கைது புதியதலைமுறை
இந்தியா

மேற்கு வங்கம் | இரவில் கொள்ளை.. பகலில் நட்பு.. 13 ஆண்டுகள் வசதியாய் வாழ்ந்த நபர் கைது!

13 ஆண்டுகளாக அண்டை வீட்டாரிடம் நட்பாகவும், இரவில் கொள்ளையராகவும் வாழ்ந்த அமித் தத்தா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Prakash J

மேற்கு வங்க மாநிலம் ஹவுராவைச் சேர்ந்தவர் அமித் தத்தா. 46 வயதான இவர், வசதியான வாழ்வு வாழ்வதற்காக இரவு நேரங்களில் திருட்டுத் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்காக பாகீரதி நதிபட்ஜ் பட்ஜிலிருந்து உலுபேரியா, ராஜாபூர், பவுரியா மற்றும் பஞ்ச்லா போன்ற வசதியான நகரங்களை கிழிந்த ஆடைகள் அணிந்து ஒரு குப்பை சேகரிப்பாளர் போன்று உளவு பார்த்து வந்துள்ளார். அதேநேரத்தில், பகல் பொழுதில் அண்டை வீட்டாருடன் நல்ல நட்புடனும் பழகிவந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜூன் 5ஆம் தேதி ஒரு வீட்டில் திருட முயன்றபோது போலீசாரால் அவர் கைது செய்யப்பட்டார். அப்போதைய விசாரணையில் அவரைப் பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. இரவில் கொள்ளையடிக்கும் பணத்தின் மூலம் ஆடம்பர பங்களா ஒன்றையே அவர் கட்டியுள்ளார்.

model image

அதில் டிரெட்மில், குளியல் தொட்டி பொருத்தப்பட்ட கழிப்பறை மற்றும் சரவிளக்குகள் என அனைத்தும் அம்சங்களையும் செய்துள்ளார். தவிர, பங்களாவுக்குப் பாதுகாப்பாக சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளார். அந்த பங்களாவிற்காக வருமான வரியும் கட்டியுள்ளார். தவிர, குடும்பத்துடன் இந்தோனேஷியாவிற்கு விடுமுறை கொண்டாடச் சென்றுள்ளார்.

முன்னதாக, ஒரு சாதாரண தகர கொட்டகையில் வாழ்ந்த அமித் தத்தாவிற்கு திடீரென இவ்வளவு சொத்துகள் வந்ததைத் தொடர்ந்து அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது. மேலும் அவருடைய நடவடிக்கைகளைக் கண்காணித்த போலீசார், அமித்தைத் தற்போது பொறிவைத்துப் பிடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, கடந்த பத்தாண்டுகளில் உலுபேரியா, நிம்திகி மற்றும் ராஜபூரில் தீர்க்கப்படாத பழைய திருட்டு வழக்குகளை அதிகாரிகள் தற்போது மீண்டும் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். அமித்தின் இந்த 13 ஆண்டுகால கொள்ளைச் சம்பவத்தைக் கண்டு அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்தில் திளைத்துள்ளனர்.