மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனப் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த அஸ்வினி குமார் உபாத்யாயா, டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், நாட்டில் குற்றச்செயல்கள் அதிகரிப்பு, வேலைவாய்ப்பின்மை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மக்கள் தொகை அதிகரிப்பே காரணம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. எனவே, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த நீதிபதி வெங்கடாச்சலய்யா குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த ஆணையிடுமாறு கோரப்பட்டிருந்தது.
அரசு வேலைகள் மற்றும் மானியங்கள் வழங்குவதில் 2 குழந்தைகள் மட்டும் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்க உத்தரவிட வேண்டுமென்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனு தலைமை நீதிபதி ராஜேந்திர மேனன், நீதிபதி பிரிஜேஷ் செதி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுகுறித்து பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறும் அவர்கள் ஆணையிட்டனர்.