இழந்த செல்வாக்கைப் பெறத் துடிக்கும் காங்., கம்யூனிஸ்ட்டுகள் -அதிகாரத்தை தக்க வைக்கப் போராடும் திரிணாமூல் காங்கிரஸ் - காலூன்றத் துடிக்கும் பாஜக என மூன்று முனை போட்டியில் தகிக்கிறது மேற்குவங்கம்.
மேற்குவங்கத்தில் மொத்தமுள்ள 294 சட்டமன்ற தொகுதிகளுக்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து மேற்கு வங்கத்தை கைக்குள் வைத்திருந்த காங்கிரசின் கையை வீழ்த்தி 1977 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய கம்யூனிஸ்ட்டுகள் 35 ஆண்டுகாலம் இரும்புக் கோட்டையாக கட்டிக் காத்தார்கள். அந்த கோட்டையை தகர்த்த மம்தா பானர்ஜி, 2011 ஆம் ஆண்டு முதல் கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தின் அசைக்க முடியாத சக்தியாக திரிணாமுல் காங்கிரசை நிலை நிறுத்தியிருக்கிறார்.
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் மம்தா பானர்ஜி மீண்டும் மேற்கு வங்க முதல்வராக பதவி ஏற்பார் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. அந்த அளவுக்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், பாரதிய ஜனதா கட்சி என மும்முனை தாக்குதல்களை எதிர்கொண்டாலும் முன்னிலை வகிக்கிறார் மம்தா.
அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது நிரந்தர நண்பர்களும் கிடையாது என்பதற்கு ஏற்ப எதிரெதிர் துருவங்களாக இருந்த கம்யூனிஸ்டுகளும் காங்கிரசும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கின்றன. பலம் பொருந்திய பொது எதிரிகளான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சியை எதிர்ப்பதற்காக இந்த கூட்டணி அமைந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் பெற்ற 40 சதவிகித வாக்குகளை, நடப்பு சட்டமன்றத் தேர்தலில் அதிகரித்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா என மூத்தத் தலைவர்கள் சூறாவளி பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர்.
இந்த மும்முனை போட்டியில் யாரை தேர்ந்தெடுப்பது என்பதில் மேற்கு வங்க மக்கள் குழம்பி போய் இருப்பது என்னவோ உண்மைதான். இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் போவது யார்? யாருக்கு அதிக மீன்கள் கிடைக்கப் போகிறது என்பது தொக்கி நிற்கக்கூடிய கேள்வி.