கல்யாண் பானர்ஜி, மஹுவா மொய்த்ரா எக்ஸ் தளம்
இந்தியா

மஹுவா Vs கல்யாண் | ஒரே கட்சியின் எம்பிக்களிடையே வெடித்த மோதல்.. வார்த்தை போரால் சூடேறும் களம்!

மக்களவை தலைமை கொறடா பதவியை ராஜினாமா செய்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் கல்யாண் பானர்ஜி, மீண்டும் மஹுவா மீது தாக்குதலைத் தொடங்கியுள்ளார்.

Prakash J

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் உள்ள சக எம்பிக்களிடம் சமீபகாலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. அது வெளிப்படையாகவும் அரங்கேறி வருகிறது. குறிப்பாக, கல்யாண் பானர்ஜிக்கும் மஹூவா மொய்த்ராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

கல்யாண் பானர்ஜி, மஹ்வா மொய்த்ரா

கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி கடந்த ஜூன் 25-ஆம் தேதி இரவு ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் நடைபெற்ற இந்தச் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கல்யாண் பானர்ஜி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. ”ஒரு நண்பர் மற்றொரு நண்பரை பாலியல் வன்கொடுமை செய்தால், அவரின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும்? கல்லூரியில் போலீஸார் இருப்பார்களா” என அவர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது. கல்யாண் பானர்ஜியின் கருத்துகள் அவரது தனிப்பட்ட கருத்து எனத் தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் விலகிக்கொண்ட போதும், அவரது கருத்து குறித்து பதிவிட்ட மற்றொரு எம்.பியான மஹுவா மொய்த்ரா, “இந்தியாவில் பெண் வெறுப்பு கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் இக்கருத்திலிருந்து விலகுவது என்பது என்னவென்றால், இந்த அருவருப்பான கருத்துகளை யார் சொன்னாலும் நாங்கள் கண்டிக்கிறோம் என்பதுதான்” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த கல்யாண் பானர்ஜி, “மஹுவா தனது தேனிலவுக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பி வந்து என்னுடன் சண்டையிடத் தொடங்கியுள்ளார். அவர் என்னைப் பெண்ணுக்கு எதிரானவர் என்று குற்றம்சாட்டுகிறார். அது என்ன? அவர் ஒருவரின் 40 வருட திருமணத்தை முறித்து 65 வயதுடைய நபரை மணந்தார். அந்தப் பெண்ணை அவர் காயப்படுத்தவில்லையா? நெறிமுறைகளை மீறியதற்காக நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு எம்.பி. எனக்கு உபதேசம் செய்கிறார். அவர்தான் மிகப்பெரிய பெண் விரோதி. தனது எதிர்காலத்தை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது மட்டுமே அவருக்குத் தெரியும்” என விமர்சித்திருந்தார்.

மஹுவா மொய்த்ரா

அதற்கு முன்பாக பாட்காஸ்ட் ஒன்றில் பேசிய மொய்த்ரா, “நீங்கள் பன்றியுடன் மல்யுத்தம் செய்வதில்லை. ஏனென்றால் பன்றி அதை விரும்புகிறது. நீங்கள் அழுக்காகிவிடுகிறீர்கள். இந்தியாவில் ஆழ்ந்த பெண் வெறுப்பு, பாலியல் விரக்தியடைந்த, ஒழுக்கக்கேடான ஆண்கள் உள்ளனர். மேலும் அவர்கள் அனைத்துக் கட்சிகளிலும் நாடாளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதித்துவத்தைக் கொண்டுள்ளனர்" என்றார். அதற்கு கல்யாண் பானர்ஜி, “சக எம்.பி.யை 'பன்றியுடன்' ஒப்பிடுவது போன்ற மனிதாபிமானமற்ற மொழியைப் பயன்படுத்துவது துரதிர்ஷ்டவசமானது மட்டுமல்ல, குடிமைச் சொற்பொழிவின் அடிப்படை விதிமுறைகளை ஆழமாக புறக்கணிப்பதையும் பிரதிபலிக்கிறது" எனத் தெரிவித்திருந்தார்.

இப்படி, இருவரும் மாறிமாறி ஒருவரையொருவர் விமர்சித்த உரையாடல் சமூக வலைதளங்களில் வைரலானது. இது கட்சிக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் மக்களவை தலைமை கொறடா பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி ராஜினாமா செய்துள்ளார். இதுகுறித்து அவர், ‘‘காணொளி வாயிலாக முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், கட்சியில் உள்ள எம்பிக்கள் இடையே ஒருங்கிணைப்பு இல்லை என்று கூறினார். இதில் பழி என் மீது விழுந்துள்ளது. இதனால் அந்த பதவியை ராஜினாமா செய்கிறேன்’’ எனத் தெரிவித்தார்.

இந்த நிலையில், ராஜினாமாவுக்குப் பிறகும் அவர் மஹுவா மொய்த்ராவை விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர், "2023ஆம் ஆண்டில், மொய்த்ரா நாடாளுமன்றத்தில் விமர்சனத்திற்கு உள்ளானபோது நான் அவருக்கு ஆதரவாக நின்றேன். ஆனால் இன்று, அவர் என்னை ஒரு பெண் வெறுப்பாளர் என்று அழைப்பதன் மூலம் அந்த ஆதரவை திருப்பிச் செலுத்துகிறார். அடிப்படை நன்றியுணர்வு இல்லாத ஒருவரைப் பாதுகாத்ததற்காக நான் தேசத்திடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மக்கள் அவரது வார்த்தைகளை அவை என்னவென்று பார்த்து அதற்கேற்ப தீர்ப்பளிக்கட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.