மேற்கு வங்கத்தில் சிபிஐ மற்றும் அரசுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதல் தொடர்பாக எதிர்க்கட்சியினர் குரல் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் கொல்கத்தா காவல் ஆணையரை சிபிஐ விசாரிக்க சென்ற விவகாரம் இன்று நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது. மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ், தெலுங்கு தேச எம்.பிக்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அந்த அவை மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மாநிலங்களவையிலும் அனைத்து எதிர்க்கட்சியினரும் மேற்கு வங்க விவகாரம் தொடர்பாக குரல் எழுப்பி அமளி செய்தனர். இதனால் மாநிலங்களவையும் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
முன்னதாக, நேற்று சாரதா சிட் பண்ட் வழக்கு தொடர்பாக கொல்கத்தா காவல் ஆணையரை விசாரிக்கச்சென்ற சிபிஐ அதிகாரிகள், காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். அத்துடன் காவல்துறையினரால் சிறைபிடிக்கப்பட்ட அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இந்த விவகாரம் தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது. இதைத்தொடர்ந்து சிபிஐ விசாரிக்க வந்ததை எதிர்த்தும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்பதாகவும் கூறி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பேனர்ஜி தர்ணா போராட்டம் நடத்தினார்.