பேரணியில் மம்தா
பேரணியில் மம்தா ட்விட்டர்
இந்தியா

ராமர் பிரதிஷ்டை நாளில் பேரணி: அல்லா மீது சத்தியம் செய்து ஆவேசமாக பேசிய மம்தா பானர்ஜி - நடந்தது என்ன?

Prakash J

உத்தரப்பிரதேசத்தில் அமைந்துள்ள அயோத்தி ராமர் கோயில், நேற்று பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவ்விழாவில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர். மேலும், இவ்விழாக் கொண்டாட்டத்தை இந்து அமைப்பினர் தீபத் திருநாள் விழாவாகக் கொண்டாடி மகிழ்கின்றனர்.

இந்த நிலையில், அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்ற இதேநாளில் (நேற்று), அதைத் தவிர்க்கும் பொருட்டு, மேற்கு வங்க மாநிலத்தில் ’சர்வ் தர்மம் சம்பவ்' என்ற பெயரில் மத நல்லிணக்கப் பேரணியைத் தொடங்கிவைத்தார். முன்னதாக மேற்கு வங்கத்தின் புகழ்பெற்ற காளிகாட் கோயிலில் தரிசனம் செய்து, அவர் இந்தப் பேரணியை தொடங்கினார்.

இந்தச் பேரணியில் பல்வேறு மதங்களைச் சேர்ந்த அவரது கட்சியின் தலைவர்கள் பங்கேற்றனர். கோயில்கள், தேவாலயங்கள், குருத்துவாராக்கள் மற்றும் மசூதிகள் எனப் பல்வேறு ஆன்மிக தலங்களுக்குச் சென்று மம்தா பானர்ஜி வழிபாடு நடத்தினார். பின்னர், அவர் பார்க் சர்க்கஸ் மைதானத்தில் பேசிய அவர், ”ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.பாஜகவுக்கு ஆதரவு அளிக்காதீர்கள்; உதவி செய்யாதீர்கள்; ஓட்டும்போடாதீர்கள். நீங்கள் பாஜகவுக்கு உதவினால் என்னை விட்டுவிடுங்கள், மற்ற யாரும் உங்களை மன்னிக்கமாட்டார்கள். இது அல்லாவின் மீது சத்தியம் செய்துகூறுகிறேன்'' என்றார்.

அவருடைய இந்தப் பேச்சு இணையத்தில் வைரலாகி வருவதுடன், நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அயோத்தி, ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்லாமியர்களை மம்தா பானர்ஜி தூண்டிவிட்டிருப்பதாக, பலரும் அவர்மீது குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

இதையும் படிக்க: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுடன் சுற்றிய அசைவ உணவு சர்ச்சை... இணையத்தில் வைரலாகும் பதிவுகள்!