பிரதமர் மோடி மற்றும் தேசிய கீதம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் அதனை தவிர்த்த இளைஞரை 4 பேர் சரமாரியாக தாக்கிய சம்பவம் மேற்குவங்கத்தில் அரங்கேறியுள்ளது.
மேற்குவங்க மாநிலம் ஹவ்ராவில் இருந்து மால்டா மாவட்டத்திற்கு மே 14-ம் தேதி இளைஞர் ஒருவர் ரயிலில் பயணித்திருக்கிறார். அப்போது அதே ரயிலில் 4 பேர் ஒன்றாக ஏறி இருக்கின்றனர். அவர்கள் அந்த இளைஞர் அருகில் அமர்ந்திருக்கின்றனர். பின்னர் பிரதமர் மோடி, தேசிய கீதம் மற்றும் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குறித்து தொடர்ச்சியாக அவர்கள் அந்த இளைஞரிடம் கேள்வி எழுப்பியிருக்கின்றனர். ஆனால் அந்த இளைஞர் அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்காமல் தவிர்த்திருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்த 4 பேரும் இளைஞரை சரிமாரியாக தாக்கி அடித்திருக்கின்றனர். பின்னர் அந்தக் கும்பல் மற்றொரு ரயில் நிலையத்தின் கீழே இறங்கி சென்றுவிட்டது.
இதுதொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளார்.