியா

பிரதமர் மோடிக்கு கமல் எழுதிய கடிதம் சொல்ல வருவது என்ன..?

webteam

பிரதமர் மோடிக்கு கமல் எழுதிய கடிதம் குறித்து பத்திரிகையாளர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது குறித்து தெரிய பத்திரிகையாளர்கள் சிலரிடம் பேசினோம்.


கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதையடுத்து, கடந்த ஏப்ரல் 3-ஆம் தேதி நாட்டு மக்களிடம் பேசிய பிரதமர் மோடி மக்கள் அனைவரும் நமது ஒற்றுமையை பறை சாற்றும் வகையில், 5-ம் தேதி இரவு 9 மணியில் இருந்து 9:09 மணி வரை மின் விளக்குகளை அணைத்து விட்டு அகல் விளக்குகளை ஏற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார். அவர் சொன்னபடியே மக்கள் அனைவரும் கடந்த 5-ஆம் தேதி அகல் விளக்குகளை ஏற்றினர். இதற்கு வழக்கம்போல் சமூக வலைதளங்களில் ஆதரவும் எதிர்ப்பும் சேர்ந்தே வந்தது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரும் நடிகருமான கமல், மோடியின் பேச்சு குறித்து அவருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில் “ பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது செய்யப்பட்ட மிகப்பெரிய தவறு, ஊரடங்கு உத்தரவின் போதும் நடந்துள்ளது என்றும் இந்த இரண்டு நெருக்கடியான காலங்களில் பாதிக்கப்பட்டது ஏழை மக்கள் தான் எனவும் கூறியிருந்தார்.

மேலும் விளக்கு ஒளி ஏற்றுவது போன்ற உளவியல் ரீதியான சிகிச்சைகள் பால்கனியில் இருக்கும் மக்களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம் என்றும், பால்கனிகள் எண்ணெய் விளக்குகளால் ஒளிரும் அதேநேரத்தில், அடுத்தவேளை ரொட்டிக்கு எண்ணெய் இல்லாமல் போராடும் ஏழை மக்கள் நிலையை ஏன் நினைக்கத் தவறுகிறீர்கள் எனவும் குறிப்பிட்டு இருந்தார்.

கமல் எழுதிய கடிதத்திற்கு பலரும் தங்களது ஆதரவு கருத்துகளை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்திருந்தனர். இதுகுறித்து பத்திரிகையாளர்கள் சுமந்த் சி ராமன், வெங்கடேசன் மற்றும் தராசு சியாம் ஆகியோரை தொடர்பு கொண்டு பேசினோம்.

சுமந்த் சி ராமன் கூறும்போது “ கமல் கூறியதில் ஒரு கருத்து ஏற்புடையது. அது என்னவென்றால் எந்த ஒரு முன் அறிவிப்பும் இன்றி துரித நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் அமைப்பு சாரா தொழிலாளார்களுக்கு ஏற்பட்ட பாதிப்பின் பிரதிபிம்பமே மக்கள் கிலோமீட்டர் கணக்கில் நடைபாதையாகவே அவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்றது.

விளக்கு ஏற்றுதல் விஷயத்தை பொருத்தவரை, முதலில் கொரோனாவால் மக்கள் அனைவரும் சோர்ந்து காணப்படுகின்றனர். அவர்களை இந்த நேரத்தில் பிரதமர் விளக்கு ஏற்ற சொன்னதில் தவறில்லை. ஆனால் மக்களின் அத்தியாவசிய தேவைகளான மருந்துகள், மருத்துமனைக்கு தேவையான உதவிகள் என அனைத்தையும் செய்து விட்டு இதனை செய்திருந்தால் இந்த விஷயம் சரியாக இருந்திருக்கும். ஆனால் அதில் கவனத்தை தவற விட்டு விட்டு இதனை செய்ய சொல்வது சரியானது இல்லை, அதுகுறித்து கமல் குறிப்பிட்டதை நான் வரவேற்கிறேன்” என்றார்.


பத்திரிகையாளர் ஷியாம் கூறும் போது “ இப்படி ஒரு கடினமான சூழ்நிலையில் அரசை குற்றம்சாட்டுவதில் அர்த்தம் இல்லை. முதலில் கிராமங்களுக்கு கமல் சென்றாரா என்பதே எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் கமல் எழுப்பும் கேள்வியை கிராமங்களே எழுப்பவில்லை. காரணம் ஒவ்வொரு மாநிலங்களும் மக்களுக்குத் தேவையானதை சிறப்பாகத்தான் செய்து கொண்டு வருகிறது.


அவர்களின் கவலை ஒன்றே ஒன்றுதான், அது அவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதே. சில இடங்களில் மக்கள் நடைபாதையாக நடந்து வந்தது அவசியமில்லாதது. விளக்கு ஏற்றுதல் விஷயத்தை பொருத்தவரை அது ஒரு ஒற்றுமையின் குறியீடு அவ்வளவே. சோர்ந்துபோன இந்த நேரத்தில், விளக்கு ஏற்றியது உற்சாகம் அளிக்கக்கூடிய விஷயமாக அமைந்தது. ஆகவே கமல் பேசிய இந்த விஷயம் இந்த நேரத்தில் தேவையில்லாது” என்றார்.


இது குறித்து பத்திரிகையாளர் ஆர்.வெங்கடேஷ் கூறும்போது “  முதலில், கமல் வைக்கும் குற்றச்சாட்டுக்கள் புதிதானவை அல்ல. மற்ற பேரிடர் மாதிரியல்ல கொரோனா. இதுவரை யாரும் சந்தித்திராத புதிய நோய். ஒவ்வொரு நாடும், இதன் கோரப்பிடியை பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இருந்துதான் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கின்றன. இதற்கு சரியான மருத்துவ அணுகுமுறை இதுதான் என்று எந்த ஸ்டாண்டர்ட் ஆபரேட்டிங் முறையும் இல்லை. ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு மருத்துவக் குழுவும் நோயை எதிர்கொண்டபடியே, பாடங்கள் படித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஊரடங்கு என்பதும் அப்படிப்பட்ட படிப்பினை தான். இதில் வெறும் நான்கே மணிநேரம் தான் கொடுக்கப்பட்டது. முன்பே திட்டமிட்டிருக்க வேண்டும். புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றி யோசித்திருக்க வேண்டாமா என்றெல்லாம் பேசுவது, கேட்பதற்கு புரட்சிகரமாகத் தோன்றலாம். ஆனால், யதார்த்தம் அதைவிடப் பெரியது. அதைத்தான் மத்திய அரசு செய்துள்ளது. 

கமலின் கோபத்தை நான் கொச்சைப்படுத்த விரும்பவில்லை. ஆனால், கொரோனா தடுப்பு முயற்சிகளில், தன்னுடைய நடவடிக்கைகளின் மூலம், மோடி ஒரு ராஜதந்திரியாக பரிணமித்து விடுவாரோ என்ற அச்சம் பல அரசியல்வாதிகளுக்கு இருப்பதைப் போன்றே கமலுக்கு ஏற்பட்டிருக்கிறது. கொரோனா நேரத்திலேயே மோடியை எதிர்த்து பேசிய முதல் அரசியல்வாதி என்ற பெருமையைக் கமலை பெற விரும்பினார். அதைப் பெற்றும் விட்டார். அதற்கு மேல் அவருடைய விமர்சனங்களில் ஆக்கப்பூர்வ ஆலோசனைகளோ, அணுகுமுறையோ ஒரு துளியும் இல்லை"  என்றார்.