நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், அடுத்த மாதம் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தொடரில், 16 மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டு உள்ளது.
இதில் முக்கியமாக, முதல் வாரத்திற்குள், வக்ஃப் திருத்த மசோதா தொடர்பான அறிக்கையை நாடாளுமன்றக் கூட்டுக்குழு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும் வக்ஃப் சொத்துகளை ஒழுங்குப்படுத்த கடந்த கூட்டத்தொடரில் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பாதுகாப்புத்துறை, ரயில்வேக்கு அடுத்தபடியாக அதிகமான சொத்துகளை வைத்துள்ளதாகக் கூறப்படும் வக்ஃபு வாரியத்தில் செயல்திறனை மேம்படுத்தவும், வாரியம் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதும் அவசியம் என கருதி மத்திய அரசு இந்த மசோதாவைக் கொண்டுவந்தது.
புதிய விதிமுறைகள் பலவும் இதில் சேர்க்கப்பட்டிருந்தது. எதிர்க்கட்சிகளால் கடும் எதிர்ப்பைச் சந்தித்த இந்த மசோதா, நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த குழு, மசோதா தொடர்பான அறிக்கையை குளிர்கால கூட்டத்தொடரில் முதல் வாரத்தின் கடைசி நாளில் சமர்ப்பிக்க வேண்டியது ஆகும். அதன்படி இந்த வாரமே அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தெரிகிறது.
மேலும், தேசியக் கூட்டுறவு பல்கலைக்கழகம் அமைக்க வழிவகை செய்யும் மசோதா உட்பட புதிதாக 5 மசோதாக்களை அறிமுகம் செய்து நிறைவேற்ற மத்திய அரசு பட்டியலிட்டுள்ளது.
இவற்றைத் தவிர, பஞ்சாப் நீதிமன்றங்கள் (திருத்தம்) மசோதா, வணிகக் கப்பல் மசோதா, கடலோரக் கப்பல்கள் மசோதா, இந்திய துறைமுகங்கள் மசோதா உள்ளிட்ட மசோதாக்களும் நிறைவேற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. 2024-25-ஆம் நிதியாண்டுக்கான துணை மானிய கோரிக்கைகளின் முதல் பகுதியும் தாக்கல் செய்யப்பட்டு விவாதித்து நிறைவேற்றவும் பட்டியலிடப்பட்டு உள்ளது.
இவற்றில் 10 மசோதாக்கள் நிலுவையில் உள்ள மசோதாக்கள் ஆகும். அதேநேரத்தில், ’ஒரே நாடு, ஒரே தேர்தல்’ திட்டம் தொடர்பான மசோதாக்கள் எதுவும் இந்தக் கூட்டத்தொடரில் பட்டியலிடப்படவில்லை.
முன்னதாக, இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில், அதானி விவகாரத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் கோஷமிட்டன. அவையை ஒத்திவைத்துவிட்டு அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க ஏற்கெனவே கொடுத்திருந்த நோட்டீஸைக் குறிப்பிட்டு அனுமதி கோரினர். ஆனால் அவைத் தலைவர் ஓம் பிர்லா அத்தகைய விவாதங்களுக்கு அனுமதி அளிக்கவில்லை.
இந்த நிலையில், தொடர் அமளி காரணமாக அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டதுஇதேபோல், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மாநிலங்களவையும் இன்றைக்கு நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. அதானி விவகாரத்தில் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.